Ishrat Jahan alleged fake encounter case : 2004ம் ஆண்டு குஜராத் காவல்துறையால் என்கௌண்டர் மூலம் கொலை செய்யப்பட்டவர் இஷ்ரத் ஜஹான். அவர் மற்றும் அவருடன் சேர்ந்த மூன்று நபர்கள் லஷ்கர் - இ - தொய்பா அமைப்புடன் தொடர்பு கொண்டிருப்பதாகவும், அவர்கள் அன்றைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை கொலை செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் கூறி அகமதாபாத் க்ரைம் பிரான்ச் காவல்துறை எண்கௌண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனை எதிர்த்து இஷ்ரத் ஜஹானின் தாயார், தன் மகளின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என போராட்டம் நடத்தினார்.
இவ்வழக்கில் இருந்து விடுவிக்குமாறு ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரிகள் டி.ஜி.வன்சரா மற்றும் என்.கெ. அமின் ஆகியோர் தொடுத்த மனுவை எதிர்த்து தொடர்ந்து போராடி வந்தார் ஷமிமா. ஆனாலும் இந்த வருடம் மே மாதம் சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் அவர்கள் இருவர் மீதும் இருந்த அனைத்து அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்தது. ஜூலை மாதம் இவ்வழக்கில் மேல் முறையீடு செய்ய விரும்பவில்லை என்று சி.பி.ஐ தரப்பும் அறிவித்திருந்தது. இதில் ஏற்கனவே சம்பந்தப்பட்ட ஐ.பி.எஸ் அதிகாரி பி.பி. பாண்டே பிப்ரவரி மாதம் 2018ம் ஆண்டு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
Ishrat Jahan alleged fake encounter case - ஷமிமாவின் உருக்கமான கடிதம்
“நான் முற்றிலும் நொறுங்கிவிட்டேன். குற்றம் செய்தவர்கள் தண்டனைகளில் இருந்து தப்பிக் கொள்வது போன்ற கலாச்சாரத்தைக் கண்டு நான் என்னுடைய மனம் மிகவும் வேதனை அடைகிறது. நான் இது குறித்து ஏற்கனவே என்னுடைய வழக்கறிஞர் வ்ருந்தா க்ரோவரிடம் கூறியுள்ளேன். தற்போது மேற்கொண்டு போராடும் நம்பிக்கையையும் தைரியத்தையும் இழந்துவிட்டேன். இனி வரும் சி.பி.ஐ கோர்ட் விசாரணைகளிலும் பங்கேற்க மாட்டேன்” என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டார்.
“11 குற்றம்சாட்டப்பட்ட குற்றவாளிகளை கைது செய்து, நீதியை நிலை நாட்ட வேண்டியது சி.பி.ஐயின் கடமை. பணிகளில் இருக்கும் அரசு அதிகாரிகள் செய்யும் தவறுகளுக்காக தண்டிக்கப்படுவதை கண்டிருக்கின்றேன். ஆனால் குஜராத்திலோ, என் மகள் கொல்லப்பட்டதை அனைவரும் வரவேற்றார்கள். குற்றம் சாட்டப்பட்ட அனைத்து அதிகாரிகளும் தற்போது பெயிலில் இருக்கின்றார்கள். சிலர் குஜராத் அரசால், இழந்த பதவிகளை திரும்ப பெற்றிருக்கிறார்கள்” என்று வருத்தத்துடன் எழுதியுள்ளார்.
ஏதோ குற்றத்தை மறைக்கவே என்னுடைய மகள் கொல்லப்பட்டிருக்கிறாள். குற்றவாளிகள் தப்பித்துக் கொள்ளும் பழக்கத்தை நாம் முற்றிலும் ஒழிக்க வேண்டும். என்னுடைய மகளுக்கு தேவையான நீதி கிடைக்கப்பட வேண்டும். ஆனால் இந்த போராட்டத்தில் என்னால் தனியாக போராட இயலவில்லை. தற்போது இது சிபிஐயின் பணி. குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டனை பெற்றுத்தருவது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.