Advertisment

இணையம் ஜனநாயக அரசியலை சீர்குலைக்கிறது, 3 மாதங்களில் புதிய விதிகள்: மத்திய அரசு

உச்ச நீதிமன்றத்தில் மத்திய மின்னணு தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில், கடந்த சில ஆண்டுகளில் இணையத்தையும் சமூக ஊடகங்களையும் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை பெரிய அளவில் உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், வெறுக்கத்தக்க பேச்சுகளும் அதிக அளவில் உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
இணையம் ஜனநாயக அரசியலை சீர்குலைக்கிறது, 3 மாதங்களில் புதிய விதிகள்: மத்திய அரசு

அனந்தகிருஷ்ணன் ஜி, பிரிதம் பால் சிங்

Advertisment

உச்ச நீதிமன்றத்தில் மத்திய மின்னணு தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில், கடந்த சில ஆண்டுகளில் இணையத்தையும் சமூக ஊடகங்களையும் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை பெரிய அளவில் உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், அதில் வெறுக்கத்தக்க பேச்சுகளும் அதிக அளவில் உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

“ஜனநாயக அரசியலுக்கு கற்பனை செய்யமுடியாத இடையூறுகளை ஏற்படுத்துகிற இணையம் ஒரு சக்திவாய்ந்த கருவியாக உருவெடுத்துள்ளது என்பதை உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது. மேலும், மத்திய அரசு சமூக ஊடக தளங்கள் போன்றவற்றால் தனிநபர் உரிமைகள், நாட்டின் ஒருமைப்பாடு, இறையாண்மை மற்றும் பாதுகாப்புக்கு தொடர்ந்து அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களைக் கருத்தில் கொண்டு, இடைத்தரகர்களை திறம்பட ஒழுங்குபடுத்துவதற்காக தற்போதுள்ள விதிகளைத் திருத்தி அறிவிக்க இன்னும் மூன்று மாதங்கள் ஆகும் என்று உச்ச நீதிமன்றத்தில் திங்கள்கிழமை கூறியுள்ளது.

திங்கள்கிழமை டெல்லி உயர்நீதிமன்றம் இணைய சேவை வழங்குநரான வேர்ல்ட் போன் இன்டர்நெட் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திடம் “பேஸ்புக் மெசஞ்சர், வாட்ஸ்அப்பின் ஆகியவற்றின் கட்டுப்பாடற்ற செயல்பாடு தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்” என்று கூறியது. இதை ஒரு முக்கியமான பிரச்சினை என்று கூறிய நீதிபதி நவின் சாவ்லா நிதி அமைச்சகம், தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், பேஸ்புக் நிறுவனம், வாட்ஸ்அப் நிறுவனம் ஆகியவற்றிற்கு நோட்டீஸ் அனுப்பினார். அதில், மற்ற இணைய சேவை வழங்குநர்களைப் போல, அவர்கள் ஏன் உரிமக் கட்டணத்துக்கும் பாதுகாப்புக் கருத்துகளுக்கும் உட்படுத்தப்படக்கூடாது என்பது குறித்து நான்கு வாரங்களுக்குள் அவர்கள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

உச்ச நீதிமன்றத்தில் மின்னணு தகவல் தொடர்பு அமைச்சகம் வழக்கறிஞர் ரஜத் நாயர் மூலம் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், கடந்த சில ஆண்டுகளில், இணையத்தையும் சமூக ஊடகங்களையும் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை பெரிய அளவில் உயர்ந்துள்ளது என்றும் இணையம் / சமூக ஊடக தளங்களைப் பயன்படுத்தி  “வெறுக்கத்தக்க பேச்சுகள், போலி செய்திகளைப் பரப்புதல், பொது ஒழுங்கை குலைத்தல், தேச விரோத நடவடிக்கைகள், அவதூறு பதிவிடுதல் போன்ற பிற சட்டவிரோத நடவடிக்கைகள் அதிவேகமாக உயர்ந்துள்ளது” என்று தெரிவித்துள்ளது.

இடைத்தரகர்களின் பொறுப்புணர்வை உறுதி செய்வதற்காக விதிகளில், பரிசீலிக்கப்படும் மாற்றங்களின் நிலை குறித்து உச்சநீதிமன்றத்தின் கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சகத்தின் இந்த பிரமாணப் பத்திரம் இருந்தது. சமூக ஊடக கணக்குகளுடன் ஆதார் எண்களை இணைப்பதற்காக பல்வேறு உயர் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட சில மனுக்களை தனக்கு ஒரே வழக்காக மாற்றுமாறு வலியுறுத்திய பேஸ்புக்கின் மனுவை விசாரித்தபோது உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. பிரமாணப்பத்திரத்தை தாக்கல் செய்த வழக்கறிஞர் ரஜத் நாயர், முழு செயல்முறையையும் முடிக்க அமைச்சகம் இன்னும் மூன்று மாதங்கள் கோரியுள்ளது என்றார்.

