Dollar dreams, dignity of labour: மெக்ஸிகோவால் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு பட்டியலிடப்பட்ட விமானம் வெள்ளிக்கிழமை, முதன்முறையாக 311 இந்தியர்களை (அவர்களில் பெரும்பாலும் பஞ்சாபியர்கள்) 73 மெக்ஸிகன் அதிகாரிகளுடன் புதுடில்லிக்கு அழைத்து வந்தது. அவர்கள் அமெரிக்கா - மெக்ஸிகோ எல்லை வழியாக சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைய முயன்றதற்காக நாடு கடத்தப்பட்டனர். மெக்ஸிகோ எல்லையிலிருந்து அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைவதை நிறுத்துமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்ததும், அமெரிக்கா ஜூலை மாத நடுப்பகுதியில் புகலிட பாதுகாப்பை கடினமாக்கும் புதிய கடுமையான குடியேற்ற விதிகளை நிறைவேற்றியது. இந்த இளைஞர்களில் பெரும்பாலோர் சமீபத்தில் மெக்சிகோவை அடைந்தனர். இது போல, ஏராளமான பஞ்சாபியர்கள் மெக்ஸிகோ வழியாக தங்கள் கனவு நாட்டில் தரையிறங்க முயற்சிக்கின்றனர். அது ஏன் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் விளக்குகிறது:
பஞ்சாபிலிருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைய மெக்சிகோ எல்லையை ஏன் தேர்வு செய்கிறார்கள்?
மெக்ஸிகோ அமெரிக்காவுடன் 4,000 கி.மீ நீளமுள்ள எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. இங்கிருந்து அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு வாயில்கள் அல்லது வேலிகள் வழியாக உள்ளன. சில மெக்ஸிகோ அதிகாரிகள் சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு உதவ முகவர்களுடன் இணைகிறார்கள். ஒவ்வொரு மாதமும் சராசரியாக 100 பஞ்சாபியர்கள் மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவிற்குள் நுழைகிறார்கள்.
மெக்சிகன் அதிகாரிகள் இப்போது ஏன் கடுமையாக நடந்துகொள்கிறார்கள்?
மெக்ஸிகோ எல்லையில் இருந்து அமெரிக்காவிற்கு சட்டவிரோதமாக குடியேறுபவர்களின் நுழைவு நிறுத்தப்படாவிட்டால், அனைத்து மெக்சிகன் இறக்குமதிகளுக்கும் கட்டணம் விதிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஜூன் மாதம் மெக்சிகோவை அச்சுறுத்தினார். அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை மெக்சிகோவால் ஏற்க முடியவில்லை. உலகெங்கிலும் இருந்து வரும் சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் மீது டிரம்ப் மிகவும் கடுமையாகிவிட்டார். பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் உலகம் முழுவதிலுமிருந்து 6 லட்சத்துக்கும் மேற்பட்ட சட்டவிரோதமாக குடியேறியவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைந்தனர்.
சட்டவிரோத குடியேற்றத்தை சரிபார்க்க அமெரிக்க நிர்வாகத்தின் புதிய நடவடிக்கைகள் யாவை?
ஜூலை மாதம், டிரம்ப் நிர்வாகம் புதிய கடுமையான குடியேற்ற விதிகள் புகலிட பாதுகாப்பை கடினமாக்கியது. இந்த புதிய விதிகளின்படி, பல நாடுகளை கடந்து அமெரிக்காவிற்குள் நுழைந்து புகலிடம் கோரிய எந்தவொரு புலம்பெயர்ந்தவரும், புறப்படுகிற நாட்டில் விண்ணப்பித்து அங்கே நிராகரிப்பை எதிர்கொகொள்ளவில்லை என்றால் அவர் / அவள் தகுதி பெற மாட்டார்கள். எந்தவொரு சட்டவிரோதமாக குடியேறியவரும் அனைத்து புறப்படும் நாடுகளிலும் புகலிடம் கோர விண்ணப்பிக்க முடியாது என்பதால் இது ஒரு கடினமான பணியாகும். புதிய விதிகளின்படி, புகலிடம் கோருவோரின் வழக்கு நீதிமன்றத்திற்கு செல்லாது. குடியேற்ற அதிகாரி ஒருவர் அவர்களை நாடுகடத்துவது குறித்து முடிவெடுக்க முடியும்.
