/tamil-ie/media/media_files/uploads/2023/08/jagan-modi.jpg)
ஜெகன் மோகன் ரெட்டி - நரேந்திர மோடி
தெலுங்கு தேசம் கட்சியை மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் அனுமதிப்பது குறித்த இறுதி அழைப்பு விடுக்கப்படவில்லை என்றாலும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஒரு வலுவான தேர்தல் சக்தி என்றும், அதைத் தன் பக்கம் வைத்திருப்பது நீண்ட காலத்திற்கு பலனளிக்கும் என்றும் பா.ஜ.க நம்புகிறது.
ஒரு ஆரம்ப கால இயக்கத்திற்குப் பிறகு, ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை (YSRCP) ஆதரிப்பதில் பா.ஜ.க ஆர்வமாக இருப்பதால், ஆந்திரப் பிரதேசத்தில் பா.ஜ.க - தெலுங்கு தேசம் கட்சி கூட்டணிக்கான சாத்தியம் கலைந்து வருவதாகத் தெரிகிறது. அரசியல் சூழ்நிலையை இன்னும் முழுமையாக மதிப்பிட்ட பின்னரே, தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி சாத்தியமா அல்லது தேர்தல் புரிந்துணர்வுக்கான இறுதி அழைப்பு மேற்க்கொள்ளப்படும் என்று பா.ஜ.க வட்டாரங்கள் தெரிவித்தன.
தற்போது டெல்லியில் இருக்கும் சந்திரபாபு நாயுடு, ஜூன் மாதத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை மாலையில் சந்தித்துப் பேசியது போல் பா.ஜ.க தலைவர்கள் எவரையும் சந்திக்க வாய்ப்பில்லை. அந்தச் சந்திப்புகள், வரும் தேர்தலுக்கு முன்னதாக, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் லோக்சபா மற்றும் சட்டமன்றத் தேர்தல்கள் இரண்டிலும், முன்னாள் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே சாத்தியமான கூட்டணி பற்றிய சலசலப்பை ஏற்படுத்தியது. திங்கள்கிழமை சந்திரபாபு நாயுடு தனது கட்சித் தலைவர்களுடன் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாரைச் சந்தித்து, ஆந்திரப் பிரதேசத்தின் வாக்காளர் பட்டியலில் ஏராளமான போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுவது குறித்து புகார் அளித்தார்.
2014 மற்றும் 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் ஆந்திரப் பிரதேச மக்களவைத் தொகுதிகள்
ஆந்திரப் பிரதேச வாக்குப் பகிர்வு 2014 மற்றும் 2019 மக்களவைத் தேர்தல்களின் வாக்குப் பங்குகள்
சந்திரபாபு நாயுடு பா.ஜ.க தலைமையிடமிருந்து சாதகமான பதிலுக்காகக் காத்திருக்கும் அதே வேளையில், மாநிலத்தின் தற்போதைய அரசியல் சூழ்நிலையைக் கட்சி கணக்கில் எடுத்துக்கொண்டதாகத் தெரிகிறது. பா.ஜ.க தலைமை ஆந்திரப் பிரதேசத்தின் அரசியல் நிலைமையை முதற்கட்ட மதிப்பீட்டை மேற்கொண்டதாகவும், 25 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட அம்மாநிலத்தில் வலுவான தேர்தல் சக்தியாக இருக்கும் என்பதால், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி உடனான தனது அன்பான உறவைத் தொடர ஆர்வமாக உள்ளதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2019 மக்களவைத் தேர்தலில் 22 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
பா.ஜ.க மறுபரிசீலனை செய்வது ஏன்?
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தேர்தலில் நல்ல நிலையில் இருப்பதாகவும், அதன் அரசாங்கத்தின் நலத்திட்டங்கள் பிரபலமாக இருப்பதை நிரூபிப்பதாகவும், அதேசமயம், கடந்த நான்கரை ஆண்டுகளாக களத்தில் உள்ள அரசுக்கு எதிரான வாக்குகளை ஒருங்கிணைக்க தெலுங்கு தேசம் கட்சி தவறிவிட்டதாகவும் பா.ஜ.க தலைவர்கள் தெரிவித்தனர். . டிசம்பர் 2022 முதல் ஜூலை 2023 வரை பல்வேறு நலத் திட்டங்களில் இருந்து விடுபட்ட 2,62,169 பயனாளிகளுக்கு தனது அரசு ரூ.216.34 கோடியை வழங்கியுள்ளதாக ஜெகன் மோகன் ரெட்டி சமீபத்தில் அறிவித்தார். ஏதாவது காரணத்தால், தகுதியான எவருக்கும் நலத்திட்ட உதவிகள் கிடைக்காமல் போகவில்லை என்பதை தனது அரசு உறுதி செய்யும் என்று ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கூறியுள்ளார். “ஜெகன்னா சுரக்ஷா திட்டம் என அவர் பெயரிட்ட இந்த புதிய திட்டத்துடன், திட்டங்களை முத்திரை குத்துவதற்கு பரவலாகப் பயன்படுத்தப்பட்ட தனது தந்தையின் முதலெழுத்துக்களான ஒய்.எஸ்.ஆர்-ஐ நீக்கிவிட்டார். இந்த திட்டம் மாநிலத்தில் உள்ள ஒட்டுமொத்த ஏழை மக்களையும் உள்ளடக்கும் வகையில் உள்ளது. மேலும், இது அவருக்கு தேர்தல் களத்தில் நிறைய நன்மைகளை அளிக்கும் என்று பா.ஜ.க தலைவர் ஒருவர் கூறினார்.
