/indian-express-tamil/media/media_files/2025/03/27/5O0bybU6jgnlPkqSxvRH.jpg)
ஒருங்கிணைந்த மீன்பிடித் துறைமுகம் அமைக்க PMMSY திட்டத்தின்கீழ் ரூ.130 கோடியை மத்திய அரசு நிதி ஒதுக்கி இருப்பதையும் அது விரைவில் காரைக்கால் மீனவ மக்களுக்கு அர்ப்பணிகக்பட உள்ளது என இன்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தெரிவித்தார்.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு அண்மையில் விடுவிக்கப்பட்ட காரைக்கால் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள், அனைத்து மீனவப் பஞ்சாயத்து குழுவினரோடு துணைநிலை ஆளுநர் திரு கே. கைலாஷ்நாதன் அவர்களை ஆளுநர் மாளிகையில் நேரில் சந்தித்து சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க அவர் எடுத்த நடவடிக்கைகள் அனைத்திற்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.
காரைக்கால் மீனவர்கள் உட்பட 13 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்தது. அதில் ஒரு மீனவருக்கு காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து காயமடைந்து இருந்தார்.
அவருக்கு முழுமையான மருத்துவ சிகிச்சை அளிக்கவும் கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை தொடர்பு கொண்டு துணைநிலை ஆளுநர் கேட்டுக் கொண்டார்.
அதன் அடிப்படையில் மத்திய அரசு மேற்கொண்ட துரித நடவடிக்கை காரணமாக மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து விமானம் மூலமாக சென்னை வந்து சேர்ந்த மீனவர்களில் காலில் குண்டு அடிப்பட்ட மீனவரின் மருத்துவ சிகிச்சைக்காக சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையை நேரடியாக தொடர்பு கொண்டு காயமடைந்த மீனவருக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ததையும் மற்ற மீனவர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல ஏற்பாடு செய்ததையும் நெகிழ்ச்சியோடு நினைவுகூர்ந்து துணைநிலை ஆளுநருக்கு நன்றியை தெரிவித்தனர்.
மேலும், துணைநிலை ஆளுநர் தனது சட்டமன்ற தொடக்க உரையில் மீனவர்களுக்கான மேம்பாட்டு திட்டங்களை குறிப்பிட்டு பேசியதை பெருமையோடு குறிப்பிட்டனர்.
மீனவர்கள்மீது அவர் கொண்ட அளவிலா அன்பிற்காக துணைநிலை ஆளுநரை தங்கள் குடும்பத்தில் ஒருவராக மீனவர்கள் கருதுவதாகவும் தெரிவித்தனர்.
உரையாடலின்போது, குண்டடிப்பட்ட மீனவரின் நலத்தை விசாரித்த துணைநிலை ஆளுநர், எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக எழும் சிக்கலுக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி உள்ளதையும் அதன் அடிப்படையில் காரைக்கால் மீனவர்கள், அந்தமான் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் ஆழ்கடல் மீன்பிடிக்க ஊக்குவிக்கும் ஒரு தொலைநோக்கு செயல்திட்டம் உருவாக்கப்பட்டு வருவதையும் துணைநிலை ஆளுநர் தெரிவித்தார்.
கடந்த வாரம் தில்லி சென்றிருந்தபோது மத்திய மீன்வளத்துறை அமைச்சரை சந்தித்து இதுகுறித்து பேசியிருப்பதையும் அதற்கான செயல்திட்டம் மத்திய மாநில அரசால் உருவாக்கப்பட்டு வருவதையும் குறிப்பிட்டார். அதுமட்டுமல்லாமல் காரைக்கால் பகுதியின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்த இருப்பதையும், மீனவர்களின் நீண்ட நாள் கனவுத் திட்டமான ஸ்மார்ட் மற்றும் ஒருங்கிணைந்த மீன்பிடித் துறைமுகம் அமைக்க PMMSY திட்டத்தின் கீழ் ரூ.130 கோடியை மத்திய அரசு நிதி ஒதுக்கி இருப்பதையும் அது விரைவில் காரைக்கால் மீனவ மக்களுக்கு அர்ப்பணிகக்பட உள்ளதையும் எடுத்துக் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.