காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து: அதிர்வுகளை உருவாக்கிய பரபரப்பு நிகழ்வுகளின் தொகுப்பு

Jammu and Kashmir Crisis Updates: ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதங்கள் குறித்த அனைத்து தகவல்களையும் நீங்கள் இங்கே படிக்கலாம்!

By: Aug 6, 2019, 12:06:36 PM

Jammu and Kashmir Today Latest News Updates: 05/08/2019 அன்று காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து கொண்ட 35 ஏ மற்றும் 370 என்ற அரசியல் சட்டமைப்பில் திருத்தம் செய்யப்படுவதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா மாநிலங்களவையில் அறிவித்தார். இவரது அறிவிப்பின்போது எதிர்கட்சியினர் பெரும் கோஷங்கள் எழுப்பினர். இதற்கான முடிவு மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்

காஷ்மீருக்கான 4 சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்படும் என்றும் மேலும் கூறினார்.ஜனாதிபதி கையொப்பம் இட்ட பின்னர் இது அமலுக்கு வரும். இந்த சட்டம் கொண்டு வருவதால் அனைத்து சிறப்பு அந்தஸ்தையும் காஷ்மீர் இழக்கிறது. மேலும் பார்லி.,யில் இயற்றும் சட்டங்களுக்கு காஷ்மீர் கட்டுப்பட வேண்டிய அவசியத்திற்கு வருகிறது. மாநிலத்திற்கான தனி சட்டம் இனி செல்லுபடியாகாது.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 மற்றும் 35 ஏ ஆகிய சட்டப்பிரிவில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் இனி மாநிலமாக இருக்காது. அதற்கு பதில் சட்டசபை உள்ள யூனியன் பிரதேசமாக மாற்றப்படும்.லடாக், காஷ்மீரில் இருந்து பிரிக்கப்பட்டு சட்டசபை இல்லாத யூனியன் பிரதேசமாக மாற்றப்படும் உள்ளிட்ட அறிவிப்புகளை அமித் ஷா வெளியிட்டார்.

Live Blog
Jammu and kashmir news today updates Breaking : ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவிவருவதால், அங்கு நடைபெறும் ஒவ்வொரு நிகழ்வுகள் , பரபரப்பு சம்பவங்கள் என அனைத்தையும் இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
21:34 (IST)05 Aug 2019
மெஹ்பூபா முஃப்தி மற்றும் ஒமர் அப்துல்லா கைது

முன்னாள் ஜம்மு-காஷ்மீர் முதல்வர்கள் மெஹ்பூபா முஃப்தி மற்றும் ஒமர் அப்துல்லா கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், தலைவர்கள் சஜ்ஜத் லோன் மற்றும் இம்ரான் அன்சாரி ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.

19:33 (IST)05 Aug 2019
ஜம்மு காஷ்மீரின் மறு சீரமைப்பு மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்

ஜம்மு காஷ்மீரின் மறு சீரமைப்பு மசோதா மாநிலங்களவையில் திங்கட்கிழமை நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை, லடாக் மற்றும் ஜம்மு & காஷ்மீர் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்க வழிவகை செய்கிறது. தொடர்ந்து, மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது.

18:56 (IST)05 Aug 2019
ஒத்துவரவில்லை என்றால் மீண்டும் பழைய முறை - அமித் ஷா

"சட்டப்பிரிவு 370ல் சட்டதிருத்தம் மேற்கொள்வதன் மூலம், மூலம் வேலை வாய்ப்பு அதிகமாகும். இது ஒரு பரீட்சை தான், ஒத்து வரவில்லை என்றால், மீண்டும் காஷ்மீர் மாநிலமாக்கப்படும்" என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

17:45 (IST)05 Aug 2019
370 சட்டப்பிரிவு குறித்து குலாம் நபி ஆசாத்

370 சட்டப்பிரிவு குறித்து பேசிய காங்கிரஸ் மூத்தத் தலைவர் குலாம் நபி ஆசாத் " உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசிய போது பாராளுமன்றத்தில் அணுகுண்டு வெடித்தது போல் உணர்ந்தேன். யூனியன் பிரதேசங்களாக ஜம்மு காஷ்மீர் பிரிக்கப்பட்டிருப்பதால், அம்மாநிலம் இந்திய வரைபடத்தில் இருந்து பிரிக்கப்பட்டதைப் போலாகிவிட்டது" என்று தெரிவித்துள்ளார்.

