சிறுமிகள் வன்கொடுமை வழக்குகளில் தூக்கு தண்டனை உறுதி செய்யப்படும் : மெஹபூபா அறிவிப்பு

ஜம்மு காஷ்மீரில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கில் தூக்குத் தண்டனை உறுதி செய்யப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் மெஹபூபா மஃப்டி அறிவித்துள்ளார்.

காஷ்மீர் கத்துவா பகுதியில் 8 வயது சிறுமி ரோஜா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டது மனதை உருக்கும் சம்பவமாக அமைந்துள்ளது. ஒன்றும் அறியாத வயதில் அச்சிறுமிக்கு இந்தக் கோர மரணத்தை அளித்தவர்களுக்குக் கனவிலும் நினைக்காத அளவிற்குத் தண்டனை இருக்க வேண்டும் என்று மக்கள் கொந்தளித்துள்ளனர். ஹிந்து சமூகத்தை சார்ந்தோர் 8 பேர் அந்த சிறுமியை கோவிலின் கருவறைக்குள் வைத்து மயக்க மருந்து அளித்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதனால் அந்தச் சிறுமி மரணமடைந்தார். பின்னர் இறந்த சிறுமியின் உடலைக் காட்டுப்பகுதியில் போட்டுவிட்டு தப்பித்துச் சென்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாகக் குற்றவாளிகளுக்கு உதவிய காவலர் உட்பட 8பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருப்பதற்குக் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும், சிறுமிகளின் பாலியல் வன்கொடுமை வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை உறுதி செய்ய சட்டம் கொண்டு வரப்படும் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் மெஹபூபா தெரிவித்துள்ளார்.

மேலும், “இனியும் எந்தக் குழந்தைக்கும் இந்தச் சம்பவம் நடக்க விட மாட்டோம். சிறுமி பாலியல் வழக்கில் தூக்கு தண்டனை அளிப்போம். இது போன்ற செயல்களுக்கு ஆசிஃபா சிறுமியே கடைசியாக இருக்கட்டும்.” என்றும் தெரிவித்திருந்தார்.

தற்போது, கைதாகியுள்ளவர்களை விடுவிக்குமாறு பாஜக அமைச்சர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த விவகாரம் குறித்து அம்மாநில அரசு நாளை பாஜக-வுடன் சந்திப்பு நடத்த உள்ளது. இந்தச் சந்திப்பில், இந்தக் குற்ற வழக்கில் பாஜக-வின் பங்கு குறித்து பேச உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close