ஜெய்சங்கர் உச்சம் தொட்ட கதை : அமெரிக்க நிகழ்வால் மோடி மனதில் இடம் பிடித்தார்

மத்திய அமைச்சராக ஜெய்சங்கர் பதவியேற்றபின்னர், அவரை முதன்முதலாக வாழ்த்தியவர் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.

By: Updated: May 31, 2019, 06:08:57 PM

பிரதமர் மோடி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எனும் உயரிய பதவியை, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட ஜெய்சங்கருக்கு வழங்கி கவுரவித்துள்ளார். வெளியுறவுத்துறை செயலராக சாதித்து காட்டிய ஜெய்சங்கர், வெளியுறவுத்துறை அமைச்சர் பதவியிலும் சாதித்துக்காட்டுவார் என்ற நம்பிக்கை அனைவரிடத்திலும் ஏற்பட்டுள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான 17வது மத்திய அமைச்சரவை, நேற்று ( மே 30ம் தேதி) ராஷ்டிரபதி பவனில் பதவியேற்றது. பாதுகாப்புத்துறை இலாகா ராஜ்நாத் சிங்கிற்கும், உள்துறை – அமித் ஷா, நிதித்துறை – நிர்மலா சீத்தாராமன், வெளியுறவுத்துறை – ஜெய்சங்கருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

வெளியுறவுத்துறை செயலராக இருந்த ஜெய்சங்கர், எவ்வாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பதவிக்கு உயர்ந்தார் என இக்கட்டுரையில் காண்போம்….

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் போது, இந்தியா- அமெரிக்கா நாடுகளுக்கு இடையே, அணு ஆயுத ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் தயாரிப்பு நிலையில் இருந்து நடைமுறைக்கு வருவதுவரையிலான அனைத்து நடவடிக்கைகளையும் திறம்பட மேற்கொண்டார் அப்போதைய வெளியுறவுத்துறை செயலர் ஜெய்சங்கர் .
மத்திய அமைச்சராக ஜெய்சங்கர் பதவியேற்றபின்னர், அவரை முதன்முதலாக வாழ்த்தியவர் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தின் பிரதிநிதிகளாக 2 மத்திய அமைச்சர்கள்

1977 பேட்ச் ஐ.எப்.எஸ் அதிகாரியான ஜெய்சங்கர், வெளியுறவுத்துறை செயலர் சுஜாதா சிங்கின் பதவிக்காலம் முடிவதற்கு முன்பாகவே, 2015 ஜனவரியில், பிரதமர் மோடியால், வெளியுறவுத்துறை செயலராக நியமிக்கப்பட்டார்.
பிரதமர் மோடி, 2014ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அமெரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது, அப்போதைய அதிபர் பாரக் ஒபாமாவுடனான சந்திப்பு மற்றும் மேடிசன் ஸ்கொயர் பகுதியில் அமெரிக்க வாழ் இந்தியர்களுடனான கலந்துரையாடல்களில், ஜெய்சங்கரின் பங்களிப்பு மற்றும் நடவடிக்கைகள் உள்ளிட்டவைகள் பிரதமர் மோடிக்கு மிகவும் பிடித்துப்போனது. மேடிசன் ஸ்கொயரில் அமெரிக்காவாழ் இந்தியர்களுடனான சந்திப்பு, சர்வதேச அரங்கில், மோடியின் மதிப்பை பன்மடங்கு அதிகரித்தது என்பது மறுப்பதற்கில்லை.

வெளியுறவுத்துறை செயலராக பதவி வகித்த காலத்தில், மோடியின் கருத்தை உள்வாங்கிக்கொண்டு அதற்கேற்ப செயல்திட்டங்களை தயாரித்து திறன்மிகு மற்றும் உறுதியான நாடாக இந்தியாவின் கொள்கைகளை மேம்படுத்தினார். ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இஸ்ரேல் உள்ளிட்ட மேற்கு ஆசிய நாடுகளுடன் நட்புறவு, ஜப்பான் உடனான அணு ஆயுத ஒப்பந்தம், சீனாவுடனான டோக்லாம் விவகாரத்தில் மதிநுட்பத்துடன் கூடிய நடவடிக்கை உள்ளிட்ட அம்சங்கள், ஜெய்சங்கரிடமே உரித்தான சிறப்பம்சங்கள் ஆகும்.மோடி அரசில், இத்தகைய அளப்பரிய செயல்களை செய்த ஜெய்சங்கருக்கு பிரதமர் மோடி வெகுமதியாக, ஓராண்டு பணிநீட்டிப்பு வழங்கினார்.

2015 முதல் 2018ம் ஆண்டுவரையிலான காலகட்டத்தில், தேசிய பாதுகாப்பு ஆலோசர் அஜித் சிங் தோவலுடன் சுமூக உறவு கொண்டு மற்ற சர்வதேச நாடுகளுடன் இந்தியாவுடனான உறவை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.
ஜெய்சங்கர், PRAGATI (Pro-Active Governance And Timely Implementation) திட்டத்தின் அடிப்படையிலான கட்டமைப்பு கூட்டங்களிலும் தனது கருத்தை, மோடி முன்னிலையில் தவறாது வெளிப்படுத்திவந்தார்.

ஜெய்சங்கர், முன்னாள் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மாவின் ஊடக செயலாளராகவும் பணியாற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இத்தகைய சிறப்பம்சங்களை தன்னகத்தே கொண்ட ஜெய்சங்கரை, மோடி தலைமையிலான மத்தி் அரசு, இந்தாண்டு ஜனவரி மாதம் நாட்டின் நான்காவது உயரிய விருதான பத்மஸ்ரீயை வழங்கி கவுரவித்தது.

மத்திய வெளியுறவுத்துறை செயலர் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு டாடா குழுமத்தின் குளோபல் கார்பரேட் விவகாரத்துறையின் தலைவராக ஜெய்சங்கரை, ரத்தன் டாடா நியமித்தார். ஜெய்சங்கருக்கு தற்போது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து டாடா குழும பதவியை ராஜினாமா செய்துள்ளார் ஜெய்சங்கர்.

வெளியுறவுத்துறை செயலராக சாதித்து காட்டிய ஜெய்சங்கர், வெளியுறவுத்துறை அமைச்சர் பதவியிலும் சாதித்துக்காட்டுவார் என்ற நம்பிக்கை அனைவரிடத்திலும் ஏற்பட்டுள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Jaishankar ready to challenges under modis supervision

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X