16:54 (IST)05 Aug 2019
இன்று ஒரு கருப்பு தினம் - ப.சிதம்பரம்

பாராளுமன்றத்தில் பேசிய ப.சிதம்பரம், "இது மிகவும் வருத்தத்திற்குரிய நாள். இந்திய அரசியலமைப்பு வரலாற்றில், இது ஒரு கருப்பு தினம்" என்றார். மேலும், "பாராளுமன்றத்தில் இன்று மாபெரும் தவறான முடிவு எடுக்கப்பட்டிருப்பதை எதிர்கால சந்ததியினர் உணரும் போது, வரலாறு உங்களின் முடிவு பிழையானது என்பதை உங்களுக்கு நிரூபிக்கும்" என்று தெரிவித்திருக்கிறார்.

15:57 (IST)05 Aug 2019
சந்திரப்பாபு நாயுடு ஆதரவு!

370 பிரிவு ரத்துக்கு ஆந்திரா முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது ஆதரவினை தெரிவித்துள்ளார். இதுக் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள  கருத்தில், அரசாங்கத்தின் இந்த முடிவை எங்கள் கட்சி வரவேற்கிறது. இனியாவது  ஜம்மு காஷ்மீரில் அமைதி நிலவட்டும். 

15:53 (IST)05 Aug 2019
முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா!

"இந்திய அரசு இன்று எடுத்துள்ள தன்னிச்சையான முடிவு, ஜம்மூ காஷ்மீர் மக்கள் இந்திய அரசு மீது வைத்திருந்த நம்பிக்கையைத் தகர்த்துவிட்டது. அந்த நம்பிக்கையினால்தான் 1947 ஆம் ஆண்டு காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. இந்த முடிவு எதிர்பார்க்க முடியாத மிகவும் ஆபத்தான விளைவுகளைக் கொடுக்கும். இது மாநில மக்களுக்கு எதிரான வன்முறையே ஆகும்"  என்று  முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா அறிக்கை வெளியிட்டுள்ளார். 

15:10 (IST)05 Aug 2019
மு.க ஸ்டாலின் கண்டனம்!

ஜம்மு-காஷ்மீர் மக்களின் ஒப்புதலை பெறாமல் சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்து ஜனநாயகப் படுகொலையை அரங்கேற்றி விட்டனர்  என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார், 

15:09 (IST)05 Aug 2019
கறுப்பு நாள்!

இன்றைய நாள் இந்திய ஜனநாயகத்தின் கருப்பு நாள்  என்றும்,  ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனத்தின் 370 பிரிவு நீக்கம் செய்யப்பட்டதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று    மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார். 

15:06 (IST)05 Aug 2019
கெஜ்ரிவால் ஆதரவு!

ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு டெல்லி முதல்வர் அரவிந்த் ஜெக்ரிவால் ஆதரவு கருத்தினை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

14:42 (IST)05 Aug 2019
குலாம் நபி ஆசாத் கண்டனம்

"அரசியல் ஓட்டுக்காக Article 370-ஐ இந்த அரசு ரத்து செய்கிறது" என்று காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் பாராளுமன்ற வளாகம் வெளியில் தெரிவித்தார் .

14:36 (IST)05 Aug 2019
ஜம்மு அண்ட் காஷ்மீர் மறுசீரமைப்பு சட்ட மசோதா நாளை லோக் சபாவில்

இன்று ராஜ்ய சபாவில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்ப்பாக்க கூடிய  ஜம்மு அண்ட் காஷ்மீர் மறுசீரமைப்பு சட்ட மசோதா நாளை லோக் சபாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.  

