IRCTC ticket Price concession: இந்திய ரயில்வே நிர்வாகம், டிக்கெட்டுகளில் பல சலுகைகள் அறிவித்துள்ளது. 25 சதவிகிதம் முதல் 100 சதவிகிதம் வரை இந்த டிக்கெட் சலுகைகள் கொடுக்கப்பட்டுள்ளன. மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், மாணவர்கள், நோயாளிகள் உள்ளிட்ட சிலருக்கு மட்டுமே இந்த சலுகைகள் பொருந்தும். இருப்பினும், ஆன்லைன் மூலம் டிக்கெட் புக்கிங் செய்பவர்களில் மூத்த குடிமக்களுக்கு மட்டுமே இந்த சலுகைகள் கிடைக்கும். மற்ற பயனாளிகள் நேரடியாக டிக்கெட் கவுண்ட்டர்களில் சென்று டிக்கெட் வாங்கி, இந்த புதிய சலுகைகளை அனுபவிக்க முடியும். indianrail.gov.in இணையதளத்தில் இதுகுறித்த முழு தகவலும் இடம் பெற்றுள்ளது.
இந்திய ரயில்வேயின் சலுகைகள் பெறுவதற்கான பொது விதிகள்:
1. அனைத்து டிக்கெட் சலுகைகளும் பயணிகள் பயணிக்கும் ரயிலை பொறுத்தது. அதாவது, பாசஞ்சர் மற்றும் எக்ஸ்பிரஸ் என்றால் அதற்கேற்றவாறு டிக்கெட் விலையில் சலுகை இருக்கும்.
2. ரயில்வே சலுகையானது டிக்கெட்டின் அடிப்படை விலையை கருத்தில் கொண்டே நிர்ணயிக்கப்படும். முன்பதிவு கட்டணம் உள்ளிட்ட மற்ற கூடுதல் கட்டணங்களில் சலுகை கிடையாது.
3. பயனாளி டிக்கெட் புக்கிங் செய்கையில், ஒருமுறை மட்டுமே சலுகை அளிக்கப்படும். ஒரு நபருக்கு ஒரே நேரத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சலுகைகளை அனுமதிக்க முடியாது.
4. டிக்கெட் புக்கிங் படிவத்தில் இந்த சலுகைகள் பெறுவதற்கான பிரிவுகள் உள்ளன. அதில் விவரங்களை குறிப்பிட்டு சலுகைகள் பெறலாம். IRCTC இணையதளம் மூலமாகவோ, ஆப் மூலமாகவோ புக்கிங் செய்யும் மூத்த குடிமக்கள், அதில் உள்ள ஆப்ஷனை தேர்வு செய்து இந்த சலுகைகளை பெறலாம்.
5. சலுகை டிக்கெட் பெற்ற பின்னர், அதனை உயர் வகுப்புகளுக்கு பயனாளிகள் மாற்ற முடியாது. அதற்கான டிக்கெட் கட்டணத்தை அளித்தாலும் மாற்ற முடியாது.
6. சீசன் டிக்கெட்டுகளில் இந்த சலுகை அளிக்கப்படாது. தொடர்ச்சியாக வெவ்வேறு இடங்களுக்கு பயணம் செய்வதாக இருப்பின், சலுகை அளிக்கப்படாது. மேலும், ராஜ்தானி எக்ஸ்பிரஸ், சதாப்தி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்களில் பயணம் செய்ய சலுகை கிடையாது.
7. அனைத்து ரயில்வே நிலையங்களில் உள்ள டிக்கெட் கவுண்ட்டர்கள், முன்பதிவு மையங்களில் டிக்கெட் பதிவு செய்து, இந்த சலுகைகளை பெறலாம்
8. பயனாளிகள் யாரேனும், முறையான டிக்கெட் இல்லாமலோ, டிக்கெட் எடுக்காமலோ, சலுகை டிக்கெட் பயணத்தை நீட்டித்து பயணம் செய்தாலோ, அல்லது சலுகை டிக்கெட்டில் உயர் வகுப்பில் பயணம் செய்தாலோ, அவர்களுக்கு அதற்கு பிறகு, எந்த ரயிலிலும் சலுகை முறையில் பயணம் செய்ய தடை விதிக்கப்படும். அவர்களுக்கு முறையான தகுதிகள் இருந்தாலும் கூட, சலுகை டிக்கெட் கிடைக்காது.