Advertisment

ரஷ்யா – உக்ரைன் போர்நிறுத்தம் உதவவில்லை; இந்தியர்களை வெளியேற்றுவதில் நீடிக்கும் சிக்கல்கள்

தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்த ரஷ்யா; தொடர்ந்து ஷெல் தாக்குதல்கள் நடப்பதாக கூறும் உக்ரைன்; இந்தியர்களை வெளியேற்றுவதில் சிக்கல் நீடிப்பதாக தூதரகம் தகவல்

author-image
WebDesk
New Update
ரஷ்யா – உக்ரைன் போர்நிறுத்தம் உதவவில்லை; இந்தியர்களை வெளியேற்றுவதில் நீடிக்கும் சிக்கல்கள்

Shubhajit Roy , Sourav Roy Barman

Advertisment

Russia-Ukraine tensions: Indians unable to use ceasefire routes, Government seeks safe corridor for students: ரஷ்யாவும் உக்ரைனும் சனிக்கிழமை போர்நிறுத்தத்தை அறிவித்தன. அவர்கள் அதை "அமைதியின் ஆட்சி" என்று அழைத்தனர். மேலும் பொதுமக்கள் மரியுபோல் மற்றும் வோல்னோவாகா நகரங்களை விட்டு வெளியேறுவதற்கான மனிதாபிமான வழித்தடங்களை திறந்தனர். ஆனால் கிழக்கு உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் இந்த வெளியேறும் வழிகளைப் பயன்படுத்த முடியவில்லை.

ரஷ்யர்கள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாகவும் மேலும் ஷெல் தாக்குதல்கள் தொடர்வதால் "பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்காக மனிதாபிமான வழித்தடங்களை திறக்க இயலாது" என்றும் உக்ரைன் கூறியது.

சில இந்தியர்கள் உக்ரைனின் மேற்கு எல்லையை நோக்கி மட்டுமே செல்ல முடிந்தது, ரஷ்யாவுடனான கிழக்கு எல்லையை நோக்கி அல்ல.

புது டெல்லியில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உக்ரைன் நிலைமை மற்றும் இந்தியர்களை வெளியேற்றும் செயல்முறை குறித்து ஆய்வு செய்ய கூட்டம் நடைபெற்றது.

வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறுகையில், உக்ரைனில் சுமி மற்றும் பிசோச்சினைத் தவிர மற்ற நகரங்களில் அதிகமான இந்தியர்கள் இல்லை என்றார்.

மேலும், "கடந்த சில நாட்களாக கணிசமான கவலைக்குரிய பகுதியாக இருந்த கார்கிவ் நகரை விட்டு ஏறக்குறைய அனைத்து இந்தியர்களும் வெளியேறியுள்ளனர்," என்றும் அவர் கூறினார்.

உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம், “பிசோச்சின் நகரத்திலிருந்து அனைத்து இந்திய குடிமக்களும் வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்களின் வெளியேற்ற பயணம் முழுவதும் மிஷன் அவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கும். அவர்களின் பாதுகாப்பு எப்போதும் எங்கள் முன்னுரிமையாக உள்ளது என்று கூறியது.

முன்னதாக, வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர், “அருகில் உள்ள பிசோச்சினில், சில மணிநேரங்களுக்கு முன்பு, வெளியேற்றப்பட வேண்டிய 289 க்கும் குறைவான மாணவர்கள் இருந்தனர். இன்றோடு அந்தப் பணியை முடித்துவிடுவோம் என்று நம்புகிறோம். அங்கிருந்து மாணவர்களுடன் ஏற்கனவே மூன்று பேருந்துகள் புறப்பட்டுவிட்டன. ஐந்து பஸ்களில், மீதமுள்ள மாணவர்களை நாங்கள் அனுப்ப முடியும். சில மணிநேரங்களில் அனைவரையும் வெளியேற்ற முடியும் என்று கூறினார்.

கடந்த 24 மணி நேரத்தில், 2,900 பேருடன் 15 விமானங்கள் இந்தியா வந்து சேர்ந்ததாக அரிந்தம் பாக்சி கூறினார். மேலும், ஆபரேஷன் கங்காவின் கீழ் இதுவரை 63 விமானங்களில் சுமார் 13,300 பேர் இந்தியா திரும்பியுள்ளனர். அடுத்த 24 மணி நேரத்தில், IAF விமானம் உட்பட 13 விமானங்கள் இந்தியர்களை வெளியேற்றுவதற்காக திட்டமிடப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.

