இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியாவின் குடியரசுத் தின விழா அணிவகுப்பில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் பயணத்தை ரத்து செய்தார். இங்கிலாந்து நாட்டில் உருமாறிய கோவிட் தொற்று காரணமாக இம்முடிவை அறிவித்தார்.
"பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்று காலை பிரதமர் மோடியுடன் பேசினார். தலைநகர் புதுடெல்லியில் நடைபெற உள்ள குடியரசுத் தின விழா அணிவகுப்பில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க முடியாத சூழலுக்கு வருத்தம் தெரிவித்தார்" என்று டவுனிங் தெரு செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
"இங்கிலாந்து நாட்டில் உருமாறிய கோவிட் நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு நேற்றிரவு புதிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இத்தகைய சூழலில், பிரதமர் இங்கிலாந்தில் இருப்பது முக்கியம் வாய்ந்தது,” என்று செய்தித் தொடர்பாளர் கூறினார்.
"பிரதமர் போரிஸ் ஜான்சன் 2021 ஆம் ஆண்டின் முதல் பாதியில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்ய விரும்புகிறார். 2021ம் ஆண்டு இங்கிலாந்து தலைமையில் நடக்கும் ஜி7 கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பதற்கு முன்னதாக இந்த சற்றுப்பயணம் அமையும்" என்று இங்கிலாந்து அரசாங்கம் கூறியது.
கொவிட் பாதிப்புக்கு பிந்தைய உலகில், இந்தியா-இங்கிலாந்து இடையேயான கூட்டுறவின் முக்கியத்துவத்தை இருநாட்டுத் தலைவர்களும் உணர்ந்துள்ளனர் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இங்கிலாந்து நாட்டில் இன்று முதல் அத்தியாவசியமற்ற கடைகள், பள்ளிகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் Astra Zeneca நிறுவனம் தயாரித்த கோவிட்-19 தடுப்பூசியை முதல் நாடாக இங்கிலாந்து விநியோகித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்தில் முதல் முறையாக கண்டறியப்பட்ட உருமாறிய கோவிட் தொற்று தற்போது பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி வருவதால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதாக போரிஸ் ஜான்சன் முன்னதாக தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil