ஜம்மு - காஷ்மீர் சட்டமன்ற தொகுதிகள் வரையறை செய்வதற்கு அமைக்கப்பட்ட ஆணையம், இணை உறுப்பினர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பொது மக்களுடன் ஆலோசித்த பிறகு, 9 இடங்கள் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றில் 6 தொகுதிகள் ஜம்மு பிராந்தியத்திலும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் 3 தொகுதிகளும் அடங்கியுள்ளன.
ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கான சட்டமன்ற தொகுதிகளை மறுவரையறை செய்து ஆணையம் இறுதி அறிவிப்பை வியாழக்கிழமை வெளியிட்டது. ஆணையம் தொகுதிகளை மறுவரையறை செய்ததில் ஏழு கூடுதல் தொகுதிகளை பரிந்துரைத்துள்ளது. அதில் ஜம்முவிற்கு 6 தொகுதிகளும் மற்றும் காஷ்மீருக்கு 1 தொகுதியும் கூடுதலாக பரிந்துரைத்துள்ளது. இது ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் மொத்த சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை 83 இல் இருந்து 90 ஆக உயர்த்தியுள்ளது. இது ஜம்மு பகுதியில் முன்பு இருந்த 37 தொகுதிகளை 43 தொகுதிகளாகவும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் முன்பு இருந்த 46 தொகுதிகள் 47 ஆகவும் அதிகரித்துள்ளது.
ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையிலான தொகுதி மறுவரை செய்யும் நிர்ணயக் குழுவின் உத்தரவில் உள்ள மூன்று முக்கிய அம்சங்கள்: i) நாடாளுமன்றத் தொகுதிகளை மறுசீரமைத்தல், அதாவது இப்போது உள்ள ஐந்து மக்களவைத் தொகுதிகளும் ஒவ்வொன்றும் சரியாக 18 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டவையாக உள்ளது. இப்போது மொத்த சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை 90 ஆக உள்ளது. ii) பழங்குடியினருக்கு 9 சட்டமன்ற இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன - ஜம்முவில் 6 இடங்களும் மற்றும் காஷ்மீரில் 3 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. iii) ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு இடையிலான பிராந்திய வேறுபாட்டை நீக்கி, அதை ஒன்றாகக் கருதுவது. காஷ்மீரில் உள்ள அனந்த்நாக் பகுதியை ஜம்முவில் உள்ள ரஜோரி மற்றும் பூஞ்ச் உடன் இணைத்து அனந்த்நாக்-ரஜோரியை நாடாளுமன்றத் தொகுதியாக மாற்றியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தொகுதிகள் மறுவரையறை ஆணையத்தின் உத்தரவு குறித்த அறிவிப்பு இந்திய அரசிதழில் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. நீதிபதி தேசாய் தவிர, மற்ற இரண்டு உறுப்பினர்களாக தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா மற்றும் ஜம்மு காஷ்மீர் தலைமை தேர்தல் அதிகாரி கே.கே.சர்மா ஆகியோர் கையெழுத்திட்டனர். லோக்சபா சபாநாயகரால் இணை உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்ட ஜம்மு காஷ்மீரில் இருந்து 5 லோக்சபா எம்.பி.க்களுடன் சேர்ந்து ஆணையம் வேலை செய்தது. அவர்களில் தேசிய மாநாட்டு கட்சி எம்.பி.க்கள் பரூக் அப்துல்லா, முகமது அக்பர் லோன் மற்றும் ஹஸ்னைன் மசூதி, பிரதமர் அலுவலகத்தில் இருந்து மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் மற்றும் பாஜகவின் ஜுகல் கிஷோர் சர்மா ஆகியோர் இருந்தனர்.
இந்த குழுவின் முடிவுகள் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள முக்கிய கட்சிகள் மத்தியில் விமர்சனத்தை சந்தித்துள்ளன. காஷ்மீர் பள்ளத்தாக்குடன் ஒப்பிடும்போது ஜம்மு பகுதி மக்கள்தொகையுடன் ஒப்பிடும்போது அதிக இடங்களைப் பெற்றுள்ளது. மேலும், இது மக்கள்தொகை அளவுகோலை மீறுகிறது என்பது இந்தக் கட்சிகளின் முக்கிய விவாதமாக உள்ளது.
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் இடங்கள் வழங்கப்படுவதால், 44 சதவீத மக்கள்தொகை கொண்ட ஜம்முவில் 48 சதவீத இடங்களும், 56 சதவீத மக்கள்தொகை கொண்ட காஷ்மீரில் 52 சதவீத இடங்களும் மட்டுமே கிடைக்கும். முன்னதாக, காஷ்மீர் பகுதியில் 55.4 சதவீத இடங்களும், ஜம்முவில் 44.5 சதவீத இடங்களும் இருந்தன.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"