இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாளுக்கு கிடைத்த தகவலின்படி, கடந்த ஆண்டு பிப்ரவரியில், அப்போதைய துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கரின் 3 உயர் பாதுகாப்பு பி.எம்.டபிள்.யூ கார்களின் ஆயுட்காலம் முடிவடைந்ததால், அவருக்கு துப்பாக்கி குண்டு துளைக்காத புதிய புல்லட்புரூஃப் வாகனங்களை துணை குடியரசுத் தலைவர் செயலகம் கோரியுள்ளது. ஜூன் மாதத்தில், மத்திய உள்துறை அமைச்சகம் (MHA) இது குறித்து ஆராய ஒரு குழு அமைக்கப்படும் என்று கூறியுள்ளது. ஆனால், நவம்பர் மாதத்திற்குள், அவரது அலுவலகம் புல்லட்புரூஃப் அல்லாத இன்னோவா காரைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளது. அதன் பிறகு அவர் அந்த காரில் தான் பயணித்து வருகிறார்.
ஆங்கிலத்தில் படிக்க:
உடல்நலக் காரணங்களை மேற்கோள் காட்டி, தான் துணை குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக ஜூலை 22-ம் தேதி ஜெகதீப் தன்கர் அறிவித்தார்.
சில தகவல்களின்படி, கடந்த ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதி, துணை குடியரசுத் தலைவரின் செயலகத்திலிருந்து, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளருக்கு (காவல்துறை நவீனமயமாக்கல் பிரிவு) அவரது அதிகாரபூர்வ வாகனங்களின் நிலை குறித்து ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்தத் தகவலை, துணை குடியரசுத் தலைவர் செயலகத்தின் அப்போதைய துணைச் செயலாளர் எழுதியுள்ளார். அதில், “கௌரவ துணை குடியரசுத் தலைவர் அவர்கள் அன்றாடப் பயணங்களுக்காக 3 புல்லட்புரூஃப் பி.எம்.டபிள்யூ உயர் பாதுகாப்பு வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த 3 வாகனங்களில், 2 வாகனங்கள் 6 ஆண்டுகளுக்கு மேலானவை, மூன்றாவது வாகனம் ஏறத்தாழ 4 ஆண்டுகள் மற்றும் 5 மாதங்கள் பழமையானது. அதுவும் இன்னும் சில மாதங்களில் 5 ஆண்டுகளுக்கு மேலாகிவிடும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
“இந்த 3 வாகனங்களையும் புல்லட்புரூஃப் உயர் பாதுகாப்பு கொண்ட புதிய வாகனங்களாக மாற்றுவதற்கான செயல்முறையை விரைவில் தொடங்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது” என்றும் அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு, இதேபோன்ற ஒரு கடிதம் டெல்லி காவல்துறையின் பாதுகாப்புப் பிரிவுக்கு அனுப்பப்பட்டதாகவும், ஆனால், வாகனங்களை வாங்கும் பணி மத்திய உள்துறை அமைச்சகத்தால் கையாளப்படுவதாகக் காவல்துறை தெளிவுபடுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிப்ரவரி 28-ம் தேதி கடிதத்திற்குப் பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சகத்தின் துணைச் செயலாளர், ஜூன் 12, 2024-ல் துணை குடியரசுத் தலைவர் செயலகத்திற்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், சம்பந்தப்பட்ட 3 வாகனங்களையும் ஆய்வு செய்ய அதிகாரிகள் குழு ஒன்றை அமைப்பதாகத் தெரிவித்தார். இதில், தேசிய பாதுகாப்புப் படை (NSG) மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) ஆகியவற்றிலிருந்து புல்லட்புரூஃப் வாகனங்களின் தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் வாய்ந்த 6 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று துணைச் செயலாளர் எழுதியிருந்தார்.
துணை குடியரசுத் தலைவருக்கு டெல்லி காவல்துறையால் இசட்-பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. நவம்பர் 28-ம் தேதி, டெல்லி காவல்துறையால் வெளியிடப்பட்ட ஒரு உள் தகவலில், துணை குடியரசுத் தலைவரின் செயலகம் ஜெகதீப் தன்கரின் புல்லட்புரூஃப் வாகனங்களை மாற்றியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏனெனில், அவற்றின் "ஐந்து வருட ஆயுட்காலம்" முடிந்துவிட்டது. புதிய வாகனம் ஒரு இன்னோவா என்றும், மாற்று வாகனம் ஒரு ஃபார்ச்சூனர் என்றும், இரண்டுமே புல்லட்புரூஃப் அல்ல என்றும் அது குறிப்பிட்டது.
துணை குடியரசுத் தலைவரின் ஓ.எஸ்.டி. (OSD) மற்றும் செயலாளர் ஆகியோரிடம் இந்த வாகனங்கள் புல்லட்புரூஃப் அல்ல என்றும், தேவைப்பட்டால் அத்தகைய வாகனங்களை டெல்லி காவல்துறையிடமிருந்து பெறலாம் என்றும் கூறப்பட்டபோது, அந்த யோசனை நிராகரிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இது குறித்து துணை குடியரசுத் தலைவர் செயலகம், மத்திய உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர், சிறப்பு காவல் ஆணையர் (பாதுகாப்புப் பிரிவு) ஜஸ்பால் சிங் மற்றும் டெல்லி காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் ஆகியோருக்கு அனுப்பப்பட்ட கேள்விகளுக்கு எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.