விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜகன் மோகன் ரெட்டி மீது இளைஞர் ஒருவர் கத்தியால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்தின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவராக இருந்து வருபவர் ஜகன் மோகன் ரெட்டி. ஆந்திர மக்களின் செல்வாக்கு மிக இளம் தலைவர்களில் இவரும் ஒருவர். இந்நிலையில், விசாகப்பட்டினம் விமான நிலையத்திற்கு ஜகன் மோகன் ரெட்டி இன்று வந்த போது, இளைஞர் ஒருவர் அவருடன் செல்ஃபி எடுக்க முயன்றார். செல்ஃபி எடுத்த போது, திடீரென அந்த இளைஞர் தான் மறைத்து வைத்திருந்த சிறிய ரக கத்தியை எடுத்து ஜகன் மோகன் ரெட்டியின் கையில் குத்தியதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இந்த தாக்குதலால் ஜகன் மோகன் ரெட்டியின் இடது கையில் ரத்த காயம் ஏற்பட்டது.
உடனடியாக அந்த இளைஞரை மடக்கி பிடித்து கைது செய்த போலீசார், ஜகன் மோகன் ரெட்டியை சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். பிடிபட்ட இளைஞர் விமான நிலையத்தில் உள்ள உணவகத்தில் பணியாற்றும் சீனிவாஸ் என தெரியவந்துள்ளது.
போலீஸ் விசாரணையில் ஸ்ரீநிவாஸ், 'ஜகன் ஆட்சி பொறுப்புக்கு வருவதை நான் விரும்பவில்லை' என்று சொன்னதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து ஜகன் கூறுகையில், "தெலுங்கு தேசம் கட்சி தான் இந்த விவகாரத்துக்குப் பின்னணியில் இருக்கிறது. அந்தக் கட்சியைச் சேர்ந்த ஒரு தலைவரின் கேன்டீனில் தான் ஸ்ரீநிவாஸ் வேலை செய்கிறார். இதிலிருந்தே, இது அவர்களின் செயல் என்பது தெளிவாகிவிட்டது' என்று குற்றம் சாட்டியுள்ளார்.
ஆனால், இந்த சம்பவம் குறித்து தெலுங்கு தேசம் கட்சி தரப்பு கூறுகையில், "ஜகன் மோகன் ரெட்டி மீது நடந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. விமான நிலையத்தில் இருக்கும் பாதுகாப்பு, மத்திய அரசின் கட்டுபாட்டில் வருகிறது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும்" என்று விளக்கம் அளித்துள்ளது.