/indian-express-tamil/media/media_files/2025/06/23/indigo-2025-06-23-16-17-04.jpg)
இண்டிகோ ஊழியர் மீது சாதி ரீதியான தாக்குதல்; குற்றச்சாட்டை மறுக்கும் விமான நிறுவனம்!
இண்டிகோ விமான நிறுவனத்தின் ஊழியர் ஒருவர், நிறுவனத்தின் 3 மூத்த அதிகாரிகள் மீது சாதி அடிப்படையிலான துஷ்பிரயோகம் மற்றும் பணியிட பாகுபாடு காரணமாக கடுமையான கிரிமினல் புகார் அளித்துள்ளார். இந்த புகார் மே 21 அன்று கர்நாடகாவில் ஜீரோ எஃப்.ஐ.ஆர் ஆகப் பதிவு செய்யப்பட்டது. பின்னர், ஞாயிற்றுக்கிழமை குருகுராமில் உள்ள டி.எல்.எஃப்-1 காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.
பொதுவெளியில் உள்ள இந்த எஃப்.ஐ.ஆர்., கிரிமினல் தாக்குதல், மிரட்டல், பொது நோக்கத்துடன் செய்யப்பட்ட செயல்கள், தாழ்த்தப்பட்டோர்/பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை அவமானப்படுத்தும் நோக்குடன் வேண்டுமென்றே அவமதிப்பது அல்லது அச்சுறுத்துவது, மற்றும் துஷ்பிரயோகம்/சாதி அடிப்படையிலான அவமதிப்பு தொடர்பான பிரிவுகளை உள்ளடக்கியது.
இண்டிகோ விமான நிறுவன ஊழியர் அளித்த புகாரில், கடந்த ஏப்ரல் மாதம் குருகுராம் செக்டார் 24-ல் உள்ள எமார் கேபிடல் டவர் 2-ல் உள்ள இண்டிகோ அலுவலகத்தில் கூட்டத்திற்கு அவர் அழைக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். அந்தக் கூட்டத்தில், குற்றம் சாட்டப்பட்ட 3 இண்டிகோ அதிகாரிகள் முன்னிலையில், அந்த ஊழியர் "மற்றவர்கள் முன்னிலையில் அவமானகரமான மற்றும் இழிவான சாதி அடிப்படையிலான கருத்துக்களுக்கு" ஆளானதாகப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதல் தகவல் அறிக்கையின்படி (FIR), குற்றம் சாட்டப்பட்டவர்கள் புகார்தாரரின் சாதியைப் பற்றிய வெளிப்படையான குறிப்புகளைக் கூறி, "விமானம் ஓட்ட நீ தகுதியற்றவன், திரும்பிப் போய் செருப்பு தைக்கப் போ" மற்றும் "என் காலணியை நக்குவதற்கும் நீ தகுதியற்றவன்" போன்ற கருத்துகளைத் தெரிவித்ததாகக் கூறப்பட்டுள்ளது.
இண்டிகோ விமான நிறுவன ஊழியர் அளித்த புகாரில், தனது கண்ணியத்தை குறைக்கும் வகையிலும், சாதி அடையாளத்தின் அடிப்படையில் தன்னை அவமானப்படுத்தும் வகையிலும் இந்த கருத்து வேண்டுமென்றே கூறப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். மேலும், எஃப்.ஐ.ஆர்., இண்டிகோ நிறுவனத்தில் திட்டமிட்ட துன்புறுத்தல் மற்றும் பாகுபாடு தொடர்வதாக குற்றம்சாட்டுகிறது. "எனது சாதியின் காரணமாக நான் தொடர்ச்சியான துன்புறுத்தலை எதிர்கொண்டு வருகிறேன்... இந்தத் தொடர்ச்சியான பாகுபாட்டால் எனது மனநலன் மற்றும் வேலை பாதுகாப்பு குறித்து அஞ்சுகிறேன்," என்று எஃப்.ஐ.ஆரில் கூறப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் இண்டிகோ தலைமை நிர்வாக அதிகாரி (CEO), நெறிமுறைகள் குழுவிடம் (Ethics Committee) கொண்டு செல்லப்பட்டதாகவும், ஆனால் அநீதியை சரிசெய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மன்னிப்பு கேட்க ஏழு நாட்கள் அவகாசம் அளித்த பின்னரும், அவர்கள் அவ்வாறு செய்யாததால், ஒரு வழக்கறிஞர் மூலம் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இண்டிகோ விமான நிறுவனம் தங்கள் மீதான சாதிய பாகுபாடு குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. இதுகுறித்து இண்டிகோ செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், "இண்டிகோ எந்தவிதமான பாகுபாடு, துன்புறுத்தல் அல்லது பாரபட்சம் காட்டுவதற்கு எதிராகவும் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையை (zero-tolerance policy) கடைபிடிக்கிறது. மரியாதைக்குரிய பணியிடமாக இருக்க இண்டிகோ உறுதியாக உள்ளது. இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை இண்டிகோ வலுவாக மறுக்கிறது. நேர்மை, ஒருமைப்பாடு, பொறுப்புக்கூறல் ஆகிய அதன் விழுமியங்களுக்கு இணங்க இண்டிகோ செயல்படும். தேவைப்பட்டால், சட்ட அமலாக்க முகமைகளுக்கு அதன் ஆதரவை வழங்கும்," என்று கூறினார்.
டி.எல்.எஃப்-1 காவல் நிலைய அதிகாரி (Station House Officer) ஆய்வாளர் ராஜேஷ் குமார் கூறுகையில், இந்த விவகாரம் தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதாகவும், வழக்கம் போல் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.