பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று ஜூன் 21 ஆம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்தது. இதையடுத்து, 2015 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் 10-வது சர்வதேச யோகா தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு டெல்லி உட்பட நாட்டின் பல பகுதிகளில் இன்று காலை சிறப்பு யோகா நிகழ்வுகள் நடத்தப்பட்டன.
ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகரில் தால் ஏரிக்கரையில் உள்ள ஷெர்-இ-காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். இந்த நிகழ்வில் 7 ஆயிரம் பேர் கலந்து கொண்டு, பல்வேறு யோகாசனங்களை செய்தனர்.
இதேபோல, டெல்லி உட்பட நாட்டின் பல பகுதிகளில் இன்று காலை சிறப்பு யோகா நிகழ்வுகள் நடத்தப்பட்டன.
அமெரிக்காவின் டைம்ஸ் சதுக்கத்திலும் சர்வதேச யோகா தினம் களைகட்டியது.
இதுகுறித்து, இந்திய தூதர் பினயா பிரதான் கூறுகையில், "இன்று நாங்கள் டைம்ஸ் சதுக்கத்தில் சர்வதேச யோகா தினத்தை கொண்டாடி வருகிறோம். எங்களுடன் பல நாடுகளைச் சேர்ந்த யோகா பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர். இந்த யோகா நிகழ்ச்சி நாள் முழுவதும் நடைபெறும். இன்று 8,000 முதல் 10,000 பேர் பங்கேற்று எங்களுடன் இணைந்து யோகா செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இன்று இங்கு நடைபெறும் யோகா நிகழ்ச்சி அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் பங்கேற்கும் அனைவருக்கும் ஊக்கமளிக்கும்” என்று கூறினார்.
கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடன் சேர்ந்து கவர்னர் ஆர்.என்.ரவி யோகாசனம் செய்தார். முன்னதாக, கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“