ஏப்ரல் 13, 2011 அன்று அறிவிக்கப்பட்ட தகவல் தொழில்நுட்ப (இடைத்தரகர்கள் வழிகாட்டுதல்கள்) விதிகள் 2011, இடைத்தரகர்கள் மீது ஏற்கனவே ஒரு விதி இருப்பதாக அரசாங்கம் சுட்டிக்காட்டியது. அதில் கூறியிருப்பதாவது: “இணையம் ஜனநாயகத்திற்கு கற்பனை செய்யமுடியாத அளவில் இடையூறு ஏற்படுத்தும் ஒரு சக்திவாய்ந்த கருவியாக உருவெடுத்துள்ளது. அரசியல், தனிநபர் உரிமைகள், தேசத்தின் ஒருமைப்பாடு, இறையாண்மை, பாதுகாப்பு ஆகியவற்றிற்கு தொடர்ந்து அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களைக் கருத்தில் கொண்டு இடைத்தரகர்களை திறம்பட ஒழுங்குபடுத்துவதற்காக தற்போதுள்ள விதிகள் திருத்தப்பட வேண்டும் என்று கருதப்படுகிறது.”

சமூக ஊடக தளத்தை தவறாகப் பயன்படுத்துதல், போலி செய்திகளைப் பரப்புதல் குறித்து கவன ஈர்ப்பு அழைப்பு தீர்மாணத்துக்கு பதிலளித்த மின்னணு தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ஜூலை 26 ஆம் தேதி ராஜ்யசபாவில் அறிக்கை அளித்தார்.

தற்போதுள்ள இடைத்தரகர்களின் வழிகாட்டுதல் விதிகளில் திருத்தம் உள்ளிட்ட பல நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கும். இது தொடர்பான 2011-ம் ஆண்டு சட்டம் அவர்களுடைய தளங்களில் வெளிடப்படும், பரப்பப்படும் செய்திகளுக்கும் உள்ளடக்கங்களுக்கும் அவர்களையே பொறுப்பேற்கச் செய்யும்.

திருத்தப்பட்ட தகவல் தொழில்நுட்ப இடைத்தரகர்கள் வழிகாட்டுதல் திருத்த விதிகள் 2018 சட்டம், அமைச்சகத்தின் இணையதளத்தில் டிசம்பர் 24, 2018-இல் வெளியிட்டு கருத்துகளை வர்வேற்றுள்ளது. அது 171 கருத்துகளை பெற்றுள்ளதாகவும் மேலும் அதை எதிர் கருத்துகளுக்காக வெளியிடப்பட்டதாகவும் கூறியுள்ளது.

இதைத் தொடர்ந்து, பல்வேறு வர்த்தக அரங்குகள், வர்த்தக சங்கங்களுடன், பல்வேறு சுற்று ஆலோசனைகள் நடத்தப்பட்டன. அதுமட்டுமில்லாமல், திருத்தப்பட்ட சட்ட விதிகளைப் பற்றி உள்துறை அமைச்சகம், சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம், பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், வர்த்தக அமைச்சகம் உள்ளிட்ட பிற அமைச்சகங்களின் கருத்துகளைப் பெறுவதற்கு அமைச்சகர்களுக்கு இடையிலானா ஆலோசனைகள் நடைபெற்றதாக இந்த பிரமாணப்பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

பங்குதாரர்களின் பங்கேற்புக்கும் அமைச்சர்களுக்கும் இடையிலான ஆலோசனையிலிருந்து வெளிவந்த அனைத்து விவரங்களையும் ஒன்றிணைத்து ஆராய்ந்த பின்னர், சட்டத்தின்படி இறுதி திருத்தப்பட்ட விதிகளை, இறுதிசெய்து அறிவிக்க இன்னும் மூன்று மாதங்கள் தேவைப்படும் என்று இந்த பிரமாணப்பத்திரம் கூறியுள்ளது.

