டிசம்பர் 2021 க்குள் முதல் இந்தியர் நமது சொந்த ராக்கெட் மூலம் விண்வெளிக்கு அனுப்பப்படுவார் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
Advertisment
ரூ.978 கோடி ரூபாய் செலவில் நிலவுக்கு அனுப்பப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் பூமியில் இருந்து 3.8 லட்சம் கிலோ மீட்டர் பயணம் செய்த நிலையில், இருந்து விக்ரம் லேண்டர் தனியாகப் பிரிந்து நிலவின் தரைப்பகுதியை நோக்கி பயணத்தைத் தொடங்கியது.
நிலவின் தரைப்பகுதியில் விக்ரம் லேண்டரை மெதுவாக இறக்கும் பணியை கடந்த 7-ம் தேதி அதிகாலை இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடங்கினர். ஆனால் நிலவின் தரைப்பகுதிக்கு 2.1 கிலோமீட்டர் தொலைவில் விக்ரம் லேண்டர் இருந்தபோது அதன் சிக்னல் துண்டிக்கப்பட்டது.
Advertisment
Advertisements
இதனால் விக்ரம் லேண்டர் நிலவின் தரைப் பகுதியில் விழுந்திருக்கலாம் எனக் கருதப்பட்டது. அதைத் தொடர்ந்து சந்திரயான்-2 ஆர்பிட்டர் மூலம் விக்ரம் லேண்டர், நிலவின் தரைப்பகுதியில் ஒருபக்கம் சாய்ந்த நிலையில் விழுந்து இருப்பது கண்டறியப்பட்டது. தொடர்ந்து விக்ரமம் லேண்டரைத் தொடர்புகொள்ள இஸ்ரோ விஞ்ஞானிகள் கடந்த 14 நாட்களாக முயன்றபோதிலும் முடியவில்லை.
நிலவில் நாளை முதல் இரவுக்காலம் என்பதால் மைனஸ் 150 டிகிரிக்கும் மேல் குளிர் இருக்கும் என்பதால், விக்ரம் லேண்டரைத் தொடர்பு கொள்வது என்பது இனிமேல் இயலாது.
இந்தச் சூழலில் ஒடிசா மாநிலம் புவனேஷ்வர் நகரில் உள்ள ஐஐடி கல்வி நிறுவனத்தின் 8-வது பட்டமளிப்பு விழா இன்று நடந்தது. இதில் பங்கேற்ற இஸ்ரோ தலைவர் கே. சிவனிடம் விக்ரம் லேண்டர் குறித்தும், சந்திரயான்-2 குறித்தும் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
ககன்யான் குறித்து சிவன்
அவர் பதிலளிக்கையில், "விக்ரம் லேண்டரில் இருந்து இதுவரை எந்தவிதமான தகவல் தொடர்பும் இல்லை. இந்தத் திட்டம் இரு வகையில் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஒன்று அறிவியல், 2-வதாக தொழில்நுட்பம். அறிவியல் என்ற நோக்கத்தில் நாங்கள் முழுமையாக வெற்றி பெற்றுவிட்டோம். 2-வதாக தொழில்நுட்பம் விஷயத்தில் வெற்றியின் சதவீதத்தை ஏறக்குறைய முழுமையாக அடைந்துவிட்டோம். அதனால்தான் சந்திரயான்-2 திட்டம் 98 சதவீதம் வரை வெற்றி என்று கூறுகிறோம்.
விக்ரம் லேண்டரில் இருந்து தகவல்களை ஏன் பெற முடியவில்லை எங்கு தவறு நேர்ந்தது என்பது குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகி்ன்றனர். முழுமையான அறிவியல் ஆய்வுக்கு முழுமையான மனநிறைவு அடையும் வரை ஆர்பிட்டர் தொடர்ந்து இயங்கும். ஆர்பிட்டரில் 8 விதமான கருவிகள் இருக்கின்றன. ஒவ்வொரு கருவியும் எதற்காக வடிவமைக்கப்பட்டதோ அதற்கு ஏற்றார்போல் இயங்கும்.
ஆர்பிட்டர் முதலில் ஒரு ஆண்டுக்கு மட்டும் இயங்குமாறு திட்டமிடப்பட்டது. ஆனால், நமக்கு அறிவியல் ரீதியாக பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்வதற்காக ஆர்பிட்டர் ஏழரை ஆண்டுகள் இயங்குமாறு திட்டமிடப்பட்டது. எங்களின் அடுத்த திட்டம் ககன்யான் திட்டம். இந்தத் திட்டத்தின் இலக்குகளை அடுத்த ஆண்டுக்குள் அடைய முயல்வோம். பல்வேறு விஷயங்களில் நாங்கள் பணியாற்றி வருகிறோம்.
டிசம்பர் 2021 க்குள் முதல் இந்தியர் நமது சொந்த ராக்கெட் மூலம் விண்வெளிக்கு கொண்டு செல்லப்படுவார். இது எங்கள் இலக்கு, இஸ்ரோவில் உள்ள அனைவரும் அதை நோக்கி பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர்.
ககன்யான் திட்டம் இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானது, ஏனெனில் இது நாட்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப திறனை அதிகரிக்கும். ககன்யான் திட்டத்தை இந்தியா தொடங்கினால், அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவுக்குப் பிறகு இச்சாதனையைப் புரியும் நான்காவது நாடு என்ற பெயரைக் கைப்பற்றும். இந்த திட்டத்துக்கு சுமார் 10,000 கோடி ரூபாய் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது." என்று சிவன் கூறியுள்ளார்.