வட சென்னை பகுதியில் கட்டப்பட உள்ள மிகப்பெரிய துறைமுகத்தால், அலையாத்தி காடுகளும் உவர் சதுப்பு நிலமும், அடர்ந்த பசுமை வளம் கொண்ட மணல் குன்றுகளும் அடங்கிய எண்ணூர் - பழவேற்காடு உயிர்ச்சூழல் திரும்பவும் சரி செய்ய முடியாத அளவுக்குச் சிதைந்து போகும் என்று முன்னாள் சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் மாநிலங்களவையில் பேசியுள்ளார்.
இன்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் ஜீரோ நேரத்தில் ஜெய்ராம் ரமேஷ் எம்.பி பேசியதாவது:
அநீதி எங்கே நடந்தாலும் அது எல்லா நீதிகளுக்கும் ஆபத்தானது என்று டாக்டர் மார்ட்டின் லூதர் கிங்கின் மிகவும் புகழ்பெற்ற வாசகமாகும். அது இன்றைக்கும் பொருத்தம் உள்ளதாக இருக்கிறது. ஆனால், அந்த வாசகத்துடன் நாம் மற்றொன்றையும் உணர்ந்துகொள்ள வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம். ஏதோ ஓர் இடத்தில் ஏற்படும் சுற்றுச்சூழல் அழிவு அனைத்து இடங்களின் உயிர்ச்சூழலுக்கும் ஏற்படும் அபாயமாகும்.
ஐயத்திற்குரிய சுற்றுச்சூழல் தகுதிகளைக் கொண்ட தனியார் கம்பெனி ஒன்று வட சென்னையில் மிகப்பெரும் துறைமுகம் ஒன்றைக் கட்ட உள்ளது. அப்படி அந்த துறைமுகம் கட்டப்பட்டால், மதிப்பிட முடியாத அலையாத்தி காடுகளும், உவர் சதுப்பு நிலமும், கடலுக்கும் ஏரிக்கும் இடையில் மெல்லிய தீவு போல நீளும் அடர்ந்த பசுமை வளம் கொண்ட மணல் குன்றுகளும் அடங்கிய எண்ணூர் - பழவேற்காடு உயிர்ச்சூழல் திரும்பவும் சரி செய்ய முடியாத அளவுக்குச் சிதைந்து போகும். கடலையும் இந்தியாவின் இரண்டாவது உவர் நீர் ஏரியான பழவேற்காட்டையும் பிரிக்கும் இந்த மெல்லிய தீவு கடல் சார்ந்த இயற்கை அபாயங்களிலிருந்து பிராதான நிலப் பகுதியைக் காக்கும் இயற்கை அரண் என்பதையும் நாம் மறக்கக் கூடாது.
அழிவை ஏற்படுத்திய புயல்களிலிருந்தும், நிலத்தடி நீரில் உப்புதன்மை ஊடுருவலில் இருந்தும் காட்டுப்பள்ளி மணல் குன்றுகள் உள்நாட்டுப் பகுதிகளைக் காக்கின்றன. எண்ணூர் - பழவேற்காடு உப்பங்கழிகள் மழைநீரையும், புயலால் ஏற்படும் கடல் எழுச்சியையும் உள்வாங்கிக்கொள்கின்றன. இந்த சதுப்பு நிலத்தை ஆக்கிரமிப்பது இந்த பிராந்தியத்தில் வாழும் 10 லட்சம் பேரை பேரழிவு ஏற்படுத்தும் வெள்ள அபாயத்துக்குத் தள்ளிவிடும்.
துறைமுகத்தின் அலை தடுப்பான்கள், பழவேற்காடு ஏரியையும் கடலையும் பிரிக்கும் குறுகிய இயற்கை பாதுகாப்பு அரணை அரித்துவிடும். இதன் விளைவாக, ஏரியும் வங்கக் கடலும் ஒன்றாக ஆகிவிடும். பழவேற்காட்டையும் கடலையும் நம்பி வாழும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதுகாப்பும் இந்த துறைமுகத் திட்டத்தினால் அபாயத்துக்கு ஆளாகியுள்ளன" என்று தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.