இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த குற்றவாளிகளை தடுத்ததற்காக இண்டிகோ விமானம் விருது அளித்திருக்க வேண்டும். மாறாக பயணத் தடை விதித்துள்ளனர். இனி இண்கோ விமானத்தில் பயணிக்க போவதில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் இ.பி. ஜெயராஜன் தெரிவித்துள்ளார். கேரள முதலமைச்சர் பினராய் விஜயனும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்தத் தலைவரும், கேரள இடதுசாரி முன்னணி கூட்டணி ஒருங்கிணைப்பாளருமான இ.பி. ஜெயராஜன் ஆகியோர் இண்கோ விமானத்தில் கன்னூரில் இருந்து மாநில தலைநகர் திருவனந்தபுரத்திற்கு ஜூன் 13ஆம் தேதி பயணித்தனர். அதே விமானத்தில், இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் சிலரும் பயணித்தனர். அவர்கள் கேரள தங்கக் கடத்தல் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் பினராய் விஜயன் மற்றும் ஜெயராஜனிடம் வம்பிழுத்துள்ளனர்.
Advertisment
இந்த நிலையில் ஜெயராஜனும் இளைஞர் காங்கிரஸ் தொண்டர்களுடன் பதிலுக்கு பதில் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் விமானத்தில் மற்ற பயணிகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, இண்டிகோ விமானத்தில் 2 வாரங்கள் உள்நாடு மற்றும் வெளிநாடு பயணம் மேற்கொள்ள தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை ஜெயராஜன் தவிர்த்து, இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் பர்ஷீன் மஜீத் மற்றும் நவீன் குமார் ஆகியோருக்கும் பொருந்தும். இந்த நிலையில், தடை குறித்து விளக்கம் அளித்த ஜெயராஜன், ‘முதலமைச்சர் பினராய் விஜயனும், நானும் அந்த விமானத்தில் பயணித்தோம். அப்போது குற்றவாளிகள் தகராறில் ஈடுபட்டனர். பினராய் விஜயனுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு உண்டு.
இந்த நிலையில் குற்றவாளிகளுக்கு இண்டிகோ விமானம் பயணச் சீட்டு வழங்கியிருக்கக் கூடாது. என்னால் பெரும் அசம்பாவிதத்தை தவிர்த்தேன். உண்மையில் அவர்கள் விருது அளித்து இருக்க வேண்டும். மாறாக தடை விதித்துள்ளனர். இதுபோன்ற இரண்டாம் தர, தகுதியற்ற நிறுவனத்தின் விமானத்தில் இனி பயணிக்க போவதில்லை’ எனக் கூறினார்.