1971ம் ஆண்டு நடைபெற்ற போரின் தியாகிகள் மற்றும் வீரர்களை நினைவுகூரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, இந்திரா காந்தியின் பங்களிப்பை நினைவு கூர்ந்தார். போர் வெற்றியின் 50வது ஆண்டு விழாவின்போது பாஜக தலைமையிலான அரசு இந்திரா காந்தியின் பங்கை புறக்கணித்ததாக குற்றம் சாட்டினார்.
1971-ம் ஆண்டு நடந்த போரில் 13 நாட்களில் இந்தியா வெற்றி பெற்றது. பாகிஸ்தானை தோற்கடிக்க நாட்டில் உள்ள அனைத்து சாதியினரும் அனைத்து மதத்தினரும் ஒவ்வொருவரும் ஒன்றிணைந்தனர். ஆனால், இன்று நாடு பிளவுபட்டு பலவீனமடைந்து வருகிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வியாழக்கிழமை கூறினார்.
1971-ம் ஆண்டு போரில் உயிர்நீத்த வீரர்கள் மற்றும் படைவீரர்களை நினைவுகூரும் வகையில் காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்திருந்த பேரணியில் உரையாற்றிய ராகுல் காந்தி, “முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பங்களிப்புகளை நினைவு கூர்ந்தார். 1971-ம் ஆண்டு போர் வெற்றியின் 50வது ஆண்டு விழாவின் போது பாஜக தலைமையிலான அரசு இந்திரா காந்தியின் பங்கை புறக்கணித்ததாக குற்றம் சாட்டினார்.
உத்தரகாண்ட் மாநிலத்துடனான தனது உறவு தியாகத்தினாலானது என்றும், நாட்டிற்காக தங்கள் இரத்தத்தை கொடுக்காதவர்கள் இதை ஒருபோதும் புரிந்து கொள்ள மாட்டார்கள் என்றும் அவர் கூறினார்.
“உத்தரகண்ட் மாநிலத்துடனான எனது குடும்பத்தின் உறவு எனக்கு நினைவிருக்கிறது. என் பாட்டி இந்த நாட்டிற்காக தியாகம் செய்த அக்டோபர் 31 எனக்கு நினைவிருக்கிறது. என் தந்தை ராஜீவ் காந்தி இந்த நாட்டிற்காக தியாகம் செய்த மே 21 எனக்கு நினைவிருக்கிறது. உங்களுக்கும் எனக்கும் தியாகத்தினாலான உறவு இருக்கிறது” என்று பரேட் மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ராகுல் கூறினார். அங்கு கூட்டத்திற்காக மறைந்த முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் இந்திரா காந்தியின் பிரமாண்ட கட்-அவுட்கள் அமைக்கப்பட்டிருந்தன.
“உத்தரகாண்டில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் அளித்த தியாகத்தை என் குடும்பமும் கொடுத்திருக்கிறது. ரத்தத்தை கொடுத்தவர்கள் அந்த தியாகத்தை நன்றாக புரிந்து கொள்ள முடியும். இராணுவம், விமானப்படை அல்லது கடற்படையில் இருப்பவர்கள் இதை நன்கு புரிந்து கொள்ள முடியும். ஆனால், அந்த தியாகத்தை கொடுக்காத குடும்பமோ அல்லது நபரோ இதற்கு கீழ் இருக்க முடியாது.” என்று ராகுல் காந்தி கூறினார்.
1971ம் ஆண்டு போரைப் பற்றி பேசிய அவர், இதுபோன்ற போர்களுக்கு நிறைய காலம் எடுக்கும். ஆனால், 13 நாட்களில் பாகிஸ்தான் தலைவணங்கியது, ஏனெனில் இந்தியா ஒன்றிணைந்து போராடியது.
தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, “அமெரிக்கா ஆப்கானிஸ்தானை தோற்கடிக்க 20 ஆண்டுகள் எடுத்துக்கொண்டது. ஆனால், இந்தியா 13 நாட்களில் பாகிஸ்தானை தோற்கடித்தது. 1971-ல் என்ன நடந்தது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்தியா ஒன்றுபட்டு ஒற்றுமையாக நின்றது. போரில் ராணுவம் வெற்றி பெற்றது என சிலர் கூறுகின்றனர். சிலர் அரசியல் தலைமையினால் வெற்றி பெற்றதாக கூறுகின்றனர். சிலர் கடற்படை மற்றும் விமானப்படையினரால் போரில் வெற்றி பெற்றதாக கூறுகின்றனர். ஆனால், அனைத்து சாதியும், அனைத்து மதமும் ஒவ்வொருவரும் ஒன்று சேர்ந்ததால்தான் பாகிஸ்தானை தோற்கடித்தனர்.
அந்த வெற்றிக்கு மற்றொரு காரணம், பாகிஸ்தான் பிளவுபட்டிருந்தது. கிழக்கு மற்றும் மேற்கு பாகிஸ்தான் ஒன்றுடன் ஒன்று போர் செய்து, பாகிஸ்தான் பலவீனமாக இருந்தது. இது மிக முக்கியமான பாடம். இந்தியா ஒன்றாக நிற்கும் போது, அமெரிக்காவின் 7வது கடற்படை திரும்புகிறது. நாம் ஒன்றாகப் பேசும்போது இந்தியாவின் முன் எந்த சக்தியும் நிற்க முடியாது. இன்று நாடு பிளவுபட்டு பலவீனமடைந்து வருவது வருத்தமான விஷயம்” என்று என்றார்.
போரில் இந்திரா காந்தியின் பங்கை அரசு புறக்கணிப்பதாக குற்றம் சாட்டிய ராகுல் காந்தி, டெல்லியில் போர் வெற்றி ஆண்டு விழாவைக் குறிக்கும் நிகழ்ச்சியில் அவரைப் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை என்று கூறினார். “நாட்டிற்காக 32 தோட்டாக்களை தாங்கிய பெண்ணின் பெயர் அழைப்பிதழில் கூட இல்லை. உண்மைக்கு அரசு பயப்படுவதே இதற்குக் காரணம். இருப்பினும், இது என்னைத் தொந்தரவு செய்யவில்லை. ஏனென்றால், அவர் நாட்டிற்காக ரத்தத்தை கொடுத்தார் என்று எனக்குத் தெரியும்” என்று ராகுல் காந்தி கூறினார்.
இரண்டு அல்லது மூன்று தொழிலதிபர்களுக்காகவே இந்த அரசு செயல்படுகிறது என்று குற்றம் சாட்டிய ராகுல் காந்தி பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி ஆகியவை தொழிலதிபர்களின் ஆயுதங்கள் என்றும், பிரதமர் நரேந்திர மோடி அதை செயல்படுத்துகிறார் என்றும் கூறினார்.
“டெல்லியில் இருந்து பாஜக அரசு அகற்றப்படும் வரை, இந்த நாட்டில் இளைஞர்களுக்கு வேலை கிடைக்காது என்பதை நீங்கள் பார்ப்பீர்கள்… இந்தியா வலுவடைகிறது என்று நம்ப வேண்டாம். தவறான எண்ணங்களை வைத்துக் கொள்ளாதீர்கள். ஹெலிகாப்டர், விமானம் மற்றும் டாங்கிகள் நாட்டை வலிமையாக்குவதில்லை. மக்கள் அதிகாரம் பெறும்போது நாடு வலிமை பெறும்” என்று ராகுல் காந்தி கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.