14:17 (IST)05 Aug 2019
காஷ்மீர் மக்களின் உணர்வுகளோடு விளையாடாதீர்கள்

"அங்கு கூடுதல் ராணுவம் நிறுத்தப்பட்டபோதே நான் கவலைப்பட்டேன் . காஷ்மீர் மக்களின் உணர்வுகளோடு நீங்கள் விளையாடியுள்ளீர்கள் . நமது காஷ்மீர் இன்னொரு கொசோவோ, கிழக்கு திமோர் மற்றும் தெற்கு சூடான் போல் மாறக்கூடாது", என்று வைகோ ராஜ்யசபாவில் தெரிவித்தார்.

13:57 (IST)05 Aug 2019
மக்களவை மதியம் இரண்டு மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

பி ஜே பி-யின் கூட்டணி கட்சியான   (ஜேடியு), Article 370-வைத் திரும்ப பெரும் சட்ட மசோதாவை ஆதரிக்காது என்று அக்கட்சியின் மூத்த தலைவரான  கே சி தியாகி தெரிவித்துள்ளார்.  

13:06 (IST)05 Aug 2019
370வது பிரிவு திருத்தம்– பகுஜன் சமாஜ் வரவேற்பு

370 பிரிவு திருத்தம் செய்யப்பட்டதற்கு பாரதிய ஜனதா, சிவசேனா, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.வரலாற்றுப்பிழை திருத்தம் : 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டுள்ளதன் மூலம், நாட்டின் வரலாற்றுப்பிழையை மோடி தலைமையிலான அரசு  திருத்தி உள்ளதாக பா.ஜ. வின் முன்னாள் அமைச்சர் ராஜ்வர்தன் சிங் ரதோர் தெரிவித்துள்ளார்.சிவசேனா கருத்து : 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டுள்ளதன் மூலம், இந்தியாவுடன் ஜம்மு காஷ்மீர் மாநிலம் தற்போது தான் உண்மையாக இணைந்துள்ளதாக சிவசேனா கட்சியின் ஆதித்ய தாக்ரே தெரிவித்துள்ளார்.பகுஜன் வரவேற்பு : 370 வது பிரிவு நீக்கப்பட்டுள்ளதற்கு பகுஜன் சமாஜ் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது.  இந்த மசோதாவிற்கு தங்கள் கட்சி முழு ஆதரவு அளிக்கும். 370வது பிரிவு மற்றும் அதுதொடர்பான மசோதாக்களுக்கு பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு அளிக்கும் என்று எம்.பி, சதீஷ் சந்திர மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

12:59 (IST)05 Aug 2019
370வது பிரிவு திருத்தம்: காங்கிரஸ் கண்டனம்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் இந்திய அரசியலமைப்பின் 370வது பிரிவு திருத்தம் செய்யப்பட்டதற்கு காங்கிரஸ், பிடிபி உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், பகுஜன் சமாஜ், சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன.இந்திய ஜனநாயகத்தின் கறுப்பு நாள் : 370வது பிரிவு நீக்கப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி, இந்திய ஜனநாயகத்தின் கறுப்பு நாள் என தெரிவித்துள்ளார்.370வது பிரிவை ரத்து செய்ததற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த நிகழ்வின் மூலம், பாரதிய ஜனதா, இந்திய அரசியலமைப்பையே படுகொலை செய்துள்ளதாக குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