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் சௌகரியமான தேர்தல் நிலை, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு (என்டிஏ) திரும்ப ஆசைப்பட்டு வரும் தெலுங்கு தேசம் கட்சியை (டி.டி.பி) பா.ஜ.க மறுபரிசீலனை செய்ய வைக்கிறது என்று பா.ஜ.க வட்டாரங்கள் தெரிவித்தன. ஜெகன் மோகன் ரெட்டி இதுவரை பா.ஜ.க-வில் இருந்து முறையாக என்.டி.ஏ-வில் சேருவதற்கான அழுத்தத்தை எதிர்த்துள்ளார். ஆனால், ஒவ்வொரு முக்கியமான தருணத்திலும் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்தை ஆதரித்து வருகிறார். மழைக்கால கூட்டத்தொடரின் போது காங்கிரஸ் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எதிர்த்தது. தேசிய தலைநகர் பிரதேச (NCT) திருத்த மசோதாவில் அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்தது. இந்த மசோதா பின்னர் சட்டமாகி, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை ஓரங்கட்டுவதற்கும், அரசு ஊழியர்களின் கட்டுப்பாட்டை லெப்டினன்ட் கவர்னரிடம் ஒப்படைப்பதற்கும் கூட்டாட்சி கொள்கையின் மீறல் என்று எதிர்க்கட்சிகளால் விவரிக்கப்பட்டது.
ஆந்திரப் பிரதேசம் 2014 மற்றும் 2019 இல் சட்டமன்ற தொகுதிகளில் வாக்களித்த விதம்
சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பகிர்வு; 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆந்திர சட்டமன்றத் தேர்தல்களின் வாக்குப் பங்குகள்
“தெற்கில் பா.ஜ.க-வின் முன்னுரிமை (அதன் தேர்தல் இருப்பு குறைவாக உள்ளது) காங்கிரஸைச் எதிர்ப்பதாக இருக்க வேண்டும். கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் காங்கிரஸின் ஆதரவு குறைவாக இருப்பதை பா.ஜ.க உறுதி செய்ய வேண்டும். ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கு அதிக வாய்ப்பு உள்ளது” என்று பா.ஜ.க தலைவர் ஒருவர் கூறினார்.
ஆந்திராவில் பா.ஜ.க இதுவரை ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை அல்லது அம்மாநிலத்தில் அதன் வாக்கு சதவீதத்தை கணிசமாக உயர்த்தவில்லை. ஜெகன் மோகன் ரெட்டி அரசுக்கு எதிராக மாநில பிரிவின் முன்முயற்சிகள் மற்றும் தொடர்ச்சியான போராட்டத் திட்டங்கள் இருந்தபோதிலும், தேசிய அரசியல் அரங்கில் ஜெகனுடனான நட்புறவு காரணமாக அக்கட்சியால் குறிப்பிடத்தக்க முத்திரையைப் பதிக்க முடியவில்லை என்று பா.ஜ.க வட்டாரங்கள் தெரிவித்தன.
சமீபத்தில் டி. புரந்தேஸ்வரியை மாநில பா.ஜ.க தலைவராக நியமித்தது கூட, அக்கட்சி வட்டாரங்களின் கருத்துப்படி, அம்மாநிலத்தில் அதன் முக்கிய ஆதரவு தளத்தை விரிவுபடுத்துவதற்கான முயற்சியாகும். முன்னாள் மத்திய அமைச்சரும், சந்திரபாபு நாயுடுவின் மைத்துனியுமான புரந்தேஸ்வரி, தெற்கில் மிகவும் பிரபலமான தலைவர்களில் ஒருவரான தனது தந்தை என்.டி.ராமராவின் பாரம்பரியத்தை எடுத்துச் செல்வார் என்று கருதப்படுகிறது. அவர் வெளிப்படையானவர், மோடி அரசாங்கத்தின் மக்கள் நல நடவடிக்கைகளின் செய்தியை எடுத்துச் செல்ல முடியும் என்று பா.ஜ.க மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார். “ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் ஒரு குறிப்பிடத்தக்க அடித்தளத்தை உருவாக்க அவர் கட்சிக்கு அதிக வாக்குகளைப் பெற முடியும், அங்கிருந்து அதை மேலும் உருவாக்க முடியும்” என்று ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த பா.ஜ.க தலைவர் ஒருவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.