'பி.எஸ்.எல்.வி. - சி 40' ராக்கெட் வெற்றிகரமாக இன்று விண்ணில் ஏவப்பட்டது.
'பி.எஸ்.எல்.வி. - சி 40' ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான, 28 மணிநேர, 'கவுன்ட் - டவுன்' நேற்று காலை, 5:29 மணிக்கு துவங்கியது.இன்று காலை 9.29 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. தற்போது விண்ணில் செலுத்தப்பட்டுள்ள, 'கார்டோசாட் - 2' செயற்கைக்கோள், இந்தியாவின், 100வது செயற்கைக்கோள்.
இந்திய விண்வெளி ஆய்வு மையமான, 'இஸ்ரோ' வர்த்தக ரீதியான ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்திவருகிறது. இதன் ஒரு பகுதியாக, இஸ்ரோவின் வடிவமைப்பான கார்டோசாட் - 2 ரக செயற்கைக்கோள் இன்று காலை 9:28 மணிக்கு, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இந்த பி.எஸ்.எல்.வி. - சி 40 ராக்கெட்டில், இந்தியா - 3, அமெரிக்கா, கனடா, பின்லாந்து, பிரான்ஸ், கொரியா மற்றும் பிரிட்டன் நாடுகளின் செயற்கைக்கோள்கள் 28 என மொத்தம், 31 செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டுள்ளன. கார்டோசாட் - 2 செயற்கைக்கோள், இந்தியாவின், 100வது செயற்கைக்கோள். இதன் எடை 710 கிலோ.
இதில், பூமியின் இயற்கை வளங்களை, பல்வேறு கோணங்களில் படமெடுத்து அனுப்பும் வகையில், சக்தி வாய்ந்த கேமராக்களும், தொலையுணர்வு கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த செயற்கைக்கோள், ராக்கெட் ஏவப்பட்ட 2:21 மணி நேரத்தில், பூமியில் இருந்து, 505 கி.மீ., உயரத்தில், புவிவட்ட பாதையில் நிலை நிறுத்தப்படும். இதன் ஆயுட் காலம், ஐந்து ஆண்டுகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.