ஈராக் நாட்டில் 39 இந்தியர்கள் கொலை செய்யப்பட்டதை மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உறுதி செய்தார். ஐ.எஸ். தீவிரவாதிகள் இந்த கொடூரத்தை அரங்கேற்றினர்.
ஈராக் நாட்டின் மொசூல் நகரில் 39 இந்தியர்கள் கடந்த 2014-ம் ஆண்டு ஐ.எஸ். தீவிரவாதிகளால் கடத்தப்பட்டனர். பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்த 39 அவர்கள் மரணமடைந்ததாக வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார்.
ஈராக் கொடூரம் குறித்து பேசிய அவர், ‘ஈராக்கில் கடத்தப்பட்ட 39 இந்தியர்கள் கொல்லப்பட்டனர். இறந்தவர்களின் உடல்கள் ஈராக் தலைநகர் பாக்தாத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கே டி.என்.ஏ. சோதனை செய்யப்பட்டது. சோதனை முடிவில் 38 பேரின் டி.என்.ஏ. காணாமல் போன இந்தியர்களின் டி.என்.ஏ.வை ஒத்துள்ளது. ஒருவரின் டி.என்.ஏ. 70 சதவீதம் ஒத்துள்ளது. இதனை உறுதி செய்த பிறகே அவர்களின் குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஈராக்கில் கொல்லப்பட்ட இந்தியர்களின் உடலை இந்தியாவிற்கு கொண்டு வரும் பணிகளை வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங் மேற்கொள்வார். விமானம் மூலம் வரும் அவர்களின் உடல்கள் அமிர்தசரசிற்கு கொண்டு செல்லப்பட்ட பின் கொல்கத்தாவிற்கு செல்லும்' என்றார்.
ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 39 பேரும் பஞ்சாப், பீகார், மேற்கு வங்காளம் மற்றும் இமாசலப்பிரதேசத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் ஈராக்கின் மொசூல் நகரில் பணியாற்றி வந்தனர். அவர்கள் மொசூல் நகரை விட்டு வெளியேற முயன்ற போது பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டனர். அவர்களை மீட்க இந்திய அரசு பல நடவடிக்கைகள் எடுத்து வந்த நிலையில், 39 பேரும் ஐ.எஸ். பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஈராக்கில் கடத்தி கொல்லப்பட்ட 39 இந்தியர்களின் விவரங்களை வெளியுறவு துறை வெளியிட்டுள்ளது.
பஞ்சாப்பை சேர்ந்த தர்மிந்தர் சிங், ஹரிஷ்குமார், ஹர்சிம் ரஞ்சித்சிங், கன்வால் ஜித் சிங், மால்கித் சிங், ரஞ்சித் சிங், சோனு, சந்தீப்குமார், மஞ்ஜிந்தர் சிங், குருசரண் சிங், பல்வந்த் ராய், ரூப் பால், தேவிந்தர் சிங், குல்வந்திரி சிங், ஜதிந்தர் சிங், நிஷான் சிங், குர்தீப் சிங், கமல்ஜித் சிங், கோபிந்தர் சிங், பிரித்பால் ஷர்மா, சுக்விந்தர் சிங், ஜஸ்வீர் சிங், பர்விந்தர் குமார், பல்வீர் சந்த், சுர்ஜித் மைன்கா, நந்த்லால், ராகேஷ்குமார் ஆகியோர் அடங்குவர்.
இமாசலப்பிரதேசத்தை சேர்ந்த அமன்குமார், சந்தீப்சிங் ரானா, இந்தர்ஜித், ஹேம்ராஜ் ஆகியோரும், மேற்கு வங்காளத்தை சேர்ந்த சாமர் திகாதர், கோகன் சிக்தர் மற்றும் பீகாரை சேர்ந்த சந்தோஷ்குமார் சிங், பித்ய பூஷன் திவாரி, அதாலத் சிங், சுனில்குமார் குஷ்வாலா, தர்மேந்திர குமார் மற்றும் ராஜுகுமார் யாதவ் உள்பட 39 பேர் கொல்லப்பட்டு உள்ளனர் என தெரிவித்துள்ளது.
ஈராக்கில் 30 இந்தியர்களும் பத்திரமாக இருப்பதாக இந்திய அரசு கூறி வந்த நிலையில், நேற்று அவர்களின் மரணம் உறுதி செய்யப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டதால் உறவினர்கள் அதிர்ச்சியில் அழுது புரண்டனர்.
39 இந்தியர்கள் கொல்லப்பட்ட விவகாரத்துக்கு ஐக்கிய நாடுகள் அவையும் இரங்கல் தெரிவித்துள்ளது. 'பயங்கரவாதிகளின், காட்டுமிராண்டித்தனமான செயலுக்கு இது ஒரு எடுத்துக்காட்டு’ என்று தெரிவித்துள்ளது.