/indian-express-tamil/media/media_files/2025/06/09/azTsAUkJaDhEsIhGlWqt.jpg)
மேகாலயாவிற்கு தேனிலவு சென்ற மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி என்ற இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் திடுக்கிடும் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கணவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட ஒரு வாரத்திற்கு பிறகு, அவரது மனைவி சோனம், கூலிப்படையினரை ஏவி கணவனைக் கொலை செய்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், சோனம் காவல்துறையிடம் சரணடைந்துள்ளார்.
இந்தச் செய்தியை ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்யவும்
இந்த தகவலை மேகாலயா முதலமைச்சர் கான்ராட் சங்மா இன்று (ஜூன் 9) காலை உறுதிப்படுத்தினார்: "ராஜா கொலை வழக்கில் மேகாலயா காவல்துறை 7 நாட்களுக்குள் ஒரு பெரிய திருப்புமுனையை எட்டியுள்ளது... மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு பெண் (சோனம்) சரணடைந்துள்ளார். மேலும் ஒரு குற்றவாளியை பிடிக்க தேடுதல் வேட்டை இன்னும் தொடர்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேகாலயா டி.ஜி.பி. இடாஷிஷா நோங்ராங் கூறுகையில், "சோனம் தனது கணவரை கொலை செய்ய ஆட்களை நியமித்தது கண்டறியப்பட்டது. ஒரு நபர் உத்தர பிரதேசத்தில் இருந்தும், மேலும் இரண்டு பேர் இந்தூரிலிருந்தும் சிறப்பு விசாரணைக் குழுவால் (SIT) கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள், மேலும் சில நபர்களின் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவரின் மனைவியே அவர்களை (கூலிப்படையை) நியமித்தார் என்பதையும் அவர்கள் வெளிப்படுத்தினர்... சோனம் உத்தப் பிரதேசத்தின் நந்தகஞ்ச் காவல் நிலையத்தில் சரணடைந்தார். அதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டார்," என்று பி.டி.ஐ செய்தி நிறுவனம் டி.ஜி.பி-யை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த மாதம் திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதி, மேகாலயாவில் உள்ள சோர்ஹாவில் தேனிலவு சென்றபோது காணாமல் போனதாக தகவல் வெளியானது.
தொலைபேசியில் அவர்களை தொடர்பு கொள்ள முடியாததால், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மேகாலயா வந்தடைந்தனர். இதைத்தொடர்ந்து, காவல்துறை, SDRF, NDRF, SOT மற்றும் ட்ரோன்கள் அடங்கிய ஒரு தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டது. இறுதியில், கடந்த திங்கட்கிழமை ராஜா ரகுவன்ஷியின் சடலம் வெய் சாவ்டோங் அருவிக்குக் கீழே உள்ள ஒரு பள்ளத்தாக்கிலிருந்து கண்டெடுக்கப்பட்டது. காவல்துறையின் ட்ரோன் மூலம் அது கண்டுபிடிக்கப்பட்டது.
அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டதுடன், ஒரு ஆயுதம் கிடைத்ததும் இந்த வழக்கில் புதிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. காவல்துறை, இந்த சந்தேகத்திற்கிடமான கொலையை விசாரிக்க, ஒரு சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்திருந்தது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.