/indian-express-tamil/media/media_files/2025/05/18/OSv2j7g77xIcSQ9p2NZy.jpg)
போர்க்களமாக மாறிய சமூகவலைதளங்கள் - தேர்தல் சமூக ஊடகப் பிரிவு போர் அறையாக மாற்றம்
மே 6 மற்றும் 7 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட இரவில் பாகிஸ்தானிலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா நடத்திய துல்லியத் தாக்குதல் மற்றும் அதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட ராணுவ ரீதியான பதற்றங்களுக்குப் பிறகு, சமூக ஊடகங்கள் போர்க்களமாக மாறின. போலியான தகவல்கள், டீப்ஃபேக் படங்கள், வீடியோ கேம் காட்சிகளும் எக்ஸ்தளம் (X) மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் கட்டுப்பாடின்றி பரவின.
இதற்குப் பதிலளிக்கும் விதமாக, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் கடந்த ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது சமூக வலைதளங்களில் தேர்தல் தொடர்பான தவறான தகவல்களைக் கண்டறிந்து நீக்குவதற்காக அமைக்கப்பட்டிருந்த சிறிய குழுவுக்கு உடனடியாக கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். மேலும், போர் தொடர்பான தவறான தகவலை கண்காணித்து நீக்குவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் அக்குழுவினருக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்த கண்காணிப்பு பணி, பல்வேறு ஷிப்டுகளில் பணியாளர்கள் சுழற்சி முறையில் பணியாற்றியதால், 24 மணி நேரமும் தொடர்ச்சியாக நடைபெற்றது.
மே 9-ம் தேதி, இந்தியா-பாக்., இடையிலான ராணுவ மோதலுக்குப் பிறகு 2-வது நாளில், தேர்தல் காலத்தில் இயங்கிய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் (IT Ministry) தகவல் கண்காணிப்பு குழு விரிவுபடுத்தப்பட்டு, தகவல் தொழில்நுட்ப சட்டம் 69-(அ) பிரிவின் கீழ் ‘போர் அறை’ ஆக மாற்றப்பட்டது என்பதை தி இந்தியன் எக்ஸ்பிரஸ் உறுதிப்படுத்தியுள்ளது. 69(அ) பிரிவின் கீழ் மத்திய அரசு சமூக ஊடக நிறுவனங்களுக்கு தவறான தகவல்களைத் தடுக்கும் உத்தரவுகளை வழங்க அனுமதி பெற்றுள்ளது. இந்த குழுவில் 19 பேர் இருந்தனர். இதில் அமைச்சகம் மற்றும் இந்திய கணினி அவசரமாக்கும் சேவைத்துறை (Cert-In) ஆகியவற்றைச் சேர்ந்த தொழில்நுட்ப நிபுணர்களும் இருந்தனர். பாகிஸ்தான் ஆதரவு சமூக ஊடக தகவல்களை தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 69A பிரிவின் கீழ் தடுப்பதுதான் இக்குழுவின் தெளிவான நோக்கமாக இருந்தது.
இந்தக் குழு இணையத்தில் தவறான தகவல்களைப் பரப்பும் கண்டெண்ட்கள் கணக்குகளையும் கண்டறிந்து நீக்க பரிந்துரைத்தது. இதன் விளைவாக பல்லாயிரக்கணக்கான சமூக ஊடக கணக்குகள் தடுக்கப்பட்டன. பல வலைத்தளங்களும் தடை செய்யப்பட்டன. பல்வேறு மத்திய மற்றும் மாநில அரசு நிறுவனங்களிடமிருந்தும் தகவல்களைப் பெற்றது. சொந்தமாக 24 மணி நேரமும் சமூக ஊடகங்களை தீவிரமாகக் கண்காணித்தது.