12:15 (IST)05 Aug 2019
ஜம்மு காஷ்மீர் பிரிப்பு ஏன் – அமித் ஷா விளக்கம்

காஷ்மீர் பிரிக்கப்படுவது தொடர்பாக மத்திய அரசின் பரிந்துரைக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இந்நிலையில் காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்டது ஏன் என அமித்ஷா விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், மக்கள் தொகை குறைந்த, செல்வதற்கு கடினமான பெரிய பகுதி லடாக் என்பதால் அதை கையாள்வதும் கடினமானது. யூனியன் பிரதேச அந்தஸ்து வழங்க வேண்டும் என்பது லடாக் மக்களின் நீண்ட கால கோரிக்கை. மக்களின் விருப்பத்தையும், நீண்ட கால கோரிக்கையையும் நிறைவேற்றும் விதமாக லடாக் சட்டசபை இல்லாத யூனியன் பிரதேசமாக மாற்றப்பட உள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காகவும், காஷ்மீரில் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காகவும் காஷ்மீர் தனி யூனியன் பிரதேசமாக்கப்பட உள்ளது. சட்டசபை உள்ள யூனியன் பிரதேசமாக காஷ்மீர் செயல்படும். இவ்வாறு அமித்ஷா அளித்துள்ள விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

12:12 (IST)05 Aug 2019
அமித்ஷா வெளியிட்ட 3 அறிவிப்புக்கள்

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 மற்றும் 35 ஏ ஆகிய சட்டப்பிரிவுகள் ரத்து.

ஜம்மு காஷ்மீர் இனி மாநிலமாக இருக்காது. அதற்கு பதில் சட்டசபை உள்ள யூனியன் பிரதேசமாக மாற்றப்படும்.

லடாக், காஷ்மீரில் இருந்து பிரிக்கப்பட்டு சட்டசபை இல்லாத யூனியன் பிரதேசமாக மாற்றப்படும்.

12:09 (IST)05 Aug 2019
370 வது பிரிவு திருத்தம்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படுவதற்காக அமலில் இருந்த 370வது சட்டப்பிரிவு திருத்தம் செய்யப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார். இதனையடுத்து, ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

12:03 (IST)05 Aug 2019
இரண்டு யூனியன் பிரதேசங்கள் ஆக பிரிகின்றது ஜம்மு காஷ்மீர்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் 2 யூனியன் பிரதேசங்கள் ஆக பிரிக்கப்படுகின்றன. அதன்படி, ஜம்மு - காஷ்மீர் ஒரு யூனியன் பிரதேசமாகவும், லடாக ஒரு யூனியன் பிரதேசம் ஆகவும் பிரிக்கப்படுகின்றன. இதில் லடாக் யூனியன் பிரதேசத்திற்கு சட்டசபை வரையறுக்கப்படவில்லை.

11:45 (IST)05 Aug 2019
காஷ்மீரில் 370வது பிரிவில் திருத்தம் செய்வதற்கான தீர்மானத்தை முன்மொழிந்தார் அமித் ஷா

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370வது பிரிவில் திருத்தம் செய்வதற்கான தீர்மானத்தை ராஜ்யசபாவில், உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்துள்ளார். அதுதொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. 

11:16 (IST)05 Aug 2019
காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஒத்திவைப்பு தீர்மானம் - எதிர்க்கட்சிகள் கோரிக்கை

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. நாட்டின் எல்லை மாநிலமான காஷ்மீரில் அசாதாரண சூழ்நிலை நிலவிவருகிறது. அங்கு என்ன நிகழ்கிறது, என்ன நிகழப்போகிறது என்பதை அனைவரும் தெரிந்துகொள்வது அவசியமான ஒன்று. காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவர காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, திரிணமூல் காங்கிரஸ், இந்திய மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

10:33 (IST)05 Aug 2019
ஸ்ரீநகரில் கலவர தடுப்பு வாகனங்கள் அதிகளவில் நிறுத்தம்

பாகிஸ்தானை ஒட்டிய சர்வதேச எல்லைக்கோடு பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்ரீநகருக்கு நுழையும் மற்றும் வெளியேறும் பகுதிகளில் அதிகளவிலான தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. கலவர தடுப்பு வாகனங்கள் அதிகளவில் குவிக்கப்பட்டு வருவதால் அங்கு பெரும்பரபரப்பு நிலவி வருகிறது.

