உலகளவில் ஊழல் நிறைந்த நாடுகளில் இந்தியாவுக்கு 81வது இடம்!

இடம்பெற்றுள்ள 180 நாடுகளில், இந்தியா 81-வது இடத்தைப் பிடித்துள்ளது. ஆசிய-பசிபிக் நாடுகளில் ஊழலால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடு இந்தியா என எச்சரிக்கிறது.

உலக அளவில் ஊழல் நாடுகளின் பட்டியலில் இந்தியா 81-வது இடத்தைப் பிடித்துள்ளது.

அரசு-சாரா அமைப்பான டிரான்ஸ்பரன்சி இண்டர்நேஷனல், 2017-ஆம் ஆண்டில் ஊழல் நிறைந்த நாடுகளின் பட்டியலை வெளியிட்டது. இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள 180 நாடுகளில், இந்தியா 81-வது இடத்தைப் பிடித்துள்ளது. மேலும், ஆசிய-பசிபிக் நாடுகளில் ஊழலால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடு இந்தியா என அந்த ஆய்வறிக்கை எச்சரிக்கிறது.

கடந்த 2016-ஆம் ஆண்டு இதே அமைப்பு வெளியிட்ட 176 ஊழல் நிறைந்த நாடுகளில், இந்தியா 79வது இடத்தை வகித்தது. 2013 மற்றும் 2014-ஆம் ஆண்டுகளில் எழுந்த 2ஜி விவகாரம், நிலக்கரி முறைகேடு ஆகியவற்றால் இந்தியாவின் இடம் சரிந்ததாக அச்சமயம் தெரிவிக்கப்பட்டது.

இதில், பல்வேறு அமைப்புகளில் நிலவும் ஊழல் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அதற்கு 0-100 வரையில் மதிப்பீடு செய்யப்பட்டது. 0 என்பது மிகவும் ஊழல் நிலவுவதையும், 100 என்பது ஊழல் இல்லாததையும் குறிப்பிடுகிறது. இதில், 2016-2017-ஆம் ஆண்டில் இந்தியா 40 புள்ளிகளை பெற்றது.

அதிகபட்சமாக, நியூஸிலாந்து 89 மதிப்பெண்களையும், சிங்கப்பூர் 84 மதிப்பெண்களையும் பெற்றது. உலகிலேயே மிகவும் ஊழல் நிறைந்த நாடு என்ற இடத்தை சோமாலியா பிடித்துள்ளது. சராசரி மதிப்பெண் 43 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா 40 புள்ளிகளையே பெற்றுள்ளது.

பல நாடுகளில் ஊழல் இன்னும் சக்திவாய்ந்ததாக உள்ளதாக டிரான்ஸ்பரன்சி இண்டர்நேஷனல் தெரிவித்துள்ளது. பத்திரிக்கையாளர்கள், சமூக ஆர்வலர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், சட்ட வல்லுநர்கள், பாதுகாப்பு அமைப்பை சேர்ந்தவர்கள் கொலை செய்யப்படுவதும் கூட ஊழல் அதிகம் பரவ காரணமாக அமைவதாக அந்த அமைப்பு தெரிவிக்கிறது.

இதனால், இந்தியா, மாலத்தீவுகள், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அந்நாடுகளில் பத்திரிக்கையாளர்கள் கொலை செய்யப்படுதல், ஊடக சுதந்திரமின்மை ஆகியவை அதிகம் நிலவுவதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. ஊடகவியலாளர்களுக்கான பாதுகாப்பு அமைப்பின்படி, இந்த நாடுகளில் கடந்த ஆறு ஆண்டுகளில் 15 பத்திரிக்கையாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். 10-ல் 9 பத்திரிக்கையாளர்கள் கொல்லப்படும் நாடுகள், 45 அல்லது அதற்கு குறைவான மதிப்பெண்களையே பெற்றிருக்கின்றனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close