தெற்கு குவைத்தில் உள்ள மங்காஃப் நகரில் தொழிலாளர்கள் வசிக்கும் கட்டிடத்தில் புதன்கிழமை (ஜூன் 12, 2024) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் பல்வேறு இந்தியர்கள் உட்பட குறைந்தது 41 பேர் உயிரிழந்தனர். மேலும், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கட்டிடத்தில் கிட்டத்தட்ட 160 பேர் வசித்ததாக கூறப்படுகிறது.
உள்ளூர் நேரப்படி காலை 6:00 மணிக்கு (0300 GMT) இந்தத் தீ விபத்து நடந்ததாக அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, மேஜர் ஜெனரல் ஈத் ரஷீத் ஹமாத், “குவைத்தின் தெற்கு அஹ்மதி கவர்னரேட்டில் உள்ள மங்காஃப் பகுதியில் உள்ள ஆறு மாடி கட்டிடத்தில் உள்ள சமையலறையில் தீ விபத்து ஏற்பட்டது. தீயினால் 43 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்” என்றார்.
இந்தச் சம்பவத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “குவைத் நகரில் ஏற்பட்ட தீ விபத்து வருத்தமளிக்கிறது. எனது எண்ணங்கள் நெருங்கிய மற்றும் அன்பானவர்களை இழந்த அனைவருடனும் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அங்குள்ள அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
கிர்த்தி வர்தன் சிங் குவைத் செல்கிறார்
வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், ட்விட்டர் எக்ஸில் ஒரு பதிவில், 'பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின்படி, தீ விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உதவுவதற்கும், உள்ளூர் அதிகாரிகளுடன் ஒருங்கிணைக்கவும், வெளியுறவுத் துறை இணை அமைச்சர் கிர்த்தி வர்தன் சிங், அவசரமாக குவைத் செல்கிறார். இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் இறந்தவர்களின் சடலங்களை இந்தியா கொண்டுவர விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
ஆங்கிலத்தில் வாசிக்க : Kuwait Building Fire Live Updates: Indians among 41 killed; PM Modi, Jaishankar condole deaths
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“