இந்த விதிகள் நடைமுறைக்கு வந்த பிறகும் பஞ்சாப் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்தவர்கள் மெக்சிகோவுக்குச் செல்கிறார்களா?
வெள்ளிக்கிழமை நாடு கடத்தப்பட்ட பல இளைஞர்கள் இந்த செய்தி விதிகள் நடைமுறைக்கு வந்த பின்னர் மெக்ஸிகோ வழியாக அமெரிக்காவிற்கு தங்கள் பயணத்தைத் தொடங்கியதாக ஒப்புக்கொண்டனர். புதிய விதிமுறைகளை மீறி அங்கு பாதுகாப்பாக தரையிறங்குவதை தங்கள் முகவர்கள் உறுதிப்படுத்தியதாக அவர்கள் கூறினர். மேலும் 250 பஞ்சாபியர்கள் தற்போது மெக்சிகோவில் உள்ளனர் என்றும் ஒவ்வொரு மாதமும் கிட்டத்தட்ட 100 முதல் 200 குழுக்கள் மெக்சிகோவை அடைகின்றன என்றும் அவர்கள் கூறினர்.
அவர்கள் ஏன் தொடர்ந்து இந்த ரிஸ்க் எடுக்கிறார்கள்?
நாடு கடத்தப்பட்ட இளைஞர்களில் ஒருவர், சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குச் சென்று, ரூ .50 லட்சம் வரை செலவு செய்து ஒருவரின் உயிரைப் பணயம் வைப்பது ஒரு வாய்ப்புக்கான செலவு என்று கூறினார். “ஒரு வருடம் அங்கே கழித்த பின்னர், நான் இந்த ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டேன். அந்த காலகட்டத்தில் நான் தொழிலாளர் வேலை செய்வதன் மூலம் ரூ .24 லட்சம் சம்பாதித்தேன்” என்று கபூர்தலா மாவட்டத்தில் உள்ள பெகோவால் நகரத்தைச் சேர்ந்த 27 வயதான இளைஞர் ஒருவர் கூறினார். அமெரிக்காவிற்குச் செல்ல 2017 டிசம்பரில் 22 லட்சம் ரூபாய் செலுத்தியதாகவும், அவரது நீதிமன்ற வழக்கு உட்பட அமெரிக்காவில் அவரது செலவுகள் போக ஒரு வருடத்தில் அவரது கடனில் பாதியை திருப்பிச் செலுத்தியதாக தெரிவித்தார். “நான் ரொம்ப படித்தவன் இல்லை. ஆனாலும் ஒரு வருட காலத்தில் அமெரிக்காவில் சுமார் 24 லட்சம் ரூபாய் சம்பாதித்தேன். கடின உழைப்பால் ஒரு வருடத்தில் ரூ.1 லட்சம் கூட சம்பாதிக்க முடியாது”என்று அவர் கூறினார்.மேலும், அவர் மீண்டும் அங்கு செல்ல முயற்சிப்பதாகக் கூறினார்.
“இங்கே உடல் உழைப்பு வேலைக்கு மரியாதை இல்லை. இங்கே ஒருவர் தொழிற்கல்வி படிப்புகளை படித்து முடித்த பிறகுதான் ரூ.10,000 முதல் ரூ.12,000 வரை மட்டுமே சம்பளம் கிடைக்கும். இதை வைத்துக்கொண்டு ஒருவர் எப்படி வாழ்க்கை நடத்த முடியும்? இதுவே அமெரிக்காவில் ஒருவர் ஒரே நாளில் எவ்வளவு சம்பாதிக்க முடியும் தெரியுமா?” என்று கபூர்தலா மாவட்டத்தில் உள்ள சுல்தான்பூர் லோதி வட்டத்தில் உள்ள தல்வண்டி சவுத்ரியன் கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு இளைஞர் கேட்கிறார்.
