/tamil-ie/media/media_files/uploads/2022/06/hh-1.jpg)
Islamophobic Prophet Remark; India faces diplomatic backlash from the Gulf nations
பாஜகவின் தேசிய செய்தித் தொடா்பாளராக இருந்த நுபுா் சா்மா, டெல்லி பாஜக ஊடகப் பிரிவுத் தலைவராக இருந்த நவீன் ஜிண்டால் ஆகியோர் இஸ்லாமிய இறைத் தூதா் நபிகள் நாயகம் குறித்து சா்ச்சைக்குரிய வகையில் தெரிவித்த கருத்துக்கு, இப்போது சர்வதேச அளவில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
இறைத் தூதா் குறித்த அவதூறு கருத்துகளுக்காக இஸ்லாமிய நாடுகள் இந்தியாவுக்குத் தொடா்ந்து கண்டனம் தெரிவித்தன. கத்தார், குவைத், ஈரான், சவூதி அரேபியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளும் இஸ்லாமிய ஒத்துழைப்புக்கான கூட்டமைப்பும் (ஓஐசி) கண்டனங்களைப் பதிவு செய்திருந்தன.
இந்நிலையில், நுபுர் ஷர்மா, நவீன் ஜிண்டால் இருவரும் கட்சிப் பொறுப்புகளில் இருந்தும் கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டனா்.
இந்த விவகாரம் குறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் அரிந்தம் பாக்சி திங்கள்கிழமை(ஜூன்;6) செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘ஆன்மிக ஆளுமையை இழிவுபடுத்தும் வகையிலான கருத்துகள் தனிநபா்களால் வெளியிடப்பட்டவை. அவை எந்தவிதத்திலும் இந்திய அரசின் கருத்துகளை எதிரொலிக்காது. சம்பந்தப்பட்ட நபா்கள் மீது, உரிய அமைப்புகள் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. அனைத்து மதங்களுக்கும் இந்தியா மதிப்பளித்து வருகிறது. குறிப்பிட்ட மதத்தைச் சோ்ந்த தலைவா்கள் யாரையும் அரசு இழிவுபடுத்த அனுமதிக்காது.. இந்த விவகாரம் குறித்து இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC) தெரிவித்த தேவையற்ற, குறுகிய மனப்பான்மை கொண்ட கருத்துகளை இந்தியா நிராகரிக்கிறது என்று அரிந்தம் பாக்சி கூறினார்.
இந்நிலையில், நபிகள் நாயகம் மற்றும் இஸ்லாம் குறித்து பாஜக தலைவர்களின் இழிவான கருத்துக்களால் வளைகுடா நாடுகளில், இந்தியா பயங்கரமான பின்னடைவை எதிர்கொண்டுள்ளது. அதன் ஒருபகுதியாக குவைத்தில் இருந்து இந்திய தயாரிப்புகள் வெளியேறத் தொடங்கியுள்ளன.
குவைத் நகரத்தில் உள்ள ஒரு சூப்பர் ஸ்டோரில், அல் அர்டியா கூட்டுறவு சங்கத்தின் தொழிலாளர்கள் இந்திய தேநீர் மற்றும் பிற பொருட்களை தங்கள் கடைகளில் இருந்து வெளியேற்றி, ”இஸ்லாமிய வெறுப்பு" என்று கண்டனம் தெரிவிக்கும் வீடியோவை, அரபு செய்திகள் வெளியிட்டன.
“நபியை அவமதித்ததால் இந்திய தயாரிப்புகளை புறக்கணித்தோம். குவைத் முஸ்லீம்களாகிய நாங்கள் தீர்க்கதரிசியை அவமதிப்பதை ஏற்றுக்கொள்ள மாட்டோம், ”என்று சூப்பர் ஸ்டோரின் தலைமை நிர்வாக அதிகாரி நாசர் அல்-முதாரி கூறினார்.
தொடர்ந்து வளைகுடா பிராந்தியத்தின் பல பகுதிகளில் இந்திய தயாரிப்புகளை புறக்கணிக்க பல அழைப்புகள் வந்துள்ளன, மேலும் இந்திய அரசாங்கத்தையும் பிரதமர் நரேந்திர மோடியையும் விமர்சிக்கும் ஹேஷ்டேக்குகள் பல நாடுகளில் சமூக ஊடகங்களில் டாப் டிரெண்டுகளாக இருந்தன.
வளைகுடா பிராந்தியத்தில் பல தசாப்தங்களாக இந்தியாவுடன் நெருங்கிய உறவுகளைக் கொண்ட மூன்று நாடுகளான - கத்தார், குவைத் மற்றும் ஈரான் - முகமது நபியைப் பற்றி கடந்த வாரம் சர்மா மற்றும் ஜிண்டால் வெளியிட்ட இழிவான கருத்துகளுக்கு எதிராக தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்ய தங்கள் நாடுகளுக்கான இந்திய தூதர்களை அழைத்ததை அடுத்து இது நடந்துள்ளது.
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணமாக கத்தார் சென்றிருந்த நேரத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.