IRCTC Website Can't be Used for Illegal Ticket Book: இந்திய ரயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி இ-டிக்கெட் இணையதளத்தில் சட்டவிரோதமாக யாராலும் இனி டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாது! இந்த இணையதளத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில், சைபர் க்ரைம் குழு ஒன்று, விரைவில் களத்தில் இறங்கவிருக்கிறது.
அந்த குழுவை அமைப்பதற்கான சாத்தியத்தை ஆராய்வதற்காக, இந்திய ரயில்வே ஒரு கமிட்டியை அமைத்துள்ளது. 6 பேர் கொண்ட அந்தக் கமிட்டியில் சி.ஆர்.ஐ.எஸ் பொறியாளர், சிக்னலிங் மற்றும் டெலிகாம், கணினி, தகவல் தொழில்நுட்பப் பிரிவு, கண்காணிப்பு அதிகாரி மற்றும் பாதுகாப்பு அதிகாரி ஆகிய மூத்த அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர். இந்த கமிட்டி சைபர் குழு அமைப்பதற்கான சாத்தியத்தை ஆய்வு செய்து மூன்று மாதத்துக்குள் அறிக்கையை சமர்பிக்க இருக்கிறது.
தவிர இந்தக் குழுவை அமைக்க, ப்ளூ பிரிண்ட்டை தயாரிக்கும் படி அந்தக் கமிட்டி இந்திய ரயில்வேயிடம் கேட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதோடு இந்த மாதிரியான பிரச்னைகளை கையாள்வதில் மிகுந்த அனுபவமுள்ளவர்களை பரிந்துரைக்கும் படியும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதோடு புதிதாக அமைக்கப்படும் அந்த சைபர் க்ரைம் குழு ரயில்வேயின் எந்தத் துறையின் கீழ் பணியாற்றும் என்பதையும் அந்த கமிட்டியே முடிவு செய்யும்.
ஐ.ஆர்.டி.சி.யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் ஆட்டோமேஷன் மென்பொருளை தவறாக பயன்படுத்திய 19 இணையதளங்களை 'ப்ளாக்’ செய்யும்படி கடந்தாண்டு நாடாளுமன்றத்தில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திடம் புகாரளித்திருந்தது இந்திய ரயில்வே. ஐ.ஆர்.சி.டி.சி என்பது தான் இந்திய ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளம். இதில் சட்ட விரோதமாக டிக்கெட் முன்பதிவு செய்தததற்காக சி.பி.ஐ அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையே ரயில் நிலையங்களில் பொருத்துவதற்காக 6000 சி.சி.டி.வி கேமராக்களை வாங்கியிருப்பதாக ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் இம்மாத தொடக்கத்தில் தெரிவித்திருந்தார்.