Shubhajit Roy
Jammu Kashmir bifurcation bill passed : 05ம் தேதி ஜம்மு – காஷ்மீர் மறு சீரமைப்பு மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதன் பின்பு 06ம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு, கடும் அமளிகள் மற்றும் சர்ச்சைகளுக்கு மத்தியில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. ஜம்மு – காஷ்மீரின் முன்னாள் முதல்வர்களான ஒமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முஃப்தி உள்ளிட்டோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பாகிஸ்தான், இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பல்வேறு முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது.
பாகிஸ்தானிற்கான இந்தியாவின் உயர் ஆணையர் (High Commissioner) திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு இஸ்லமாபாத்தில் இருந்து டெல்லிக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. புதன் கிழமை வெளியான இந்த அறிவிப்பிற்கு இந்தியா தரப்பில் இருந்து எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. காஷ்மீர் விவகாரம் முழுக்க முழுக்க உள்நாட்டு விவகாரம் என்று உலகத்தில் உள்ள அனைத்து தரப்பினருக்கும் இந்தியா தன் செயல்பாட்டின் மூலமாக அறிவித்துவிட்ட நிலையில் பாகிஸ்தானின் இந்த செயல்களுக்கு கண்டனம் அல்லது எதிர்ப்பு தெரிவித்தால் அது உலக அரங்கில் முக்கியத்துவம் பெற்றுவிடும் என்பதால் இதற்கு இதுவரை பதில் எதும் டெல்லியில் இருந்து அளிக்கப்படவில்லை.
இந்தியாவுடனான இருநாட்டு ஒப்பந்தங்கள், வர்த்தகங்களை முடித்துக் கொள்வதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. மேலும் ஐ.நாவிடம் மேல் முறையீடு செய்யவும், அந்நாட்டின் சுதந்திர தினமான ஆகஸ்ட் 14ம் தேதியை கருப்பு தினமாக அனுசரிக்கவும் முடிவுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் படிக்க : இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க
பாகிஸ்தான் எடுத்துள்ள அனைத்து முடிவுகளையும் நேரடியாக அந்நாட்டின் வெளியுறவு செயலாளர் சோஹைல் முகமது, இந்தியாவின் உயர் ஆணையர் அஜய் பிசரியாவிடம் அறிவித்துள்ளார். மேலும் இந்தியாவிற்கான பாகிஸ்தான் உயர் ஆணையராக இம்மாதத்தில் இந்தியாவிற்கு வர இருந்த மொயின் உல் ஹக்கும் இந்தியாவிற்கு அனுப்பப்படமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவுகள் அனைத்தும் பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு ஆணையக்குழு கூட்டத்தின் பரிந்துரை பெயரில் மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ராணுவ தலைமை ஜெனரல் கமார் ஜாவேத் பஜ்வா, வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி, பாதுகாப்புத்துறை அமைச்சர் பெர்வேஸ் கட்டாக், உள்துறை அமைச்சர் இஜாஸ் ஷா, புலனாய்வுத்துறை தலைவர் லெஃப்டினண்ட் ஜெனரல் ஃபைஸ் ஹமீத், வெளியுறவு செயலாளர் சோஹைல் முகமது, மற்றும் பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிஃப் கஃபூர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வரலாற்றில் இது போன்ற நிகழ்வுகள்
இந்திய பாராளுமன்றத்தில் தீவிரவாத தாக்குதல்கள் நடைபெற்ற போது, 2001ம் ஆண்டு இந்தியாவிற்கான பாகிஸ்தான் ஹை கமிஷ்னர் அஷ்ரஃப் ஜஹாங்கீர் க்வாஸி திருப்பி அழைக்கப்பட்டார். அதே போன்று பாகிஸ்தானிற்கான இந்திய ஹை கமிஷ்னர் விஜய் நம்பியாரும் திரும்பி பெறப்பட்டார். துணை நிலை ஹை கமிஷ்னர்கள் ஒரு வருடத்திற்கும் மேலாக இரு நாடுகளிலும் பதவி வகித்து வந்தனர்.
2003ம் ஆண்டு இந்தியா பாகிஸ்தானின் ஆக்டிங்க் ஹை கமிஷ்னரான ஜலில் அப்பாஸ் ஜில்லானி மீது ”ஒற்றராக பணியாற்றுகிறார்” என்ற குற்றச்சாட்டை முன்வைத்து பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டார். அப்போது இந்தியாவை சேர்ந்த சுதிர் வியாஷ் இந்தியாவிற்கு திரும்ப பெறப்பட்டார். 2003ம் ஆண்டின் பிற்பாதியில் முறையான ஹை கமிஷ்னர்கள் இரு தரப்பிலும் அமர்த்தப்பட்டனர். இந்தியாவிற்கு ஆசிஸ் அஹமது கானும், பாகிஸ்தானுக்கு சிவ்ஷங்கர் மேனனும் அனுப்பப்பட்டார்.
வர்த்தக பாதிப்பு
பாகிஸ்தான் தரப்பு, இந்தியாவின் இந்த நடவடிக்கையை கடுமையாக சாடியுள்ளது. மேலும் இந்தியா சட்டதிட்டங்களுக்கு புறம்பாக செயல்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளது. எல்லையில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் தொடர்ந்து ஈடுபடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்குமான வர்த்தகம் மிகவும் குறைவாகவே நடைபெற்று வருகிறது. அதனால் பெரிய அளவிற்கு வர்த்தகம் பாதிப்படையாது என்று பலரும் கூறி வருகின்றனர். 2 பில்லியன் முதல் 6 பில்லியன் டாலர்கள் வரை வர்த்தகம் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிப்படையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உரி தாக்குதலுக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம் பெரிய அளவில் வெற்றி கரமாக நடைபெறவில்லை. ஏற்ற இறக்கத்துடன் இருந்த வர்த்தகம் புல்வாமா தாக்குதலுக்கு பிறகு மிகவும் மோசமானது. இந்த அறிவிப்பினால் காஷ்மீரில் வாழும் மக்கள் தான் பெரும் அளவிற்கு பாதிப்பினை சந்திப்பார்கள்.
இரு தரப்பு உறவுகளும் பாதிக்கப்படும் என்பதால் சிந்து நதி ஒப்பந்தம் (Indus Waters Treaty), இரு நாடுகளுக்கும் இடையேயான அணு ஆயுத ஒப்பந்தங்கள், சிறைக்கைதிகளை வெளியிடுதல் தொடர்பாக வருடத்திற்கு 2 முறை நடைபெறும் முக்கிய சந்திப்புகளும் பிரச்சனைக்குள்ளாகலாம் என்பதை கருத்தில் கொண்டு, அதன் மீதான முடிவுகளை எடுக்க சிறப்பு குழு அமைக்கப்படும் என்றும் பாகிஸ்தான் கூறியுள்ளது.
“பாகிஸ்தானின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றோம். அவர்களின் நடவடிக்கைகள் மீது மறுசீராய்வு நடத்தி தேவையான முடிவுகளை மேற்கொள்வோம் ” என்று இந்தியா தரப்பு கூறியுள்ளது.