வடகிழக்கு உக்ரைனில் உள்ள சுமியில் உள்ள மாணவர்களை இந்திய அரசாங்கம் அங்கேயே இருக்குமாறு கேட்டுக்கொண்டது.

“உக்ரைனில் உள்ள சுமியில் உள்ள இந்திய மாணவர்களைப் பற்றி நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம். நமது மாணவர்களுக்கு பாதுகாப்பான நடைபாதையை உருவாக்க உடனடியான போர்நிறுத்தத்திற்கு பல வழிகள் மூலம் ரஷ்ய மற்றும் உக்ரேனிய அரசாங்கங்களுக்கு கடுமையாக அழுத்தம் கொடுத்துள்ளோம். பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும், தங்குமிடங்களுக்குள் இருக்கவும் மற்றும் தேவையற்ற அபாயங்களைத் தவிர்க்கவும் நமது மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். அமைச்சகமும் நமது தூதரகங்களும் மாணவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளன,” என்று அரிந்தம் பாக்சி கூறினார்.

"ரஷ்யாவின் வடகிழக்கு எல்லையில் உள்ள சுமியில் இப்போது முக்கிய கவனம் செலுத்தப்படுகிறது. மாணவர்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கான பல்வேறு வாய்ப்புகளை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். ஆனால் அங்கு நடந்து வரும் ஷெல் தாக்குதல், வன்முறை மற்றும் போக்குவரத்து வசதிகள் இல்லாதது ஆகியவை முக்கிய சவாலாக உள்ளது. போக்குவரத்தை விட, அவர்கள் அச்சுறுத்தலுக்கு ஆளாகாத நிலையில் அவர்களை வெளியேற்றுவதற்கு பாதுகாப்பான வழியைக் கொண்டிருப்பது முக்கியம் என்று நான் நினைக்கிறேன். சாத்தியமான வெளியேற்றம் குறித்து சம்பந்தப்பட்ட அனைவருடனும் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம், ”என்று அவர் கூறினார்.

"எங்களுக்கான சிறந்த வழி ஒரு போர்நிறுத்தமாக இருக்கும் ... இது நமது மாணவர்களை வெளியேற்ற அனுமதிக்கும், மேலும் இது தொடர்பாக நாங்கள் ரஷ்ய மற்றும் உக்ரேனிய இரு தரப்பையும் வலுவாக அழுத்தி இந்த வகையான உள்ளூர் போர்நிறுத்தத்தை வலியுறுத்தி வருகிறோம். அது இன்னும் நடக்கவில்லை, ஆனால் நாங்கள் அதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம், ”என்று அவர் கூறினார்.

சுமியில் உள்ள மாணவர்களை வெளியேற்றுவது குறித்து அவர் கூறுகையில், “தெளிவாக இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வாய்ப்புகள் உள்ளன. அவை கிழக்கு அல்லது மேற்கு வழியாக வெளியேற்றுவது. நாம் ஒன்றை தவிர்த்து மற்றொன்றைத் தேர்ந்தெடுப்பதில்லை. இது அனைத்தும் போக்குவரத்து வாய்ப்பு, ஏற்பாடு செய்யக்கூடிய தளவாட ஏற்பாடுகள் ஆகியவற்றைப் பொறுத்தது. இந்த கட்டத்தில், துரதிர்ஷ்டவசமாக, எங்களிடம் பல வாய்ப்புகள் இல்லை, ஏனெனில் எங்கள் முதன்மைத் தேவை, நமது மாணவர்கள் தங்கள் வளாகங்களை விட்டு வெளியேறும்போது அவர்களுக்கு ஆபத்து இல்லாத பாதுகாப்பான பாதை இருக்க வேண்டும். சுமியின் நல்ல விஷயம் என்னவென்றால், அங்கு உள்ளவர்கள் இந்த விஷயத்தில் கவனம் செலுத்துகிறார்கள். ஓரிரு இடங்களில் ஒன்றாக இருக்கிறார்கள். அவர்களை வெளியேற்றுவது எளிதாக இருக்கும் ஆனால் இன்னும் சுமார் 700 இந்தியர்கள் உள்ளனர். அவர்களைப் பாதுகாப்பாக வெளியேற்றுவதே எங்களின் முதன்மையான விருப்பம். கிழக்கு (ரஷ்யா) அதை எளிதாக்கினால், சரி. தூரத்தைப் பொறுத்தவரை, கிழக்கு அநேகமாக மிக அருகில் இருக்கும், ஆனால் இரண்டு ராணுவ முகாம்கள் உள்ளது. போர் நிறுத்தம் ஏற்பட்டால் மேற்கு வேகமாக இருக்கும், ஏனெனில் கடக்க ஒரே ஒரு ராணுவ முகாம் மட்டுமே இருக்கும். களத்தில் எங்களிடம் செயல்பாட்டாளர்கள் உள்ளனர், அவர்கள் முடிவு செய்வார்கள்,” என்றார்.

