ஐஆர்சிடிசி செயலிழப்பு: இன்னல்களில் முடிந்த டிக்கெட் பதிவு

கோளறு சரிசெய்யப்பட்டு விட்டது. அதன்பின்னர், எந்த வித பிரச்னையும் இல்லாமல் வலைத்தளம் நன்றாக செயல்பட்டு வருகிறது.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 17 மணிநேரம் ஐஆர்சிடிசி இணையதளம் செயலிழந்த காரணத்தால், பயணச் சீட்டுகளைப் பதிவு செய்ய முடியாமல் பல்வேறு இன்னல்களை சந்திக்கும் பரிதாப நிலைக்கு லட்சக்கணக்கான மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

உலகின் மிகப்பெரிய இ-காமர்ஸ் வலை இணையதளங்களில் ஒன்றாக இந்திய இரயில்வேயினால் புகழாரம் சூடப்படும் ஐஆர்சிடிசி வலைத்தளமானது ரயில் பயணிகளுக்கு உணவு வழங்கல், சுற்றுலா மேலாண்மை மற்றும் இணையவழி பயணச்சீட்டுப் பதிவு ஆகிய சேவைகளை மேற்கொண்டு வருகிறது. இச்சேவையை நாள்தோறும் லட்சக்கணக்கான ரயில் பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

ஐஆர்சிடிசி மூலம் நாளொன்றுக்கு லட்சக்கணக்கான பயணிகள் தங்களது இணையவழி பயணச் சீட்டுகளை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 17 மணிநேரம் ஐஆர்சிடிசி வலைத்தள செயல்பாட்டில் கோளாறு ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் 11-ம் தேதி முதல் இம்மாதம் 20-ம் தேதி வரையிலான இடைப்பட்ட காலத்தில், திட்டமிடப்பட்ட தினசரி பராமரிப்புக்கான நேரத்தை தவிர, சுமார் 1,046 நிமிடங்கள் இந்த வலைத்தளம் செயல்பாட்டில் கோளாறு ஏற்பட்டுள்ளது.

கடந்த 20-ம் தேதி, காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரையும், கடந்த 12-ம் தேதி, காலை 7.41 முதல் 10.30 மணி வரையும், கடந்த மாதம் 24-ம் தேதியன்று காலை 10.43 முதல் 11.33 மணி வரையும், மீண்டும் அதே நாளில் மாலை 3.25 மணி முதல் 4.46 மணி வரையும் இந்த வலைத்தளம் செயல்பாடு பிரச்னைக்குள்ளாகியுள்ளது.

வலைத்தள செயல்பாட்டில் ஏற்பட்ட இந்த கோளாறை ரயில்வே பொதுத்துறை நிறுவனமான ரயில்வே தகவல் அமைப்புகள் மையம் சரி செய்யாத காரணத்தால், லட்சகணக்கான பயணிகள் தங்களது பயணச் சீட்டுகளைப் பதிவு செய்யும் வாய்ப்பை இழந்துள்ளனர்.

இதுகுறித்து ரயில்வே தகவல் அமைப்புகள் மையம் கூறுகையில், ஐஆர்சிடிசி மூலம் நாளொன்றுக்கு சுமார் 6 லட்சம் பயணிகள் தங்களது இணையவழி பயணச் சீட்டுகளை பதிவு செய்து வருகின்றனர். முன்னதாக நிமிடம் ஒன்றுக்கு 7,200 டிக்கெட்டுகள் பதிவு செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது மேம்படுத்தப்பட்டு நிமிடம் ஒன்றுக்கு சுமார் 15,000 டிக்கெட்டுகள் பதிவு செய்யப்படுகிறது. இந்த இடைப்பட்ட காலங்களில் ஏற்பட்ட பின்னடைவு வருகிற நாட்களில் மறைந்து விடும். கடுமையான இணைய போக்குவரத்தை சமாளிக்கும் திறன் பெற்றதாக வரும் நாட்களில் வலைத்தளம் இருக்கும் என்று கூறுகின்றனர். மேலும், டிக்கெட் பதிவில் தாமதம் ஏற்பட்டாலும், வருவாயில் எவ்வித இழப்பும் ஏற்படவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தொழிநுட்ப கோளாறு இருந்தது. ஆனால், கடந்த வெள்ளிக்கிழமை அவை சரிசெய்யப்பட்டு விட்டது. அதன்பின்னர், எந்த வித கோளாறும் இல்லாமல் வலைத்தளம் நன்றாக செயல்பட்டு வருகிறது என ரயில்வே வாரிய கூடுதல் உறுப்பினர் (கணினி மற்றும் தகவல் அமைப்புகள்) சஞ்சயா தாஸ் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close