IT woman body found 300 feet deep inside gorge in Lonavala: ஐதராபாத்தைச் சேர்ந்த ஐடி பெண் ஊழியர் ஒருவர் மகாராஷ்டிராவில் உள்ள லோனாவாலாவில் லயன்ஸ்பாய்ண்ட் மலைப்பகுதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். அந்த பெண்ணின் மரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மகாராஷ்டிரா மாநிலம்,லோனாவாலாவில் உள்ள லயன்ஸ் பாய்ண்ட் பகுதியில் மூன்று நாட்களுக்கு முன்பு ஒரு பெண்ணின் கைப்பை கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பையிலிருந்த பெண்ணின் அடையாள ஆவணங்கள் மற்றும் செல்போனை வைத்து அது யாருடையது என்று கண்டுபிடித்து அந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அந்த பெண் ஐதராபாத்தைச் சேர்ந்த அலிஜா ராணா என்றும் அவர் புனே அருகே உள்ள ஹிஞ்சேவாடி ஐடி பார்க்கில் உள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது.
மேலும், அலிஜா ராணா லயன்ஸ்பாய்ண்ட் பகுதிக்கு செப்டம்பர் 12 ஆம் தேதி வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். அந்தப் பெண் லயன்ஸ்பாய்ண்ட் பகுதியில் உள்ள மலையில் இருந்து பள்ளத்தில் விழுந்திருக்க வாய்ப்புள்ளது என்று கருதப்பட்டதால், தேடுதல் நடவடிக்கைக்கு உதவுமாறு போலீசாரால் ஷிவ்துர்க் மலையேற்றக் குழுவினர் அழைக்கப்பட்டனர். மலைப்பகுதியில் பெய்த தொடர் மழையிலும் நடத்தப்பட்ட தீவிர தேடுதல் பணியில், நேற்று மலையிலிருந்து 300 அடி பள்ளத்தில் அந்த பெண் சடலமாக மீட்கப்பட்டார். இந்த பெண்ணின் மரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இது தொடர்பாக லோனாவாலா காவல் நிலைய போலீசார் கூறுகையில், “அந்த பெண்ணின் மரணத்திற்கான காரணங்கள் குறித்து நாங்கள் விசாரணையைத் தொடங்கியுள்ளோம். அதற்காரணங்கள் எதையும் நாங்கள் புறக்கணிக்கவில்லை. இந்த திடீர் மரணம் தொடர்பான விசாரணை தொடக்கத்தில் உள்ளது. நாஙக்ள் அந்த பெண்ணின் குடும்பத்தினருடனும் வேலை செய்த இடத்திலும் தெரிந்தவர்களிடமும் பேசி வருகிறோம்” என்று கூறினார்.