இதையும் படியுங்கள்: தூதரகத்தின் வழிகாட்டுதலால் சிக்கல்… பசியில் தவிக்கும் 500 இந்தியர்கள்

உக்ரைனுக்கான இந்திய தூதர் பார்த்தா சத்பதியும் ட்விட்டரில் ஒரு செய்தியை வெளியிட்டார், சுமியில் உள்ள மாணவர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதை உறுதி செய்வதற்கான முயற்சிகளில் அரசாங்கம் "எந்தக் கல்லையும் மாற்றாது" என்று கூறினார்.

“கடந்த வாரத்தில், உக்ரைனில் இருந்து 10,000க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்களை வெளியேற்றியுள்ளோம். கார்கிவ் மற்றும் சுமியைத் தவிர, உக்ரைனின் மீதமுள்ள பகுதிகளில் இருந்து கிட்டத்தட்ட அனைத்து இந்தியர்களும் வெளியேற்றப்பட்டுள்ளனர். கார்கிவ் விஷயத்தில், கடுமையான ஷெல் தாக்குதல்களைக் கொண்ட ஒரு தீவிரமான போர் மண்டலமாக இருந்தபோதிலும், நமது குடிமக்களை வெளியேற்றுவதற்கான நிலையான முயற்சிகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். இந்த நோக்கத்தில், கடந்த இரண்டு நாட்களில் மட்டும், 500 க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்களை பிசோச்சினில் இருந்து வெளியேற்றியுள்ளோம், ”என்று தூதர் கூறினார்.

முன்னதாக, புது தில்லியில் உள்ள ரஷ்ய தூதரகம், மாஸ்கோ நேரப்படி காலை 10 மணிக்கு தொடங்கி, ரஷ்ய தரப்பு "போர்நிறுத்த ஆட்சியை" அறிவித்து, பொதுமக்கள் மரியுபோல் மற்றும் வோல்னோவாகாவை விட்டு வெளியேற மனிதாபிமான வழித்தடங்களைத் திறந்ததாகக் கூறியது.

இருப்பினும், உக்ரைன் வெளியுறவு அமைச்சகம், “எழுதப்பட்ட ஒப்பந்தங்களை மீறி, ரஷ்யா மரியுபோல், வோல்னோவாகா மற்றும் பிற உக்ரைன் நகரங்களில் ஏவுகணை மற்றும் வெடிகுண்டு தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகிறது. நடந்துகொண்டிருக்கும் ஷெல் தாக்குதல்களால், பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கும், மருந்துகளை விநியோகிப்பதற்கும், உணவு வழங்குவதற்கும் மனிதாபிமான வழித்தடங்களைத் திறக்க இயலாது.” என்று கூறியது.

மேலும், "மனிதாபிமான வழித்தடங்களைத் திறப்பது தொடர்பான ஒப்பந்தங்களில் ரஷ்யாவின் மொத்த மீறலை உடனடியாகக் கண்டிக்க சர்வதேச சமூகத்தைச் சேர்ந்த அரசுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளை நாங்கள் அழைக்கிறோம், மேலும் துப்பாக்கிச் சூட்டை நிறுத்த ரஷ்ய துருப்புக்களுக்கு உத்தரவிடுமாறு ரஷ்யாவை அழைக்கிறோம்," என்றும் அது கூறியது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India Ukraine Russia
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment