சீனாவில் உள்ள சான்யா நகரில் இந்த ஆண்டுக்கான 67-வது உலக அழகி போட்டி நடைபெற்றது. பல சுற்றுகளாக நடைபெற்ற இந்த போட்டியின் இறுதிச் சுற்றில் இங்கிலாந்து, பிரான்ஸ், கென்யா, மெக்சிகோ, இந்தியா ஆகிய நாடுகளை சேர்ந்த 5 பெண்கள் இடம் பெற்றிருந்தனர்.
இந்த நிலையில், நேற்று நடைபெற்ற இறுதிச் சுற்றில் இந்தியாவை சேர்ந்த மனுஷி சில்லார் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டு, வெற்றி மகுடத்தை தட்டிச் சென்றார். அரியானா மாநிலத்தை சேர்ந்த மனுஷி சில்லார்(20) இந்த ஆண்டுக்கான இந்திய அழகியாகவும் தேர்வானார். தற்போது அவர் மருத்துவம் பயின்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
https://www.youtube.com/embed/lq_TnBy7EWk
கடந்த 2000-ம் ஆண்டு இந்தியாவை சேர்ந்த பிரியங்கா சோப்ரா உலக அழகியாக தேர்வானார். அதன் பிறகு 17 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியாவை சேர்ந்த மனுஷி சில்லார் உலக அழகியாக தேர்வாகி இந்தியாவுக்கு பெருமை தேடி தந்துள்ளார்.
உலக அழகி பட்டம் வென்ற மனுஷி சில்லாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி டுவிட்டரில் கூறுகையில், 'வாழ்த்துக்கள் மனுஷி சில்லார். உங்கள் சாதனைகளால் இந்தியா பெருமிதம் கொள்கிறது' என பதிவிட்டுள்ளார்.
இதேபோல், அரியானா முதல் மந்திரி மனோகர் லால் கட்டார், மராட்டிய மாநில முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் முக்கிய பிரபலங்கள் உலக அழகி மனுஷி சில்லாருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதற்கு முன்னர் இந்தியாவை சேர்ந்த ரெய்டா ஃபரியா(1966), ஐஸ்வர்யா ராய் (1994), டயானா ஹைடன்(1997), யுக்தா முகி(1999) பிரியங்கா சோப்ரா (2000 ) ஆகியோர் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.