ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தின் பயிற்சி முகாமாக பாலகோட்டிலிருக்கும் மசூதி பயன்படுத்தப்பட்டிருப்பதாக, இந்திய விமானப்படை தாக்குதலுக்குப் பின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
6 ஏக்கர் பரப்பளவில் 5-6 கட்டிடங்களை உள்ளடக்கியிருக்கும் அந்த இடத்தில், சுமார் 600 பேர் தங்கும் வசதிகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. பயிற்சி முடிந்ததும் 4 வெவ்வேறு வழிகளில் அவர்கள் ஜம்மூ காஷ்மீருக்கு அனுப்பப்படுகிறார்களாம். ஐ.சி. 814 கடத்தல் மற்றும் 2002 கோத்ரா கலவர வீடியோக்களை காட்டி, அந்த இடம் தீவிரவாத பயிற்சிக்கு பயன்படுத்தப்பட்டிருப்பதாக உளவுத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அதோடு, தவ்ரா-இ-காஸ் போன்ற அடிப்படை மூன்று மாத சர்டிஃபிகேட் கோர்ஸ் மற்றும் டவ்ம்-அல்-ராட் போன்ற அட்வான்ஸ்டு கோர்ஸும் கற்பிக்கப்படுகிறதாம்.
ஏ.கே 47, மிஷின் துப்பாக்கி, எல்.எம்.ஜி, ராக்கெட் ஏவுதளம், கிரேனேட் ஏவுகணை போன்றவைகளை கையாளவும் அங்கு பயிற்சி கொடுக்கப்படுவதாகவும் உளவுத்துறை தெரிவித்துள்ளது. அடிப்படை பயிற்சிகளுக்குப் பிறகு, ஆயுதம் கையாளுதல், காடுகளில் வாழ்தல், ஜி.பி.எஸ் மற்றும் மேப்களின் மூலம் தொடர்பை தொடரவும் கற்றுக் கொடுக்கப்படுகிறதாம்.
உளவுத்துறையின் தகவலின் படி, தீவிரவாதிகள் தினம் குரான் வாசிப்பு மற்றும் உடற்பயிற்சியை முடித்து விட்டு, தங்களது அன்றாட வேலைகளை அதிகாலை 3 மணிக்கு தொடங்குகிறார்களாம். பின்னர் கவசம் அணிந்துக் கொள்வது, பதுங்கியிருந்து தப்பிப்பது எப்படி போன்ற பயிற்சியைப் பெறுகிறார்களாம்.
வருடந்தோறும் 200-300 பேர் எந்த நேரத்திலும் இங்கு தீவிரவாத பயிற்சி எடுத்துக் கொள்வதாகவும் உளவுத்துறை கண்டறிந்திருக்கிறது.