உத்தரபிரதேசம் மாநிலத்தில் சுத்தம் செய்யும் பணிசெய்து, மிகவும் ஏழ்மை நிலையிலிருந்த ரிங்கு சிங் (20) என்ற இளைஞர், இன்று தன் திறமையின் மூலம் வரும் ஐபில் போட்டியில் கொல்கத்தா அணிக்காக ஆல் ரவுண்டராக களமிறங்க உள்ளார். நடிகர் ஷாருக்கானின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரிங்கு சிங்கை, நடந்து முடிந்த ஐபிஎல் ஏலத்தில் 80 லட்ச ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது. இவரை ஏலம் எடுக்க மும்பை, கொல்கத்தா அணிகள் போட்டிபோட்டது குறிப்பிடத்தக்கது.
ரிங்கு சிங்கின் குடும்பம் மிகவும் ஏழ்மையான குடும்பமாகும். அவரது தந்தை கான்சந்திரா, வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் சப்ளை செய்துவருகிறார். மூத்த சகோதரர் ஆட்டோ ஓட்டுகிறார். மற்றொரு சகோதரர் பயிற்சி பள்ளியொன்றில் பணிபுரிகிறார்.
வீட்டில் மூன்றாவதாக பிறந்த ரிங்கு சிங் பல கஷ்டங்களை அனுபவித்துள்ளார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இவரது குடும்பம் ரூ.5 லட்சம் கடனில் தவித்தது. அதனை கடனிலிருந்து மீட்க வேண்டிய பொறுப்பு ரிங்குவுக்கு இருந்தது.
9-ஆம் வகுப்பில் தோல்வியடைந்த ரிங்கு சிங், கிரிக்கெட்டில் அதிக ஆர்வம் செலுத்த ஆரம்பித்தார். உத்தரபிரதேசத்தில் 19 வயதுக்குட்பட்டோருக்கான பல போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெற்றார். வீட்டில் தரும் சிறுசிறு தொகையைகூட கிரிக்கெட்டுக்கு தேவையானவற்றை வாங்குவதற்கே செலவழித்தார்.
வீட்டில் கடன் பிரச்சனை அதிகரிக்கவே, தன்னை ஏதாவது வேலையில் சேர்த்துவிடுமாறு தன் சகோதரரிடம் கேட்டுள்ளார். அந்த இடத்தில், ரிங்கு சிங் ’பெருக்கி துடைக்கும்’ வேலை செய்தார். இதையடுத்து, இனி அந்த வேலைக்கு செல்லமாட்டேன் என வீட்டில் கூறிய ரிங்கு சிங், கிரிக்கெட்டில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்தார்.
விடாமுயற்சியுடன் கடுமையாக விளையாட ஆரம்பித்து, பல போட்டிகளில் வெற்றி பெற்று முத்திரை பதித்தார். அதனால்தான், இப்போது கொல்கத்தா அணிக்காக விளையாட உள்ளார்.
ஐபிஎல் ஏலம் நடைபெற்றபோது, வீட்டில் தன் குடும்பத்துடன் அமர்ந்து ரிங்கு சிங் தொலைக்காட்சியில் ஏலத்தை பார்த்துக்கொண்டிருந்தார்.
”என்னை 20 லட்சத்துக்கு ஏலம் எடுப்பார்கள் என நினைத்தேன். ஆனால், 80 லட்சம் ரூபாய்க்கு என்னை ஏலம் எடுத்துள்ளனர். அதைக் கண்டதும் எனக்கு முதலில் தோன்றியது, என்னுடைய அண்ணன் மற்றும் தங்கையின் திருமண செலவில் நான் பங்காற்ற வேண்டும் என்பதுதான்”, என கூறினார் ரிங்கு சிங்.