இணையத்தில் பரப்பப்படும் தவறான தகவல்கள் பிரச்சாரங்கள் பெரும்பாலும் கருத்துப் போர் தந்திரோபாய நடவடிக்கையாக செயல்படுகின்றன. தங்கள் தளங்களில் உள்ள தவறான கண்டெண்ட் பெருமளவான எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியாத சமூக ஊடக தளங்களில் இதுபோன்ற பிரச்சாரங்கள் வழக்கமாகிவிட்டன. இஸ்ரேலின் காசா மீதான தாக்குதல்கள், ரஷ்யாவின் உக்ரைன் படையெடுப்பு போன்ற முந்தைய மற்றும் நடந்து கொண்டிருக்கும் மோதல்களிலும் இவை பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்தியா-பாக்., இடையிலான ராணுவ ரீதியான பதற்றத்தின்போது, இந்திய செய்தி சேனல்களில் குறிப்பாக பரவிக்கொண்டிருந்த பலர் கேள்வி எழுப்பிய போதிலும், தவறான தகவல்களை இணையத்தில் கையாள்வதற்கு அரசாங்கம் ஒருங்கிணைந்த முயற்சியை மேற்கொண்டது. பத்திரிகை தகவல் அலுவலகத்தின் (PIB) உண்மை சரிபார்ப்புப் பிரிவு, இணையத்தில் பரப்பப்பட்டு வந்த விமானத் தாக்குதல்கள் தொடர்பான பல கூற்றுகளை உண்மை சரிபார்த்துள்ளது. அப்படிப்பட்ட ஒரு பதிவில், பிரம்மோஸ் ஏவுகணை கூறுகளில் ஏற்பட்டதாகக் கூறப்படும் தோல்வி குறித்து DRDO விஞ்ஞானி எழுதிய கடிதம் ஒன்று இருந்தது. எந்த விஞ்ஞானியும் DRDOவில் பணிபுரியவில்லை என்றும், அந்தக் கடிதம் போலியானது என்றும் உண்மை சரிபார்ப்புப் பிரிவு தெளிவுபடுத்தியது. பாகிஸ்தான் சமீபத்தில் பஹாவல்பூருக்கு அருகே நடந்து கொண்டிருக்கும் பதற்றத்தின்போது இந்திய ரஃபேல் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாகக் கூறி, விபத்துக்குள்ளான விமானத்தைக் காட்டும் பல பழைய காட்சிகள் இணையத்தில் பரவி வந்தன. இதுவும் போலியானது என்று PIB பிரிவு கூறியுள்ளது.
இருப்பினும், சில கணக்குகள் சிக்கிக்கொண்டன. அனைத்துத் தடைய நடவடிக்கைகளும் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஆதாரங்களை மட்டுமே குறிவைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சில சர்வதேச ஊடகங்களும் இந்திய ஊடகங்களும் கூட தற்காலிகமாக இணையத்தில் தடுக்கப்பட்டன. உதாரணமாக, பிபிசி உருது மற்றும் அவுட்லுக் இந்தியாவின் எக்ஸ் (X) பக்கங்கள் தடுக்கப்பட்டு பின்னர் மீட்டமைக்கப்பட்டன.
"இவ்வளவு பெரிய அளவில் ஒரு தூய்மைப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொள்ளும்போது, சில தவறுகள் நடக்க வாய்ப்புள்ளது. தவறுதலாக தடுக்கப்பட்ட சில கணக்குகளை நாங்கள் விரைவாக மீட்டெடுத்தோம்," என்று ஒரு மூத்த அரசு அதிகாரி கூறினார்.
கடந்த வாரம், எலான் மஸ்க்-க்கு சொந்தமான எக்ஸ் (X) நிறுவனம், "சர்வதேச செய்தி நிறுவனங்கள் மற்றும் பிரபலமான எக்ஸ் பயனாளர்கள்" உள்ளிட்ட 8,000-க்கும் மேற்பட்ட கணக்குகளை இந்தியாவில் தடுக்க வேண்டும் என்று இந்திய அரசாங்கத்திடமிருந்து நிர்வாக உத்தரவுகளைப் பெற்றதாகக் கூறியது. நிர்வாக உத்தரவுகளை மீறினால், நிறுவனம் அபராதம் மற்றும் உள்ளூர் ஊழியர்களுக்கு சிறைத்தண்டனை உள்ளிட்ட சாத்தியமான தண்டனைகளுக்கு ஆளாக நேரிடும் என்று நிறுவனம் கூறியது.
கடந்த மாதம் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் அதைத் தொடர்ந்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஏற்பட்ட ராணுவ ரீதியான பதற்றத்திற்குப் பிறகு தவறான தகவல்களைத் தடுப்பதற்காக இந்திய அரசாங்கம் மேற்கொண்ட இணையவழித் தடையின் பரந்த அளவைப் பற்றிய பார்வையை எக்ஸின் அறிக்கை வழங்கியது. தடை உத்தரவுகள் குறித்து பதிவிட்ட எக்ஸின் அரசாங்க விவகாரங்கள் பக்கம் கூட பின்னர் இந்தியாவில் சிறிது காலத்திற்குத் தடுக்கப்பட்டு பின்னர் மீட்டமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.