திகார் சிறையில் ப.சிதம்பரம்: வார்டு-2, அறை எண் 7, கட்டில்- மின்விசிறி வசதி உண்டு

INX media case: இது வளாகத்திற்குள் உள்ள மற்ற சிறைகளை விட குறைவான நபர்களைக் கொண்டிருக்கும்” என திகார் சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

By: Updated: September 6, 2019, 09:15:45 AM

P.Chidambaram: டெல்லியிலுள்ள திகார் சிறையில், சிறை எண் 7, வார்டு எண் 2-ல் முன்னாள் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் 15 நாட்களுக்கு, அதாவது செப்டம்பர் 19 வரை தங்க வைக்கப்படுகிறார்.

”பொருளாதார குற்றவாளிகள் மற்றும் வரதட்சணை குற்றச்சாட்டில் முதன்முறையாக கைது செய்யப்பட்டவர்கள் சிறை எண் 7 – ல் அடைக்கப்படுவார்கள். இது வளாகத்திற்குள் உள்ள மற்ற சிறைகளை விட குறைவான நபர்களைக் கொண்டிருக்கும்” என திகார் சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

“ஆறு போர்வைகள் அவருக்கு ஒதுக்கப்படும். அதில் 3 போர்வைகள், கட்டிலின் மேல் விரிக்க, ஒரு விசிறி மற்றும் வெஸ்டர்ன் டாய்லட்” என்று சிதம்பரத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அடுத்த இரண்டு வாரங்களுக்கு ப.சிதம்பரம், ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி (ஜே.கே.எல்.எஃப்) தலைவர் யாசின் மாலிக்கின் பக்கத்து செல்லில் இருப்பார் என நெருங்கிய வட்டாரங்கள் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தன.

சிதம்பரத்திற்கு முன்பு, அவரது மகன் கார்த்தி சிதம்பரம், மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத்தின் மருமகன் ரத்துல் பூரி, இடைத்தரகர் மற்றும் அகஸ்டாவெஸ்ட்லேண்ட் விவிஐபி இடைநிலை ஒப்பந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிறிஸ்டியன் மைக்கேல் ஜேம்ஸ், ராஜீவ் சக்சேனா ஆகியோர் இதே சிறையில் அடைக்கப்பட்டனர்.

சிறை எண் 7-ல் இரண்டு வகையான அறைகள் இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒரு அறை ஒருவர் மட்டுமே தங்கக் கூடியதாகவும், மற்றுமொரு அறை 3 நபர்கள் தங்குவதற்குமான அறை. “பாதுகாப்பு அச்சுறுத்தலை மனதில் வைத்து, நீதிமன்ற உத்தரவின்படி, வெஸ்டர்ன் டாய்லெட்டை பயன்படுத்தக்கூடிய தனி அறையில் சிதம்பரம் தங்க வைக்கப்படுவார். அவர் இசட்-பாதுகாப்பின் கீழ் இருப்பதால், சிறை எண் 7-ல் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அங்கு 800 கைதிகள் உள்ளனர். அவரது மருந்துகளை சிறைக்கு கொண்டு செல்ல நீதிமன்றம் அனுமதித்துள்ளது” என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை சிதம்பரம் செல்லில் அடைக்கப்படுவார். “நாங்கள் அனைத்து கைதிகளையும் காலை 6 மணிக்கு வெளியே வர அனுமதிக்கிறோம், காலை உணவுக்கு முன் அவர்களுக்கு இரண்டு பிஸ்கட்டுகளுடன் தேநீர் வழங்கப்படுகிறது. அதோடு அவர்கள் காலையில் யோகா மற்றும் பிரார்த்தனைகள் செய்ய வேண்டும். காலை 8 மணி முதல் 9 மணி வரை காலை உணவு வழங்கப்படும், அதை அவர்கள் வரிசையில் வந்து வாங்கிக் கொள்ள வேண்டும். அவர்கள் உட்காரலாம், நடக்கலாம், நூலகத்தில் படிக்கலாம். அதோடு மற்ற கைதிகளுக்கும் அவர்கள் தேவையானவற்றை கற்பிக்க முடியும். சிறைக் கண்காணிப்பாளரின் அனுமதியோடு, சிதம்பரம் தனது குடும்ப உறுப்பினர்களிடமிருந்து சில குறிப்பிட்ட புத்தகங்களைப் பெற முடியும். அவரது வக்கீல்களைத் தவிர, அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் நண்பர்களோடு சேர்த்து அதிகபட்சம் 10 பேர் தினமும் அவரைச் சந்திக்க முடியும்” என்று சிறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அதோடு, காங்கிரஸின் மூத்த தலைவரான ப.சிதம்பரத்திற்கு, காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை மதிய உணவு வழங்கப்படும் என்றும், மதியம் 12.30 மணி முதல் 3.30 மணி வரை அவர் தனது செல்லுக்குள் பூட்டப்படுவார் என்றும் அந்த அதிகாரி கூறினார். “பிற்பகல் 3.30 மணியளவில், அவர் வெளியே வர அனுமதிக்கப்படுவார், பின்னர் அவர் மற்ற கைதிகளுடன் ஏதேனும் விளையாடலாம். மாலை 6.45 மணியளவில், இரவு உணவு வழங்கப்படும்” என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார். கைதிகள் இரவு 9 மணி வரை தொலைக்காட்சி பார்க்க முடியும், அதன் பிறகு அவர்கள் தங்கள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள்.

ரொட்டி, பருப்பு, சப்ஜி மற்றும் சாதம் வழக்கமான இரவு உணவாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். “அவர் சிறையில் இருக்கும் RO தண்ணீரை குடிக்கலாம் அல்லது சிறை கேண்டீனில் இருந்து பாட்டில் தண்ணீர் வாங்கிக் கொள்ளலாம். பேனா மற்றும் பேப்பரை சிறை ஸ்டேஷனரி கடையில் பெற்றுக் கொள்ளலாம். சிறைச்சாலை நூலகத்திற்கும் அவர் செல்லலாம். விதிகளின்படி அவரது குடும்பத்தினர் அவருக்கு துணிகளை வழங்க முடியும்” என்றும் அந்த அதிகாரி நம்மிடம் தெரிவித்தார்.

 

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Inx media case chidambaram 15 days jail ward 2 cot 6 blankets fan western toilet

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X