குடியரசுத் தலைவரின் ஒப்புதலின்படி உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக இந்து மல்ஹோத்ரா இன்று பதவியேற்றார். தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் பதவி பிரமாணம் நடைபெற்றது. வழக்கறிஞராக இருந்து நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாகும் முதல் பெண் நீதிபதி இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக இருவரை நியமிப்பதற்கு கொலிஜியம் பரிந்துரைத்த நிலையில், ஒருவரை மட்டும் நியமிப்பதற்கு மத்திய அரசு பரிந்துரைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதில் இந்து மல்ஹோத்ராவை நியமிக்கும் பரிந்துரைக்கு மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. எனினும், உத்தரகாண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.எம்.ஜோசப்பை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கும் பரிந்துரையை மத்திய சட்ட அமைச்சகம் நிறுத்தி வைத்துள்ளது.
இந்நிலையில் குடியரசுத் தலைவரும், இந்து மல்ஹோத்ரா நியமனத்திற்கு ஒப்புதல் அளித்தார். இதை அடுத்து, உச்சநீதிமன்ற நீதிபதியாக மூத்த பெண் வழக்கறிஞர் இந்து மல்ஹோத்ரா இன்று பதவியேற்றார்.
ஆனால் மற்றொரு நீதிபதியான கே.எம். ஜோசப்பின் நியமன பரிந்துரையை திருப்பி அனுப்பிய மத்திய அரசு, மறுபரிசீலனை செய்யுமாறு கொலிஜீயம் குழு கோரியுள்ளது.
தகுதியின் அடிப்படையில் ஜோசப்பின் பரிந்துரை நிராகரிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து எதிர்ப்பு தெரிவித்த உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் குழு, ஒரு பரிந்துரையை மறுப்பதற்கும் மறுபரிசீலனைக்கு அனுப்புவதற்கும் மத்திய அரசுக்கு உரிமை உள்ளது என்று தெரிவித்துள்ளது.
இதனிடையே இந்து மல்ஹோத்ராவின் நியமனத்திற்கு எதிராக இந்திரா ஜெய்சிங் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இந்து மல்ஹோத்ரா நியமனத்திற்குத் தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
இதனால் உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றாமல் நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட முதல் பெண் என்ற பெருமையை இந்து மல்ஹோத்ரா பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.