இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, MyGov.in உடன் இணைந்து பள்ளி மாணவர்களுக்கான வினாடி வினா போட்டியை நடத்த உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்கள், சந்திராயன் 2 விண்கலம், நிலவின் தெற்குபகுதியில் தரையிறங்கும் அரிய நிகழ்வை, பிரதமர் மோடியுடன் இணைந்து பார்க்கும் வாய்ப்பினை பெறுவர்.
பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட இளைய தலைமுறையினரிடையே, வானியல் துறை சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில், மத்திய அரசு, இஸ்ரோ உடன் இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு திட்டமிட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக, இந்த வினாடி வினா நடத்தப்பட உள்ளது.
மாணவர்கள் பங்கேற்பது எப்படி ?
8ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் இந்திய மாணவர்கள் இந்த போட்டியில் பங்கேற்கலாம். இதற்கு அவர்கள் MyGov.in இணையதளத்தில் தங்களது இ-மெயில் ஐடி, மொபைல் எண் உள்ளிட்டவற்றை கொண்டு, ஒன்டைம் பாஸ்வேர்டின் மூலம் பதிவு செய்ய வேண்டும். பேஸ்புக், டுவிட்டர், லிங்க்ட் இன் மூலமும் பதிவு செய்துகொள்ளலாம்.
இந்த வினாடி வினா போட்டியில், மாணவர்களுக்கு கேள்விகள் குறித்து தெரிவிக்க பெற்றோர்கள் அல்லது உதவியாளர்கள் வைத்துக்கொள்ளலாம். ஆனால், அவர்கள் பதில் சொல்லித்தரக்கூடாது என்பது உள்ளிட்ட நிபந்தனைகள் அந்த இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 நிமிட கால அளவிலான இந்த வினாடி வினா போட்டியின் மொத்த மதிப்பெண் 20 ஆகும். இந்த போட்டியில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெறும் மாணவர்கள், சந்திராயன் 2 விண்கலம், நிலவின் தென்பகுதியில் வெற்றிகரமாக தரையிறங்கும் நிகழ்வை, கர்நாடக மாநிலம் பெங்களூருவில், பிரதமர் மோடியுடன் இணைந்து கண்டு ரசிக்கலாம்.
மாணவர்களே...ஆல் தி பெஸ்ட்!!!!