Jammu and Kashmir acid attack victim flown to Chennai : பிப்ரவரி ஒன்றாம் தேதி அன்று ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள ஸ்ரீநகரில் வசித்து வரும் இளம்பெண் மீது ஆசிட் தாக்குதல் நடைபெற்றது. ஹவால் டவுனில் உள்ள வந்தபோரா பகுதியில் வேலையை முடித்துவிட்டு மாலையில் வீடு திரும்பிய அப்பெண் மீது இந்த கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் இரண்டு கண்களின் கார்னியாவும் பாதிக்கப்பட்டுள்ளது என்பது கண் பார்வையை திரும்பப் பெறுவதில் அவருக்கு சிக்கல் இருப்பதாக அவருக்கு சிகிச்சை அளித்த எஸ்.எம்.எச்.எஸ் மருத்துவமனை மருத்துவர்கள் கூறியுள்ளனர். மேலும் சென்னையில் உள்ள சங்கர நேத்ராலயா மருத்துவமனையில் இது போன்ற பிரச்சனைகளுக்கு சிறப்பான மருத்துவம் வழங்கப்பட்டு வருகிறது என்று அவர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.
இதனை தொடர்ந்து அப்பெண் தன்னுடைய பெற்றோர்கள் உட்பட 4 பேருடன் சென்னை வந்துள்ளார். ஸ்டெம் செல் தெரப்பி மற்றும் கண்களின் மேற்புறத்தை மீண்டும் உருவாக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில் இளம்பெண் மீது ஆசிட் தாக்குதல் நடத்திய நபர் உட்பட மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த பெண்ணிற்கு தரப்படும் சிகிச்சைக்கான செலவை ஜம்மு காஷ்மீர் நிர்வாகமே ஏற்றுக் கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நடைபெற இருந்த திருமணம் மணமகள் வீட்டாரால் ரத்து செய்யப்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த மணமகன் இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். இவருடைய உதவியாளர், இந்நபருக்கு ஆசிடை விற்பனை செய்த மெக்கானிக் ஆகியோரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தாக்குதல் நடத்திய நபருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று ஜம்மு காஷ்மீரில் பலர் குரல் எழுப்பி வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil