ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த 370 சிறப்பு அந்தஸ்து கடந்த 2019 ஆம் ஆண்டு பா.ஜ.க அரசால் நீக்கப்பட்டது. ஜம்மு மற்றும் காஷ்மீர் தனி யூனியன் பிரதேசமாகவும், லடாக் தனி யூனியன் பிரதேசமாகவும் பிரிக்கப்பட்டன.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின்னர் முதன்முறையாக அங்கு சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட்டது. மொத்தம் 90 இடங்களைக் கொண்ட ஜம்மு-காஷ்மீர் சட்டசபைக்கு செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1-ம் தேதி என மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. அக்டோபர் 8-ம் தேதி வாக்கு எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட உள்ளது.
ஜம்மு மற்றும் காஷ்மீர் சட்டமன்ற தேர்தல் 2024 தேர்தல் முடிவுகள்
இந்நிலையில், ஜம்மு மற்றும் காஷ்மீர் சட்டமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு 2024 முடிவுகள் இன்று மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைந்தவுடன், வெளியாகியுள்ளது.
ஹரியானா வாக்குப் பதிவு மாலை 6 மணியுடன் முடியும் நிலையில், முன்கூட்டியே ஜம்மு மற்றும் காஷ்மீரின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியானால் அது ஹரியானா தேர்தலிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், ஹரியானா வாக்குப் பதிவு நிறைவடைந்த பின்னரே ஜம்மு மற்றும் காஷ்மீரின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
கவனிக்கப்பட வேண்டிய வேட்பாளர்கள்
இந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க ஜம்மு - காஷ்மீர் தலைவர் ரவீந்தர் ரெய்னா, தேவேந்திர சிங் ராணா, இல்திஜா முஃப்தி, உமர் அப்துல்லா, சஜ்ஜத் கனி லோன், வஹீத் பாரா மற்றும் தாரா சந்த் ஆகியோர் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய வேட்பாளர்கள். கடந்த 2014 ஆம் ஆண்டு ஜம்மு - காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தல்களில், எந்த ஒரு முக்கிய கட்சியும் முழுப் பெரும்பான்மையைப் பெறத் தவறிவிட்டது. மெகபூபா முப்தி தலைமையிலான ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி (பி.டி.பி) 28 இடங்களைப் பெற்ற நிலையில், பா.ஜ.க 25 இடங்களைப் பெற்று மாநிலத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக இருந்தது.
ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் ஆட்சி அமைக்க 46 இடங்கள் தேவை. பி.டி.பி அல்லது பா.ஜ.க தனிப்பெரும்பான்மை பெற முடியாததால், இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து ஆட்சி செய்தது. இந்த ஆட்சி ஜூன் 19, 2018 வரை நீடித்தது. ஜூன் 19, 2018 அன்று, பிராந்தியத்தில் தீவிரவாதத்தைக் கையாள்வது உள்ளிட்ட முக்கியமான பிரச்சினைகளில் பி.டி.பி-யுடன் கூட்டணி இல்லாததைக் காரணம் காட்டி பா.ஜ.க தனது ஆதரவை வாபஸ் பெற்றதால் மாநில அரசு கவிழ்ந்தது.
இந்தக் கூட்டணி முறிந்த பிறகு, ஜம்மு - காஷ்மீர் கவர்னர் ஆட்சியின் கீழ் வந்தது. அதைத் தொடர்ந்து 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டது. மேலும், ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. ஜம்மு - காஷ்மீர் சட்டமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை என்.டி.டி.வி, இந்தியா டுடே மற்றும் ரிபப்ளிக் டிவி போன்ற முக்கிய செய்தி சேனல்களில் பார்க்கலாம். இதேபோல், இந்தியா டுடே, ஆஜ் தக், பிசினஸ் டுடே மற்றும் சமூக ஊடக தளங்களில், குறிப்பாக எக்ஸ் தளத்திலும் பார்க்கலாம்.
இதனிடையே தற்போது ஜம்மு மற்றும் காஷ்மீரின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு நிலவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
கருத்துக்கணிப்பாளர் | பா.ஜ.க | காங்கிரஸ் | பிடிபி | மற்றவை |
டைனிக் பாஸ்கர் | 20 - 25 | 35 - 40 | 4 - 7 | 12 - 16 |
இந்தியா டுடே-சி வாக்காளர் | 27 - 32 | 40 - 48 | 6 - 12 | 6 – 11 |
பீப்பிள்ஸ் பல்ஸ் | 23 - 27 | 46 - 50 | 7 – 11 | 4 - 6 |
மூன்று கருத்துக் கணிப்புகள் - டைனிக் பாஸ்கர், இந்தியா டுடே - சி வோட்டர் மற்றும் பீப்பிள்ஸ் பல்ஸ் ஆகிய கருத்துக்கணிப்புகளின் படி, காங்கிரஸ் கூட்டணிக்கு குறைந்தபட்சம் 35 இடங்கள் கிடைக்கும். பாஜக குறைந்தபட்சம் 20 இடங்கள், மற்றும் பிடிபி 4-7 இடங்களைக் கைப்பற்றும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.