கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில், லண்டனை படிப்பதற்காக தேர்வு செய்யும் இந்தியர்களின் எண்ணிக்கை 20% அதிகரித்துள்ளது. இந்த அதிகாரப்பூர்வ தகவல் நேற்று வெளியானது.
அதாவது 2017-2018-ம் கல்வியாண்டில் மொத்தம் 5,455 மாணவர்கள் லண்டனில் உள்ள பல்கலைக்கழகங்களில் படித்துள்ளனர். இதற்கு முந்தைய ஆண்டில், 4,545 பேர் படித்திருந்தனர்.
அதன்படி லண்டனில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் எண்ணிக்கைப் பட்டியலில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது.
21,350 மாணவர்களுடன் சீனா முதலிடத்திலும், அமெரிக்கா 7,105 மாணவர்களுடன் இரண்டாம் இடத்திலும், 5,770 மாணவர்களுடன் இத்தாலி மூன்றாமிடத்திலும் உள்ளது.
இந்தியாவைப் போல, லண்டனில் படிக்கும் சீன மாணவர்களும் 20% அதிகரித்துள்ளனர்.
இதைப்பற்றி, ”இந்த புள்ளி விபரங்கள் உலகெங்கிலும், திறமைக்கு இடம் கொடுக்க லண்டன் தயாராக இருப்பதைக் காட்டுகிறது. மற்ற நாடுகளைக் காட்டிலும் இங்கு உலகத் தரம் வாய்ந்த பல கல்வி நிலையங்கள் உள்ளன. மாணவர்கள் தங்களது திறனை வளர்த்துக் கொள்ளவும், இலக்கை அடையவும் லண்டனை தேர்ந்தெடுப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்கிறார்” லண்டனின் துணை வர்த்தக மேயர் ராஜேஷ் அகர்வால்.