ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட சிலர் மீது, சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.
இந்த வழக்கில் ப. சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி ஐகோர்ட்டு கடந்த 20-ம தேதி தள்ளுபடி செய்தது. இதைத்தொடர்ந்து ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் 21-ந்தேதி டெல்லியில் உள்ள அவரது வீட்டில் கைது செய்தனர்.
அவரை 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க டெல்லி ரோஸ் அவென்யூவில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதன்படி, சி.பி.ஐ. அதிகாரிகள் ப.சிதம்பரத்தை தங்களது அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அவரது விசாரணைக் காவல் நிறைவடைந்ததை தொடர்ந்து 26ம் தேதி அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அப்போதும், சி.பி.ஐ. தரப்பில் ப. சிதம்பரத்திடம் விசாரணை நடத்த மேலும் ஐந்து நாட்கள் சி.பி.ஐ. காவலில் எடுக்க அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து, ப.சிதம்பரத்தின் சி.பி.ஐ. காவலை 30-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார் நீதிபதி. அதைத் தொடர்ந்து, மீண்டும் செப்.2ம் தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டது.
இதற்கிடையில், சிதம்பரத்தை ஜாமினில் விடுதலை செய்யக்கோரி அவரது வழக்கறிஞர் கபில் சிபல் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, “சிதம்பத்தின் விசாரணை காவலை இனியும் நீட்டிக்க கூடாது. அப்படியே விசாரணை காவலை நீட்டித்தாலும் அவருக்கு தற்போது 74 வயதாவதால் திகார் சிறையில் அடைக்குமாறு உத்தரவிட கூடாது. வீட்டுக் காவலில் வைத்து விசாரிக்குமாறு அனுமதி அளிக்க வேண்டும்” என கபில் சிபல் வாதாடினார்.
இதுகுறித்து சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் அணுகி முறையிடுமாறு அறிவுறுத்திய உச்ச நீதிமன்றம், செப்டம்பர் 5-ம் தேதி வரை மேலும் 3 நாட்கள் ப.சிதம்பரத்திடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்த அனுமதியளித்து உத்தரவிட்டது. அதேசமயம், சிதம்பரத்துக்கு ஜாமீன் அளிக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் மறுத்துவிட்டால், அவரை திகார் சிறைக்கு அனுப்பக் கூடாது எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், ப.சிதம்பரத்தை 5ம் தேதி வரை திகார் சிறைக்கு அனுப்பக் கூடாது என்ற உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து சிபிஐ முறையீடு செய்துள்ளது.
அதாவது, உச்சநீதிமன்றம் பிறப்பித்த இத உத்தரவை நீதிமன்றமே திரும்பப் பெற வேண்டும் என்று சிபிஐ தரப்பில் கோரப்பட்டது. இந்த முறையீடு நாளை மதியம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.