இந்தியா மற்றும் சீனா இடையேயான ஒப்பந்தத்தின்படி, கிழக்கு லடாக்கின் டெம்சாக் மற்றும் டெஸ்பாங் பகுதிகளில் ரோந்து பணிகள் நடைபெற்றன. மேலும், எல்லை பகுதியில் இருந்து இரு நாட்டு படைகளும் பின்வாங்கியது, சில முன்னேற்றங்களுக்கு வழிவகுத்ததாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
அரசு முறை பயணமாக ஆஸ்திரேலியே சென்றுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அங்கு கலந்துரையாடினார். அப்போது, "இந்தியா மற்றும் சீனா இடையே சில முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சில காரணங்களுக்காக இந்தியா மற்றும் சீனா இடையே கடந்த காலங்களில் சிக்கல் நிலவியது பலருக்கும் தெரியும். எல்லையில் இரு நாட்டு படைகளும் பின்வாங்கியது மூலம் சில முன்னேற்றங்கள் எட்டப்பட்டுள்ளன. இதற்கு முன்னர், விரும்பத்தகாத செயல்கள் அரங்கேறும் அளவிற்கு எல்லையில் இருநாட்டு படையினரும் இருந்தனர்" எனத் தெரிவித்துள்ளார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Some progress, opens possibility for other steps: Jaishankar on India-China disengagement
"எப்போதும் இல்லாத அளவிற்கு 2020-ஆம் ஆண்டில் சீனா தனது படையை எல்லை பகுதியில் குவித்தது. இதற்கு பதிலளிக்கும் விதமாக நாமும் செயல்பட்டோம். அந்த காலகட்டத்தில் இரு நாட்டின் மற்ற உறவுகளும் பாதிக்கப்பட்டன. எல்லையில் படைகள் பின்வாங்கப்பட்டுள்ள சூழலில் நாம் எதை நோக்கி பயணிக்க வேண்டுமென பார்க்க வேண்டும். எல்லைப் பகுதியில் இருந்து படைகள் பின்வாங்கப்பட்டது வரவேற்கத்தக்க முடிவு தான். இதன் மூலம், சில முன்னேற்றங்கள் ஏற்படுவதற்கான சூழல் உருவாகியுள்ளது" எனவும் ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.
"கடந்த மாதம், ரஷ்யாவில் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜிங்பிங் ஆகியோர் சந்தித்தனர். மேலும், இருநாட்டு பாதுகாப்பு ஆலோசகர்களும், நானும் சந்திப்பதற்கான எதிர்பார்ப்புகள் உள்ளன" என அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக கடந்த அக்டோபர் 21-ஆம் தேதி இந்தியா மற்றும் சீனா இடையே எல்லை ரோந்து பணிகள் குறித்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்திருந்தார்.
இரு நாடுகளுக்கு இடையே அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள ஜெய்சங்கர் முதல் கட்டமாக ஆஸ்திரேலியே வந்துள்ளார். அதன்பின்னர், சிங்கபூருக்கு அவர் செல்லவிருக்கிறார். இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற கூட்டத்தில் ரஷ்யா - உக்ரைன் போர் மற்றும் இஸ்ரேல் - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள பதற்றம் குறித்து அவர் பேசியுள்ளார்.
“இரு நாட்டுக்கும் இடையேயுள்ள சூழலை சீரமைக்க ஏதாவது ஒரு வகையில் முயற்சி செய்து வருகிறோம். கடந்த ஜூலை மாதம் ரஷ்யாவிற்கு, ஆகஸ்ட் மாதம் உக்ரைனுக்கும் பிரதமர் மோடி சென்றார். மற்ற உலக நாடுகள் இந்த விவகாரத்தில் தங்கள் கைகளை விரித்து, இருவரும் மோதிக் கொள்ளட்டும், ஒரு கட்டத்தில் அவர்களே சோர்வடைவார்கள் என காத்திருக்க கூடாது“ என ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
மேலும், பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காண நாம் முயன்று வருவதாகவும் ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, தனது பயணத்தை குறிக்கும் விதமாக கடந்த 10 ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவுடனான இருதரப்பு உறவுகளில் நல்ல மாற்றம் அடைந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
வரும் 7-ஆம் தேதி ஆஸ்திரேலியாவுடனான பயணத்தை நிறைவு செய்யும் ஜெய்சங்கர், 8-ஆம் தேதி சிங்கப்பூருக்கு செல்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.