ஜம்மு காஷ்மீரில் மருத்துவர் ஒருவர் சக மருத்துவரும், தோழியுமான சுமேதா ஷர்மா என்பவரைக் கொலை செய்து அதே கத்தியால் தானும் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக ஜம்மு காஷ்மீர் காவல்துறை சிறப்பு புலனாய்வுக் குழு ஒன்றை அமைத்துள்ளது.
மேலும் குற்றஞ்சாட்டப்பட்ட மருத்துவர் ஜோஹர் மெஹ்மூத் கனாய் ஆபத்தான நிலையில் மருத்துவமைனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்திற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கனாய் மற்றும் உயிரிழந்த மருத்துவர் சுமேதா ஷர்மா இருவரும் நண்பர்கள். இவர்கள் இருவரும் ஜம்முவின் புறநகர்ப் பகுதியில் உள்ள செஹோராவில் உள்ள தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் இளங்கலை (பிடிஎஸ்) படிப்பு படித்துள்ளனர். அதன்பிறகு, ஷர்மா டெல்லி சென்று படித்து முதுகலைப் பட்டம் பெற்றார். கனாய் ஜம்முவில் படித்தார்.
இந்தநிலையில் இந்த சம்பவம் செவ்வாய்கிழமை இரவு நடந்ததாக போலீசார் கூறினார். இதையடுத்து வெள்ளிக்கிழமை ஜம்முவில் பஜ்ரங் தளம் மற்றும் சில இந்துத்துவா அமைப்பு தலைவர்கள் இது "லவ் ஜிஹாத்" எனக் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஷர்மா ஜம்மு நகரின் தலாப் தில்லோ பகுதியைச் சேர்ந்தவர். கனாய் ஜானிபுராவின் பாம்போஷ் காலனியில் வசித்து வந்தார். போலீசார் கூறுகையில், இச் சம்பவம் குறித்து விசாரணை நடத்த துணை எஸ்.பி அளவிலான அதிகாரி தலைமையில் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஜானிபுரா காவல் நிலையத்தில் ஐபிசி பிரிவு 302 கீழ் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
மேலும் கூறுகையில், செவ்வாய்கிழமை ஹோலி பண்டிகை அன்று சுமேதா ஷர்மா பாம்போஷ் காலனியில் உள்ள ஜோஹர் மெஹ்மூத் கனாய் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு அவர்களுக்குள் ஏதோ தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து ஜோஹர் ஷர்மாவின் அடிவயிற்றுப் பகுதியில் பல முறை கத்தியால் குத்தியுள்ளார் என தெரிவித்தார்.
இதன் பின்னர் ஜோஹர் தனது பேஸ்புக் பக்கத்தில் தற்கொலை செய்யப் போவதாக பதிவிட்டு, ஷர்மாவை கொலை செய்யப் பயன்படுத்திய அதே கத்தியில் தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார் என்று கூறினார்.
கனாய்யின் பேஸ்புக் பதிவைக் கண்டு அவரது உறவினர் போலீசாருக்கு தகவல் அளித்ததன் பேரில் ஜனாபுரா போலீசார் அங்கு சென்று பார்த்தபோது இருவரும் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர். ஷர்மா உயிரிழந்த நிலையில், கனாய் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வெள்ளிக்கிழமை ஜம்மு காஷ்மீர் பஜ்ரங் தள் அமைப்பின் தலைவர் ராகேஷ் பஷ்ராங்கி தலைமையில் அந்த அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இது போன்ற கொலைச் சம்பவங்களைத் தடுக்கவும், ஜம்முவில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்களை மதமாற்றம் செய்வதை எதிர்த்து அரசு கடுமையான சட்டம் கொண்டு வர வேண்டும் என்றும் அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“