10:06 (IST)05 Aug 2019
காஷ்மீர் விவகாரத்தை உலகமே பார்த்து கொண்டிருக்கிறது – முப்தி

ஜம்மு காஷ்மீரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளையும், அமைதிக்காக போராடும் தலைவர்களையும் மத்திய அரசு வீட்டுக்காவலில் அடைத்து வைத்துள்ளது. இந்த விவகாரத்தை உலகமே பார்த்துக்கொண்டு தான் இருக்கிறது.  அவர்கள் அனைவரும் காஷ்மீருக்காக விரைவில் குரல் கொடுப்பார்கள். இந்தியா விழித்து எழத்தான் போகிறது என்று வீட்டுக்காவலில் அடைக்கப்படுவதற்கு முன், முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி  டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

09:32 (IST)05 Aug 2019
லடாக் பகுதியில் 144 தடை உத்தரவு இல்லை

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அங்கு மக்களின் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், லடாக் பகுதியில் இயலபு வாழ்க்கையில் எவ்வித பாதிப்புமில்லை. லடாக் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்குவதாக ஏஎன்ஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

09:23 (IST)05 Aug 2019
மக்கள் அமைதி காக்கவும் – முன்னாள் முதல்வர் ஓமர் அப்துல்லா

மக்கள் பாதுகாப்பாக இருக்க வலியுறுத்தியுள்ள முன்னாள் முதல்வர் ஓமர் அப்துல்லா, அமைதி காக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருவதன் காரணமாக, முன்னாள் முதல்வர்கள் ஓமர் அப்துல்லா, முப்தி முகமது சயீத் உள்ளிட்ட தலைவர்கள், நள்ளிரவு முதல் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். வீட்டுக்காவலில் வைக்கப்படுவதற்கு முன், ஓமர் அப்துல்லா தெரிவித்துள்ளதாவது,  தற்போது மாநிலத்தில் என்ன நடக்கிறது என்பதை யூகிக்க முடியவில்லை.  அல்லா நம்மை காப்பாற்றுவார் என்பதில் உறுதியுடன் இருப்போம்.  மக்கள் அமைதியாக இருக்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

08:50 (IST)05 Aug 2019
வீட்டுக்காவலில் முப்தி, ஓமர் - சிதம்பரம் கண்டனம்

ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர்களான ஓமர் அப்துல்லா  மற்றும் மெகபூபா முப்தி  வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதற்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான சிதம்பரம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளதாவது,  காஷ்மீர் மாநிலத்தில் ஏதோ ஒரு அசம்பாவிதம் நிகழப்போகிறது என்று நான் முன்கூட்டியே எச்சரித்திருந்தேன். அது தற்போது நடந்துவிட்டது. ஜம்மு காஷ்மீர் மாநில தலைவர்கள் வீட்டுக்காவலில் வைப்பதன் மூலம், மத்திய அரசு நினைத்ததை சாதிக்க துவங்கிவிட்டது.  தலைவர்கள் வீட்டுக்காவில் வைக்கப்பட்டுள்ள நிகழ்வு கண்டனத்திற்குரியது என்று அவர் தெரிவித்துள்ளார்.

08:35 (IST)05 Aug 2019
பள்ளிகளுக்கு காலவரையற்ற விடுமுறை

காஷ்மீரில் அசாதாரண சூழ்நிலை நிலவிவருவதால் பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்ளுக்கு அடுத்த அறிவிப்பு வரும்வரை திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.  மாநிலத்தில் இணையதள சேவை நிறுத்தப்பட்டுள்ள நிலையில், மொபைல் இன்டர்நெட் சேவையும் நிறுத்தப்பட்டுள்ளதாக ஜம்மு ஐ.ஜி. முகேஷ் சிங் தெரிவித்துள்ளார்.

08:32 (IST)05 Aug 2019
ஸ்ரீநகரில் 144 தடை உத்தரவு

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் உள்ளிட்ட பலபகுதிகளில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இணையதள சேவை நிறுத்தப்பட்டுள்ளது. மாநிலத்தின் முன்னாள் முதல்வர்களாக ஓமர் அப்துல்லா, மெகபூபா முப்தி  உள்ளிட்டோர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Web Title:Jammu kashmir live updates section 144 srinagar omar abdullah mehbooba mufti

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
இதைப் பாருங்க!
X