இந்தியாவில் ஏழைகளின் எண்ணிக்கை கடந்த ஏழு ஆண்டுகளில் குறைந்துள்ளதாக நுகர்பொருள் சார்ந்த ஆய்வில் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் அதிக மக்கள் தொகை பெருக்கம், ஏழ்மைக்கு முக்கிய காரணமாக உள்ளது. இதனால், எழுத்தறிவின்மை, சுகாதார வசதி, நிதியாதாரம் குறைவு போன்றவை ஏற்படுகின்றன. அதிக மக்கள் தொகையால், தனிநபர் வருமான விகிதமும் குறைகிறது. ஆப்ரிக்க நாடுகளுக்கு நிகராக, ஏழைகள் அதிகளவில் உள்ள இந்திய மாநிலங்களாக, பீஹார், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம்,உ.பி.,சத்தீஸ்கர், ஒடிசா, ராஜஸ்தான், மேற்கு வங்கம் ஆகியவை உள்ளன.
இந்தியாவில் ஏழைகளின் எண்ணிக்கை குறைவு
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான, ஆஸ்திரியாவை சேர்ந்த, 'வேர்ல்ட் டேடா லேப்' என்ற நிறுவனம் சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தியது. அந்த ஆய்வில், வீடுகளில் நுகர்பொருள் பயன்பாடு அடிப்படைக் கொண்டு தகவல்கள் திரட்டப்பட்டது. அதில், ஏழைகள் எண்ணிக்கை, இந்தியாவில் சுமார் 5 கோடிக்கும் கீழ் சரிந்துள்ளதை அந்நிறுவனம் உறுதி செய்கிறது.
நடப்பாண்டு இறுதியில், இந்த எண்ணிக்கை, நான்கு கோடிக்கு கீழ் இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது என்று அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. உலகில் அதிக ஏழைகள் உள்ள நாடு என்று இந்தியா விமர்சிக்கப்பட்டு வரும் நிலை மாறி, அந்த இடத்தில் தற்போது, ஆப்ரிக்க நாடான நைஜீரியா இருக்கிறது.
உலக வங்கியின் வரயறைப்படி ஒரே ஒரு நாளில் ரூபாய் 135க்கு கீழ் இருக்கும் பணத்தில் வாழ்க்கை நடத்துபவர்களே ஏழைகள் என்று குறிப்பிடப்படுகிறது. நுகர்பொருள் பயன்பாடு அடிப்படையில், இந்த வரையறை கணிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் ஏழைகளின் எண்ணிக்கை கணக்கிடும்போது, 2011ல், இந்தியாவில், 26.8 கோடி ஏழைகள் இருந்தனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றது. கடந்த, 2004க்கு பின், மத்திய - மாநில அரசுகள் எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளால், மக்களின் வருவாய் அதிகரித்துள்ளதாகவும், இதனால், வறுமை குறைந்து வாழ்க்கைத் தரம் அதிகரிக்கத் துவங்கி உள்ளதாகவும், அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இந்தியாவில், 2011ம் ஆண்டில், 26.8 கோடி ஆக இருந்த ஏழைகள் எண்ணிக்கை, தற்போது, ஐந்து கோடிக்கு கீழ் குறைந்துள்ளது. ஜூன் மாதம் வெளியாகும், 2017 - 18ம் ஆண்டுக்கான நுகர்பொருள் பயன் பாட்டு தொகுப்பின் மூலம் இது உறுதி செய்யப் படும் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர்.
மேலும், கடந்த, 2004 - 05 முதல், இந்தியாவில், வறுமை கணிசமாக குறைந்து வருகிறது. ஊரக வேலை வாய்ப்புறுதி திட்டம் உள்ளிட்ட, மத்திய அரசின் திட்டங்களில் வழங்கப்படும் உதவித் தொகை, பயனாளர்களின் வங்கி கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இது போன்ற திட்டங்களால், உள்ளார்ந்த வளர்ச்சி அதிகரிக்கிறது என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.