டெல்லி உயர்நீதிமன்றத்தில், இணைய சேவை வழங்குநரான வேர்ல்ட் ஃபோன் இன்டர்நெட் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் தேசிய பாதுகாப்புக்கு கடுமையான அச்சுறுத்தல் இருப்பதாக மேற்கோள் காட்டி, பேஸ்புக் மெசஞ்சர், வாட்ஸ்அப் ஆகியவை தொலைதொடர்பு உரிமங்களை வைத்திருக்காமல் இணைய சேவைகளில் குரல் மற்றும் வீடியோ அழைப்புகளை வழங்குகின்றன என்று குற்றம் சாட்டியுள்ளது.

உயர் நீதிமன்றம் இந்த விஷயத்தில் சம்பத்தப்பட்டவர்கள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு அடுத்த ஆண்டு ஜனவரி 17 ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளது. வேர்ல்ட் ஃபோன் ஆலோசகர் சஞ்சோய் கோஸ், அரசாங்கத்தின் உரிம ஒப்பந்தத்தின் கீழ் இணைய தொலைபேசி உட்பட இணைய சேவையை வழங்கி வருவதாகவும், ஆனால் பேஸ்புக் மெசஞ்சரும் வாட்ஸ்அப்பும் சட்டவிரோதமாக செய்து வருவதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

தற்போதைய உரிமத்தின்படி இணைய தொலைபேசி என்பது முற்றிலும் உரிமம் பெற்ற சேவையாகும். இது ஒருங்கிணைந்த அணுகல் சேவை (UAS/ ISP) அல்லது இந்திய தந்தி சட்டம் 1885 இன் பிரிவு 4 இன் கீழ் வழங்கப்பட்ட ஒருங்கிணைந்த உரிமத்தின் கீழ் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.

“எனவே, இந்தியாவில் தொலைத் தொடர்பு உரிமம் இல்லாமல் குரல் சேவைகளை வழங்கும் பேஸ்புக் மெசஞ்சரும் வாட்ஸ்அப்பும் இந்திய தொலைதொடர்பு உரிம விதிமுறைகளைத் தவிர்த்து, தொலைதொடர்பு உரிமத்தின் கீழ் மட்டுமே அனுமதிக்கப்பட்ட சேவைகளை வழங்குகின்றன.”

“இணைய தொலைபேசி இந்தியாவில் உரிமம் பெற்ற சேவையாக இருப்பதால், ஒருங்கிணைந்த உரிமம் மற்றும் ஐஎஸ்பி (ஐடி) உரிமத்தின் கீழ் அணுகல் மற்றும் இணைய சேவை வழங்குநர்களால் மட்டுமே வழங்க முடியும்” என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப் இருமுணை குறியாக்கத்தை வழங்குகிறது. இதனால், வாட்ஸ்அப்பை ஒழுங்குமுறை கட்டமைப்பின் கீழ் கொண்டுவருவதற்கான தேவை இப்போது மிகவும் அவசியமானது என்று வேர்ல்ட் போன் கூறியது.

“அத்தகைய குறியாக்கத்துடன், வாட்ஸ்அப் கூட அதன் நெட்வொர்க்கில் அனுப்பப்படும் தகவல்களை அணுக முடியாது. இந்த நடவடிக்கையின் மூலம், இப்போது ஒரு பில்லியன் மக்களுக்கு மறைகுறியாக்கப்பட்ட செய்தியிடலுக்கான அணுகல் உள்ளது. இது தேசிய பாதுகாப்புக்கு கடுமையான அச்சுறுத்தலாகும்.” என்று வேர்ல்ட் போன் கூறியது. மேலும் அது, “நாட்டில் மொபைல் போன்கள் பரவலாக ஊடுருவியுள்ள நிலையில், பேஸ்புக் மெசஞ்சர், வாட்ஸ்அப்பின் செயல்பாட்டை சரிபார்க்க இது மிகவும் அவசியமாகிவிட்டது” என்று கூறியுள்ளது.

“சமூக ஊடகங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. குறிப்பாக பேஸ்புக் மெசஞ்சர், வாட்ஸ்அப்பில் பல்வேறு அமைப்புகள் தேச விரோத, பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன” என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும், 26/11 மும்பை பயங்கரவாத தாக்குதல், முசாபர் நகர் கலவரம், ஐ.எஸ்.ஐ.எஸ் நடத்திய பாரிஸ் பயங்கரவாத தாக்குதல் நவம்பர் 13,14, 2015 ஆகிய கடுமையான அச்சுறுத்தல்களுக்கு இது போன்ற கட்டுப்பாடற்ற நடவடிக்கைகள் இட்டுச்செல்லும் என்பதற்கான சில எடுத்துக்காட்டுகள் இவை” என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

India Whatsapp Facebook
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment