/indian-express-tamil/media/media_files/w6Z6tbiJwBddFJ2ERzSZ.jpg)
இந்தியா- இங்கிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், சேவைத் துறை மற்றும் ஜவுளி மற்றும் தோல் தொழில் போன்ற துறைகளில் குறிப்பிடத்தக்க நன்மைகளைப் பெறக்கூடும்.
India | England | Central Government: இந்தியா-இங்கிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கான (எஃப்.டி.ஏ) பேச்சுவார்த்தை கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், எஃப்.டி.ஏ பேச்சுவார்த்தையின் முன்னேற்றத்தை பிரதமர் அலுவலகம் (பி.எம்.ஓ) மதிப்பாய்வு செய்த நான்கு நாட்களுக்குப் பிறகு, இந்தியா-இங்கிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை (எஃப்.டி.ஏ) முடிப்பதற்கான இறுதி முயற்சியாக மத்திய வர்த்தகச் செயலர் சுனில் பார்த்வால் தலைமையிலான இந்தியக் குழு நேற்று செவ்வாய்க்கிழமை லண்டனுக்கு விரைந்துள்ளது.
2024 பொதுத் தேர்தலுக்கான தேதிகள் இன்னும் ஒரு மாதத்திற்குள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மத்திய வர்த்தகச் செயலர் தலைமையிலான குழுவின் வெளிநாட்டு பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. மேலும், இது தேர்தல் நடத்தை விதிகளை (எம்.சி.சி) தூண்டும் எனவும், இந்த ஒப்பந்தத்தை அறிவிக்கும் மத்திய அரசின் திறனைக் கட்டுப்படுத்தும் எனவும் தெரிகிறது.
இந்த மாத ஒப்பந்தத்தை முடிப்பதற்கான முயற்சிகள் இங்கிலாந்திலும் முக்கியத்துவம் பெறுகின்றன. ஏனெனில் இந்த ஆண்டு இறுதிக்குள் இங்கிலாந்தில் தேர்தல்கள் நடைபெற உள்ளன. இது தொடர்பான பரபரப்பான விவாதங்கள் நடந்து வருகின்றன. இதனிடையே, இங்கிலாந்து பிரதிநிதிகள் இந்த ஜனவரி மாதம் இந்தியாவிற்கு வருகை தந்திருந்தனர்.
“இந்தியா- இங்கிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் (எஃப்.டி.ஏ) கையெழுத்திடுவது இன்னும் சாத்தியம் மற்றும் வர்த்தக செயலாளரும் மற்ற பேச்சுவார்த்தையாளர்களும் இங்கிலாந்துக்கு செல்கிறார்கள். எஃப்.டி.ஏ தொடர்பாக கணிசமான முடிவு எடுக்கப்பட்டால், அது அறிவிக்கப்படலாம் மற்றும் பாஜக தலைமையிலான என்.டி.ஏ அரசாங்கம் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுவதால், எந்த திருத்தங்களும் இருக்க வாய்ப்பில்லை, ”என்று மத்திய அரசின் அதிகாரி ஒருவர் கூறினார்.
முன்னதாக, தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசிய இங்கிலாந்து அதிகாரி ஒருவர், அடுத்த மூன்று வாரங்களில் ஒப்பந்தம் கையெழுத்திடப்படலாம் என்றும், அதிக வரி வசூலுக்கு நாடு என்பதால் இந்தியா இன்னும் அதன் சந்தையை திறக்க வேண்டும் என்றும் இங்கிலாந்து ஏற்கனவே அதன் சந்தையை திறந்துள்ளது என்றும் தெரிவித்திருந்தார்.
இந்தியா- இங்கிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், சேவைத் துறை மற்றும் ஜவுளி மற்றும் தோல் தொழில் போன்ற துறைகளில் குறிப்பிடத்தக்க நன்மைகளைப் பெறக்கூடிய வளர்ந்த நாட்டுடனான முதல் முழு அளவிலான ஒப்பந்தமாக இருக்கும்.
சீனா தலைமையிலான-பிராந்திய விரிவான பொருளாதார கூட்டாண்மை (RCEP) போன்ற பிராந்திய வர்த்தக உடன்படிக்கைகளை நிறைவேற்றியிருப்பதாலும், அமெரிக்க தலைமையிலான இந்தோ-பசிபிக் பொருளாதாரக் கட்டமைப்பில் (ஐபிஇஎஃப்) சேர முடிவெடுக்காததாலும், தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது இந்தியாவுக்கு முக்கியமானது.
இதற்கிடையில், இந்தியாவின் போட்டியாளர்களான வியட்நாம் மற்றும் பிற தெற்காசிய நாடுகள் பல தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களில் மற்றும் பிராந்திய வர்த்தக ஒப்பந்தங்களுடன் உலகளாவிய விநியோகச் சங்கிலியில் தங்களை இணைத்துக் கொண்டுவிட்டன. கொரோனா தொற்றுபரவலுக்கு பிந்தைய வியட்நாம் சீனாவிலிருந்து விலகிச் செல்லும் அதிக முதலீடுகளை ஈர்த்து வருகிறது.
அதிகரித்து வரும் புலம்பெயர்ந்தோருக்கு எதிரான நிலைப்பாட்டுடன் இங்கிலாந்தில் அரசியல் சூழல் சூடுபிடித்துள்ளது. இதேபோல் அதிக வட்டி விகிதங்கள் மற்றும் செலவினக் குறைப்புகளுக்கு மத்தியில் இங்கிலாந்தின் பொருளாதாரமும் மந்தநிலையில் மூழ்கியுள்ளது. அதனால், இந்தியா தனது சேவைத் துறை பணியாளர்களுக்கான அணுகலை தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் நாடியுள்ளது.
உலகிலேயே அதிக இறக்குமதி வரி விகிதங்களில் ஒன்றாக இந்தியா இருப்பதால், இந்தியாவின் கட்டண ஆட்சி வர்த்தக நாடுகளுக்கு கவலையாக உள்ளது. இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் சராசரி வரி 4.2 சதவீதமாக இருக்கிறது. அதேவேளையில், இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இந்தியாவில் சராசரியாக 14.6 சதவீத வரி விதிக்கப்படுகிறது.
மற்ற பொருட்களுடன் கார்கள் மற்றும் விஸ்கி மீதான வரியைக் குறைக்குமாறு இங்கிலாந்து இந்தியாவைக் கேட்டுக் கொண்டாலும், இங்கிலாந்தில் உள்ள தனது சேவைத் துறை பணியாளர்களுக்கு சிறந்த அணுகலை இந்தியா நாடியுள்ளது. கார்கள் மற்றும் விஸ்கி பற்றிய பேச்சுவார்த்தைகள் சர்ச்சைக்குரியவை. ஏனெனில் இந்திய தொழில்துறை இங்கிலாந்து சந்தையில் அதிக அணுகலைக் கோருகிறது.
இந்திய விஸ்கி உற்பத்தியாளர்கள், இங்கிலாந்து தனது மூன்று ஆண்டு காலக்கெடு விதியை எளிதாக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இது அவர்களுக்கு தடையாக செயல்படுகிறது. மேலும், இந்தியா ஆட்டோமொபைல் துறையில், குறிப்பாக மின்சார வாகனம் (EV) பிரிவில் வரிச் சலுகைகளை எதிர்பார்க்கிறது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Indian team flies to London to seal FTA before poll code kicks in
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.