தேர்தல் சாணக்கியன் என அழைக்கப்பட்ட பிரசாந்த் கிஷோர் இனி தேர்தல் ஆலோசகராக செயல்பட போவதில்லை என தெரிவித்துள்ளார். மேற்கு வங்காளத்தில் பாஜக ஒற்றை இலக்கத்தை தாண்டி தேர்தலில் வெற்றி பெற்றால் தான் தேர்தல் ஆலோசகர் பதவியிலிருந்து விலகுவதாக அவர் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இன்று வெளியான தேர்தல் முடிவுகளில் பாஜக இரட்டை இலக்கங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் இனி தேர்தல் ஆலோசகராக யாருக்கும் செயல்பட போவதில்லை என பிரசாந்த கிஷோர் தெரிவித்துள்ளார்.
பிரசாந்த் கிஷோர் தனது ஐ பேக் நிறுவனம் மூலம் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆலோசனைகளை வழங்கி வருகிறார். இவர் இந்த தேர்தலில் தமிழகத்தில் திமுகவுக்கும், மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ்க்கும் தேர்தல் ஆலோசகராக செயல்பட்டார்.
தேர்தல்களில் அவரது ஐபேக் நிறுவனம், அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பிரச்சாரங்கள், பொதுக் கூட்டங்கள், பேரணிகள் ஆகியவற்றை எப்படி நடத்துவது, குறிப்பாக சமூக வலைதளங்களில் எவ்வாறு பிரச்சாரம் செய்வது, மேலும் வேட்பாளர் தேர்வு போன்றவற்றில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கும்.
இன்று முடிவுகள் வெளியான நிலையில், பாஜக மேற்கு வங்கத்தில் இரட்டை இலக்கங்களில் வெற்றி பெற்றுள்ளதால், பிரசாந்த் கிஷோர், நான் தற்போது செய்து கொண்டிருப்பதை தொடர விரும்பவில்லை, நான் போதுமானதைச் செய்திருக்கிறேன். எனக்கு ஓய்வு எடுத்து வாழ்க்கையில் வேறு ஏதாவது செய்ய வேண்டிய நேரம் இது. இந்த இடத்தை விட்டு வெளியேற விரும்புகிறேன், என்று தெரிவித்துள்ளார்.
மேலும் மேற்கு வங்காளத்தில் தேர்தல் பணிகள் கடினமாக இருந்ததாகவும் கடும் நெருக்கடிக்கு மத்தியில் வேலை செய்ததாகவும் கூறியுள்ளார். முன்னதாக மேற்கு வங்காளத்தில் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெறப்போவதில்லை என அவர் பேசியதாக ஆடியோ வெளியாகி சர்ச்சை ஆனது.
ஆனால் தற்போது, மேற்கு வங்காளத்தில் பிரசாந்த் கிஷோர் பங்களிப்பில் திரிணாமுல் காங்கிரஸ் பெரிய வெற்றி பெற்றாலும், அவர் சவால் விட்டப்படி அவரால் வெற்றி பெறமுடியவில்லை. பாஜக பற்றிய அவரது கணிப்பு தவறாகி உள்ளது. இதனால் தற்போது அவர் தேர்தல் ஆலோசகர் பணியை விட்டுவிடுவதாக தெரிவித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil