ஜாலியன் வாலாபாக் படுகொலை உள்ளிட்ட பிரிட்டிஷார் நடத்திய அடக்குமுறைகளுக்கு தான் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக பிரிட்டனின் கேன்டர்பரி ஆர்ச்பிஷப் ஜஸ்டின் வில்பி தெரிவித்துள்ளார்.
பிரிட்டனின் கேன்டர்பரி தேவாலயத்தின் ஆர்ச் பிஷப் ஆகவும், பிரிட்டன் பார்லிமென்ட் எம்.பி.ஆகவும் இருப்பவர் ஜஸ்டின் வில்பி. இவர், அரசுமுறைப்பயணமாக இந்தியா வந்துள்ளார். பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள ஜாலியன் வாலாபாக் படுகொலை நினைவிடத்திற்கு வந்த ஆர்ச் பிஷப் ஜஸ்டின் வில்பி, அங்கு சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார். பின்னர் அழுதார்.
பின்னர் அவர் கூறியதாவது, ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவம் குறித்து தான் மிகுந்த வேதனை அடைந்தேன். இந்த படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களின் ஆத்மா சாந்தியடையும் வகையில், தாம் இறைவனை பிரார்த்திப்பதாக தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, ஒரு மதத்தலைவர் என்ற முறையில், இந்த சம்பவம் என்னை மிகவும் பாதித்துவிட்டது. இந்த நிகழ்வுகள் உள்ளிட்ட பிரிட்டிஷாரின் மற்ற அடக்குமுறைகளுக்காகவும் தான் தங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக கூறினார்.
டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் இந்த போட்டோக்களை, ஆர்ச் பிஷப் பதிவிட்டுள்ளார்.
டுவிட்டரில் அவர் தெரிவித்துள்ளதாவது, இந்த நினைவிடத்திற்கு வந்தபோது என்னால், இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் வலியை புரிந்துகொள்ள முடிந்தது. 1919ம் ஆண்டில் இந்த இடத்தில் பிரிட்டிஷ் படையினர் நடத்திய தாக்குதலில் இந்துக்கள், முஸ்லீம்கள், கிறித்தவர்கள், சீக்கியர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் பலியாயினர். இந்த சம்பவத்திற்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜாலியன் வாலாபாக் படுகொலையின் நூற்றாண்டு அனுசரிப்பு தினம் கடந்த ஏப்ரல் மாதம் அப்போதைய பிரதமர் தெரசா மே தலைமையில் அனுசரிக்கப்பட்டது. அப்போதும் இந்த விவகாரத்திற்கு கண்டனம் மற்றும் அஞ்சலி தெரிவிக்கப்பட்டதாக ஆர்ச் பிஷப் வில்பி தெரிவித்துள்ளார்.