பெண்களும் இப்போதும் பீர் குடிக்கத் தொடங்கிவிட்டதால் தான் அதுகுறித்து பயப்படுவதாக, கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலேயே அதிக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் குவியும் இடமாக கோவா உள்ளது. அங்குள்ள கடற்கரைகள் அதற்கு ஒரு காரணமாக உள்ளது. தவிர, அனைத்து வகை மதுபானங்கள், போதை பொருட்கள் அங்கு மிகவும் குறைந்த விலையிலும், எளிதிலும் கிடைக்கக் கூடியதாக உள்ளன.
இந்நிலையில், நிகழ்ச்சியொன்றில் இளைஞர்கள் மத்தியில் பேசிய கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர், ”பெண்களும் இப்போது பீர் குடிக்கத் தொடங்கிவிட்டது குறித்து நான் பயப்படுகிறேன். சகிப்புத்தன்மை வரம்பு கடந்து போய்விட்டது”, என கூறினார்.
மேலும், தான் எல்லோரையும் அவ்வாறு குறிப்பிடவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
போதைப்பொருட்கள் வணிகத்தை தடுப்பதற்கும், அதனை விற்பனை செய்யும் கும்பல்களை ஒழிக்கவும், அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த மனோகர் பாரிக்கர், போதைப்பொருள் புழக்கம் பூஜ்ஜிய அளவில் ஒழியும் என தான் நம்பிக்கைக் கொள்ளவில்லை என கூறினார். கல்லூரிகளில் போதைப்பொருட்களின் பெருக்கம் அவ்வளவாக இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், கோவா இளைஞர்கள் கடின உழைப்பை நம்பவில்லை என அவர் தெரிவித்தார். கிளர்க் வேலைக்கு நீண்ட வரிசையில் கோவா இளைஞர்கள் காத்திருப்பதாகவும், அரசு வேலை என்பது வேலை செய்யாமலிருப்பது என அவர்கள் நினைத்துக் கொண்டிருப்பதாகவும் மனோகர் பாரிக்கர் கூறினார்.