ப.சிதம்பரத்தின் சிபிஐ காவல் செப்டம்பர் 2 வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே 9 நாட்கள் சிபிஐ காவலில் இருந்து வரும் அவர், தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார்.
முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ஆகஸ்ட் 21-ம் தேதி சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். முன் தினம் அவரது முன் ஜாமீன் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் நிராகரித்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கையை சிபிஐ மேற்கொண்டது.
முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு விதிகளை மீறி 305 கோடி ரூபாய் முதலீடு கொண்டு வந்ததாக கூறப்படுவது தொடர்பான வழக்கு இது. இது தொடர்பான பணப் பரிமாற்றங்களுக்காக அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்திருக்கிறது. ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் இந்த வழக்கில் ஜாமீனில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆகஸ்ட் 21-ல் கைது செய்யப்பட்ட ப.சிதம்பரத்திற்கு முதலில் 5 நாட்களும், அதைத் தொடர்ந்து 4 நாட்களும் சிபிஐ காவலுக்கு அனுமதி வழங்கப்பட்டன. 4 நாள் காவல் முடிந்ததை தொடர்ந்து இன்று (ஆக. 30) டெல்லி சிபிஐ தனி நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை மேலும் 5 நாள் சிபிஐ காவலுக்கு அனுமதிக்க சிபிஐ தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
ப.சிதம்பரத்தை இந்த வழக்கு தொடர்புடைய வேறு நபர்களுடன் சந்திக்க வைத்து விசாரிக்க வேண்டியிருப்பதை சிபிஐ சுட்டிக்காட்டியதை ஏற்றுக்கொண்டு மேலும் 3 நாள் (செப் 2 வரை) சிபிஐ காவலுக்கு அனுமதித்து நீதிபதி உத்தரவிட்டார். ஏற்கனவே கைதுக்கு எதிராக ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை செப்டம்பர் 5-க்கு உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இன்று சிபிஐ தரப்பு வழக்கறிஞர் துஷார் மேத்தா, ப.சி தரப்பு வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக் சிங்வி ஆகியோர் ஆஜராகவில்லை. ப.சி. தரப்பில் மூத்த வழக்கறிஞர் தயான் கிருஷ்ணன் ஆஜரானார். கார்த்தி சிதம்பரம் வந்திருந்தார். ப.சிதம்பரமும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.