இந்தியாவின் 14ஆவது குடியரசுத் துணை தலைவராக மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் ஜெகதீப் தன்கர் இன்று (ஆகஸ்ட் 11) பதவியேற்றுக் கொண்டார். ராஷ்டிரபதி பவனில் நடந்த விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தன்கருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். தன்கர் மாநிலங்களவை தலைவராகவும் செயல்பட உள்ளார்.
குடியரசுத் துணை தலைவர் தேர்தல் கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி நடைபெற்றது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ஜெகதீப் தன்கர் போட்டியிட்டார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மார்கரெட் ஆல்வா போட்டியிட்டார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் தன்கர் 346 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மொத்தம் 780 வாக்குகளில் 725 வாக்குகள் பதிவாகின. தங்கர் 528 வாக்குகளும், அல்வா 182 வாக்குகளும் பெற்றனர். 50 உறுப்பினர்கள் வாக்குப்பதிவுக்கு வரவில்லை. 15 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டது.
1951ஆம் ஆண்டு ராஜஸ்தானின் ஜுன்ஜுனு மாவட்டத்தில் விவசாயி குடும்பத்தில் பிறந்தவர் தன்கர். பள்ளி படிப்பை முதலில் உள்ளூரில் தொடர்ந்தார். பின் வேறு ஊரு சென்று படித்தார்.
மேற்கு வங்க ஆளுநராக தன்கர் நியமிக்கப்பட்டார். மம்தா அரசை எதிர்கொண்டார். மம்தா அரசுக்கும் ஆளுநருக்கும் தொடர்ந்து மோதல் போக்கு இருந்ததாக செய்திகள் வெளியாகின. முதல்வர் மம்தா பானர்ஜி சமூக வலைதளங்களில் தன்கரை பிளாக் செய்யும் அளவிற்கு அப்போது பிரச்சனை இருந்தது. ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டது.