“அமெரிக்க வாழ்க்கை சிறந்தது. பாத்திரங்களை கழுவுபவர்களை கூட மக்கள் மதிக்கிறார்கள். இங்குள்ளவர்கள் உங்கள் வேலையின் நிலைக்கு ஏற்ப உங்களை நடத்துவார்கள்” என்று அவர் கூறினார்.
“என்னுடைய மகன் பி.டெக் முடித்துள்ளார். ஆனால், நான் அவரை அமெரிக்காவில் உள்ள என் சகோதரர் வீட்டுக்கு அனுப்ப விரும்புகிறேன். இல்லையெனில் போதைமருந்துகள் அவரை இங்கே சாப்பிட்டுவிடும்” ஜலந்தரைச் சேர்ந்த விவசாயி ஒருவர் கூறினார். தனது மகன் போதை மருந்துகளை எடுக்கத் தொடங்கினான் என்றும் ஆனால் சரியான நேரத்தில் அவனைக் காப்பாற்ற முடிந்தது என்றும் அவர் தெரிவித்தார்.
அமெரிக்காவில் முன்பு இருந்த விதிகள் என்ன?
புதிய விதிக்கு முன்னர், சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் புகலிடம் கோரி ஒரு விண்ணப்பத்தை அமெரிக்க எல்லை பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைப்பார்கள். பின்னர் அவர்களை ஒரு அகதி முகாம் அல்லது தடுப்புக்காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்வார்கள். அங்கு சட்டவிரோதமாக குடியேறியவர்கள் தஞ்சம் புகுந்த வழக்கை எதிர்கொள்ள நீதிமன்றத்தில் சட்ட ஆலோசகர்களை நியமிக்க வசதி உள்ளது. சில மாதங்கள் அங்கே கழித்தபின், அவர்களுடைய வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வரை அமெரிக்காவில் வாழ அனுமதி பெறுவார்கள். இந்த வழக்குகள் பல ஆண்டுகளாக நீதிமன்றங்களில் நடக்கின்றன. புலம்பெயர்ந்தோருக்கு அந்தக் காலகட்டத்தில் வேலை செய்ய உரிமை உண்டு.
2017 இல் ரூ.50 லட்சம் செலவழித்து மெக்ஸிகோ வழியாக அமெரிக்காவிற்குச் சென்ற தல்வாண்டி சவுத்ரியன் கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர், அமெரிக்க நீதிமன்றத்தில் தன்னுடைய புகலிட வழக்கு நிலுவையில் இருப்பதாகக் கூறினார். ஆனால், அவர் வேலை செய்கிறார். இரண்டு ஆண்டுகளில் தனது கடனை முழுவதையும் திருப்பிச் செலுத்தியுள்ளார். இப்போது நன்றாக சம்பாதித்து வருகிறார்.
நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?
பஞ்சாபிலிருந்து குடியேறுவது ஒரு இலாபகரமான மாற்றாக கருதப்படுகிறது. “அவர்களின் அனைத்து துயரங்களுக்கும் தீர்வு வெளிநாட்டில் இருப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள்” என்று கல்வியாளரும் ஓய்வுபெற்ற முதல்வருமான டாக்டர் சதீஷ் கபூர் கூறினார். மேலும் அவர் கூறுகையில், இதற்கு அவர்களைத் தூண்டுவது வறுமை அல்ல. மாறாக அவர்கள் பெரிய வீட்டைக் கொண்டிருப்பதால் அண்டை வீட்டாரை விட அதிகமாக சம்பாதிப்பது, பெரிய சொகுசு வாகனங்கள் வைத்திருப்பது, ஆடம்பரமான திருமணங்களை நடத்துவது, வைரங்கள் பதித்த கடிகாரங்கள் அணிவது, கைநிறைய தங்க வளையல்களை அணிவது ஆகியவை அவர்களின் இயல்பு என்றார். அதோடு, “பணம் சேர்ப்பது மக்களிடையே ஒரு போட்டியாக மாறியுள்ளது. இது முடிவில்லாதது” என்று அவர் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.